வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (26/06/2017)

கடைசி தொடர்பு:15:15 (26/06/2017)

புனே உடன்படிக்கைக்கும் தி நகர் பகுதிக்கும் என்ன தொடர்பு? அங்காடித் தெருவின் கதை - 8

அங்காடித் தெரு

தி நகர், ரங்கநாதன் தெருவையும் விட்டு, ஒரு மாற்றத்துக்காக புனே வரை சென்று வரலாம். வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படும் புனே ஒப்பந்தத்துக்கும் தி.நகருக்கும் நெருக்கமான ஒரு முக்கியத் தொடர்பிருக்கிறது. 

ஹரிஜன் சேவா சங்கம்

தலித்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், அந்தத் தொகுதியில் போட்டியிடும் தலித் வேட்பாளரை, தொகுதியில் உள்ள தலித்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த நாளில் அம்பேத்கர், ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

1932-ம் ஆண்டு லண்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில், இது குறித்து விவாதிக்கப்பட்டது. அம்பேத்கரின் கோரிக்கையை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இதற்கு மகாத்மா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தலித்களுக்குத் தனித் தொகுதி இருக்கலாம். ஆனால், அந்தத் தொகுதியில் அனைத்து பிரிவினரும் ஓட்டுப்போட்டுத்தான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வழி செய்யவேண்டும் என்று  வலியுறுத்தினார். கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப்  போராட்டம் தொடங்கினார் காந்தி. எனவே, கைது செய்யப்பட்ட அவர், புனே எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மகாத்மாவின் யோசனையை அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக புனே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர்தான் மகாத்மா காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் ஹரிஜன் சேவா சங்கம் தொடங்க வேண்டும் என்று கூறினார்.

அதன்படிதான், தமிழ்நாட்டில் சென்னை கோடம்பாக்கத்தில் (இன்றைக்கு மீனாட்சி கல்லூரி இருக்கும் இடத்தில்) ஹரிஜன் சேவா சங்கம் தொடங்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் சார்பில் தொழிற்கல்வியுடன் கூடிய படிப்புகள் வழங்கப்பட்டன.பின்னர் இந்தச் சங்கம் தி.நகருக்கு இடம் பெயர்ந்தது.

தி நகர் தக்கர் பாபா வித்யாலயா

கரண்டி பிடித்த காந்தி

தி. நகர் வெங்கட்நாராயணா தெருவிலுள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தை ஹரிஜன் சேவாசங்கம் விலை கொடுத்து வாங்கியது. தொழிற் பயிற்சி நிலையத்துக்குப் பெருமளவு நன்கொடை கொடுக்க விரும்புவதாகவும், தமது பெயரை வைக்கவேண்டும் என்றும் பிரபல தொழிலதிபர் கேட்டுக்கொண்டார். ஆனால், காந்தி அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் தக்கர் பாபா என்பவரது பெயரை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்றைக்கு தி. நகர் பகுதியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தக்கர் பாபா வித்யாலயா அமைக்கப்பட்டதன் வரலாறு இதுதான். தக்கர் பாபா வித்யாலயாவின் செயலாளர் பி.மாருதியிடம் பேசினோம். "காந்தி 1946-ம் ஆண்டு தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக சென்னை வந்தார். அப்போதுதான் (1946-ம் ஆண்டு  பிப்ரவரி 1-ம் தேதி )தக்கர் பாபா வித்யாலயாவுக்குக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவில் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பயன்படுத்திய கரண்டியை இன்னும் நாங்கள் பத்திரமாக வைத்திருக்கிறோம்.

காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தொழிற்கல்வி பயின்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்றைக்கு அனைத்துப் பிரிவு மாணவர்களும் இங்கு தொழிற் கல்வி பயின்று வருகின்றனர். அறிவு, திறன் ஆகியவற்றுக்கான கல்வி மட்டுமன்றி இன்றைய சமூகத்துக்குத் தேவையான நீதிபோதனைகளும் கற்றுத்தரப்படுகின்றன. தி.நகரில் உள்ள இவ்வளவு பெரிய இடத்தை வாங்கி, வணிகக் கட்டடங்கள் கட்டவேண்டும் என்று பல்வேறு தரப்பில் எங்களுக்கு அழுத்தங்கள் வந்தன. ஆனால், அந்த அழுத்தங்களுக்கு நாங்கள் பலியாகவில்லை. காந்தியின் கனவைத் தொடரவே விரும்புகிறோம்" என்றார்.

மதுரையைச் சேர்ந்த பிரபல சுதந்திரப் போராட்ட தியாகி வைத்தியநாத ஐயரின் மாப்பிள்ளை தாணு நாதன் என்பவர்தான், தக்கர் பாபா வித்யாலயாவின் செயலாளராக இருந்தவர். இப்போது அவர் கெளரவ ஆலோசகராக இருக்கிறார். தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் தங்கி இருக்கிறார். 94 வயதாகும் இவரைச் சந்தித்தோம். "நான் ரயில்வே துறையில் மதுரையில் பணியாற்றிய சமயத்தில் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பது குறித்து பெரும் சர்ச்சை இருந்தது. அதுவரை கருத்துத் தெரிவித்த காந்தி, "தாழ்த்தப்பட்டவர்களைக் கோயில்களுக்குள் அனுமதிக்கும் வரை நானும் கோயில்களுக்குள் நுழைய மாட்டேன்" என்றும் சொல்லி வந்தார். அப்போது என் மாமனார் வைத்தியநாத ஐயர், காந்தியின் கோரிக்கைபடி தலித்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். மேலும் இதை மகாத்மா காந்தியிடம் சொன்னார். அதன் பின்னர், தமிழகம் வந்த காந்தி முதலில் சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் வருகை தந்தார். காந்தியின் வழியைப் பின்பற்றி நான் ரயில்வேயிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 1991-ம் ஆண்டிலிருந்து 2014- வரை தக்கர் பாபா வித்யாலயாவின் செயலாளராக இருந்தேன்" என்றார்.

பிரதமரை உருவாக்கும் கிங் மேக்கராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். அவர் சென்னையில் இருந்த காலத்தில் தி நகர் பகுதியில் வசித்து வந்தார். தி.நகருக்கும், அவருக்குமான தொடர்புகள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...


தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்