வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (27/06/2017)

கடைசி தொடர்பு:09:13 (28/06/2017)

"எத்தனை பேரை பலிகொடுத்தால் ஆதிதிராவிட மாணவர் விடுதியை சரி செய்வீர்கள்?"- கொதிக்கும் பெற்றோர்கள்

அரவிந்த் - மாணவன்

வ்வொரு விபத்திலும் பல உயிர்களை இழந்த பிறகுதான் அதைப்பற்றி அரசு பேசுகிறது... நாமும் சமூக வலைத்தளங்களில் கொதிக்கிறோம்.... விவாதிக்கிறோம்! கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் தொடங்கி,பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து இறந்துபோன ஸ்ருதிவரை இதே நிலைதான் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதே மாதிரியான சம்பவம் ஒன்று விழுப்புரம் அருகே நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையம் கோமுகி அணையருகே இயங்கிவரும் ஆதிராவிட மற்றும் பழங்குடியினப் பள்ளியில் படித்துவந்த மாணவர்கள் சூர்யா, அரவிந்த். 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி வசதியும் உள்ளது. அதன் காரணமாக, அந்தப் பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோமுகி அணைக்குக் குளிக்கச் சென்ற அரவிந்தும் சூர்யாவும் புதைமணலில் சிக்கியுள்ளனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்து ஓடிவந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். அதில், அரவிந்த் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சூர்யா, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். ''மாணவர்கள் விபத்தில் சிக்கியதற்குப் பள்ளித் தலைமையும் அரசு அதிகாரிகளும்தான் காரணம்'' எனக் கூறி தற்போது பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.' நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கும் இந்தப் பள்ளியின் விடுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை' என்பது பெற்றோர்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டாகும்.

அரசுபள்ளி விடுதி

''எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க வேண்டும்?'' 

இதுகுறித்து உயிரிழந்த அரவிந்தின் உறவினரான ஆனந்த மூர்த்தி பேசியபோது,''என்னுடைய அக்கா லட்சுமியின் மகன் அரவிந்த். அக்காவும் - மாமா ராம்ராஜும் விவசாயம் செய்துவருகிறார்கள். மிகவும் வறுமையான குடும்பம். அதன் காரணமாகவே அரவிந்தை விடுதியில் சேர்த்துப் படிக்கவைத்து வந்தோம். பள்ளியின் விடுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அதனால்தான் இருவரும் அணைக்குக் குளிக்கப் போயிருக்கின்றனர். அப்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி பலமுறை போராடிவிட்டோம். ஆனால், பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. குளிக்க வசதியில்லாத காரணத்தால் அந்த அணைக்குக் குளிக்கப்போய் ஆறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தால் விடுதியை மேம்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை'' என்றார் கண்ணீருடன். 

 பாதிக்கப்பட்ட பெற்றோர்

யாரைவைத்து இதனை சரிபடுத்துவது தெரியல...

''மாணவன் உயிரிழப்புச் சம்பவத்தை, அந்தப் பகுதியிலுள்ள அரசு அதிகாரிகள் மூடி மறைக்க முயல்கின்றனர்'' எனக் குற்றம்சாட்டுகிறார் விடுதலைச் சிறுதைகள் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நெப்போலியன்.''அந்த மாணவன் உயிரிழக்க, ஒட்டுமொத்தமாகப் பள்ளியின் கட்டமைப்புதான் காரணம். விடுதியில் தண்ணீர் வசதி சுத்தமாக இல்லை. முள்புதராகப் பாழடைந்து காணப்படுகிறது. இந்த ஒரு விடுதி மட்டுமல்ல, தமிழகத்தில் ஆதி திராவிட உண்டுஉறைவிடப் பள்ளிகள் உள்ள அனைத்து விடுதிகளுமே மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றன. ஆதி திராவிட நலத்துறையின்கீழ் தமிழகத்தில் மொத்தம் 1,304 விடுதிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 21 விடுதிகள் இயங்கிவருகின்றன.

மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் கிராமப்புற மற்றும் ஏழை,எளிய குடும்பங்களில் இருந்து சுமார் 63 ஆயிரத்து 817 மாணவர்கள் இந்த விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். ஏழை மாணவர்கள் தங்கும் இந்த விடுதிகளில்மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மற்றத்துறை அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தொடரும் இந்த அவலத்தை யாரைவைத்துச் சரிபடுத்துவது என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது'' என்றார் கவலையுடன்.
 

திருத்திக்கொள்ள உயிர்தான் விலையா என்பதற்கு அரசுதான் பதில் சொல்லவேண்டும் ..!


டிரெண்டிங் @ விகடன்