அமெரிக்காவில் ஒரு மிஸ்டர் பாரத் கதை..! #StartUpBasics அத்தியாயம் 14 | Story of oracle founder larry ellison

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (27/06/2017)

கடைசி தொடர்பு:19:22 (27/06/2017)

அமெரிக்காவில் ஒரு மிஸ்டர் பாரத் கதை..! #StartUpBasics அத்தியாயம் 14

ஆரக்கிள்

1980 களில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படத்தைப் போல நம்பமுடியாத கதை அவருடையது. ஒரு யூத இளம்பெண் அமெரிக்க போர்விமானியின் காதலில் விழுகிறார். காதல் அவள் வயிற்றில் ஒரு குழந்தையைக் கொடுக்கிறது. காதலன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடுகிறான். அவள் மிக இளம்வயதில் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவளால் அந்தக் குழந்தையைப் பேணிகாக்க முடியவில்லை. குழந்தைக்கு நிமோனியா தாக்குகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் ஒன்பது மாதக்குழந்தையைக் குழந்தைபேறு இல்லாத உறவுக்கார தம்பதிகளிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். 

அதன்பிறகு அந்தத் தம்பதிகள் நியூயார்க்கில் இருந்து சிகாகோவிற்குச் செல்கிறார்கள். சவுத்சோர் என்ற அந்தப்பகுதி நகரிலிருந்து தள்ளியிருக்கும். ஏழைகளும் நடுத்தரமக்களும் மட்டுமே வாழும் மிகவும் பின்தங்கிய பகுதி. அன்று அடித்தட்டு மக்களுக்கே உரிய அனைத்து பிரச்னைகளும் அவர்களுக்கும் இருந்திருக்கிறது. தாய் மிகவும் அன்பானவர்தான். ஆனால் அந்த வளர்ப்புத்தந்தை மிகவும் கண்டிப்பானவர். மேலும் அவரின் பொருளாதாரப் போராட்டத்தில் அந்தக் குழந்தையை அவர் கவனிக்கவே இல்லை. ஆனால் வளர்ந்து பெரிய ஆளான பின் அந்தக் குழந்தை தன் தந்தைக்கு நல்லப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தான். ஆம் அவரைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டான். தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் வளர்ப்புத்தந்தையின் பெயரை உலகமெல்லாம் உச்சரிக்க வைத்தான்.

லாரி எல்லிசன் (Larry Ellison). ஆரக்கிள் நிறுவனத்தை உருவாக்கிய அவரின் கதை கடும்பாதைகளில்தான் பயணப்பட்டிருக்கிறது. எல்லிசனின் துணை புத்தகங்கள்தாம். அவை அவரிடம் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளால்தான் அவரது பாதையைக் கட்டமைத்துக் கொண்டார். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். இரண்டாம் வருடம் படிக்கும்போது அவரது ஒரே நம்பிக்கையான அவரது வளர்ப்புத்தாய் காலமாகிவிட்டார். இருபது வயதுகூட தாண்டாத இளம் வயது. அந்த வருடம் அவரால் தேர்வினை எழுதமுடியவில்லை. படிப்பைப் பாதியில் கைவிடுகிறார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி வடக்குக் கலிபோர்னியா சென்று விடுகிறார். நடுவில் சிகாகோ திரும்பி கல்வியைத் தொடர முயற்சித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்கிறார். அங்குதான் முதன்முதலில் கம்ப்யூட்டர் டிசைனைக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் சூழ்நிலையியலை அவரால் அங்கு கல்வியைத் தொடரமுடியவில்லை. மீண்டும் கலிபோர்னியா திரும்பிவிட்டார். வேலைவாய்ப்பிற்கு பஞ்சமில்லாத, வந்தாரை வாழவைக்கும் பூமி அது. பலதரப்பட்ட வேலைகளைச் செய்கிறார். 

அம்பெக்ஸ் என்ற டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராகச் சேர்க்கிறார். சிஐஏ நிறுவனத்திற்கு உளவுத்தகவல்களை டிஜிட்டலாக சேர்த்துவைக்க ஓர் அதிபாதுகாப்பான டேட்டாபேஸ் செய்துகொடுக்க வேண்டிய ஒரு ப்ராஜக்ட்டில் அவர் பங்குபெறுகிறார். அதுதான் அவரது வாழ்கையின் திருப்புமுனை. அந்த ப்ராஜெக்ட்டிற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். எட்ஜர் எப் கோட் (Edgar F. Codd) என்ற கணினி விஞ்ஞானியின் கட்டுரையைப் படிக்கிறார். அவரின் தியரியிலுள்ள சில குறைபாடுகளை நீக்கிவிட்டால் மிகப் பிரமாதமான ஒரு டேட்டாபேஸை உருவாக்கமுடியும் என்று தோன்றுகிறது. வேலையை விட்டுவிட்டு இரு நண்பர்களுடன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

அங்கிருந்து அவரது புதிய பயணம் தொடங்குகிறது. 1977இல் சாப்ட்வேர் டெவெலப்மென்ட் லேபாரட்டரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த ஸ்டார்ட்அப் 1979இல் ரிலேசனல் சாப்ட்வேர் என்ற பெயரில் பரிணமிக்கிறது. அப்போதுதான் ஆரக்கிள் என்ற அவர்களின் டேட்டாபேஸ் வெளியிடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் ஐபிஎம் டேட்டாபேஸ் தொழில்நுட்பத்தில் சக்கைபோடு போட்டது. அவர்களுடையதும் கோட் தியரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் எல்லிசன் அவர்களிடம் தங்களின் டேட்டாபேஸை  அவர்களுடைய டேட்டாபேஸு டன் பொருத்திக்கொள்ளும் இணைவுதரல் கேட்டார். ஐபிஎம் கொடுக்கவில்லை. காரணம் தங்கள் டேட்டாபேஸ் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம்தான். பின்னாளில் அதுவே ஐபிஎம்மின் மிகப்பெரிய தவறாக மாறிப்போனது. ஆரக்கிள்ளின் வெற்றியோடு பயணப்பட்டிருக்க வேண்டிய IBM-DB2 மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களோடு சுருங்கிவிட்டது. 

ஆரக்கிள்

வேகமாக வளர்ந்துவந்து கொண்டிருந்த ஆரக்கிள் 1990இல் ஒரு சரிவைக் கண்டது. அதிலிருந்து மீள பத்து சதவீத வேலையாட்களை வீட்டிற்கு அனுப்பவேண்டியிருந்தது. அது பத்திரிகைகளில் வெளியாகி வாடிக்கையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீள, ஒரு தவறைச் செய்தார்கள். அதாவது எதிர்காலத்தில் வெளியாகும் ஆரக்கிள் லைசன்சையும் அடிமாட்டு விலையில் விற்றார்கள். அதனால் அடுத்த ஐந்தாறு வருடங்களுக்கு ஆரக்கிள் புதிதாக வெளியானாலும் காசு வந்தபாடில்லை. 

ஆனால் அங்கேதான் ஒரு ட்விஸ்ட் நடந்து ஆரக்கிளைக் காப்பாற்றியது. இவர்களுக்கு மேலே இருந்த போட்டி கம்பெனியான சைபேஸ் பெரிய கம்பெனிகளால் விலைக்குவாங்கப்பட்டு அலைகழிக்கப்பட்டது. அதனால் அவர்களின் டேட்டாபேஸ் டெவலப்மென்ட் நோக்கம் சிதைய, வாடிக்கையாளர்கள் அதற்கு அடுத்த நிலையில் இருந்த ஆரக்கிளைத் தேடினார்கள். ஆரக்கிள் காட்டில் மழை அடித்தது. புதிய வாடிக்கையாளர்கள் பெருகினர். சொல்லப்போனால், வேறு போட்டியாளர்களே இல்லாத நிலை உருவாகியது. 

2000 த்திற்குப் பிறகு MySQL என்ற ஒரு பொடிப்பயல் இவர்களுக்கு எதிரியாக வளர்ந்தான். அது ஓபன்சோர்ஸ் வேறு. எல்லா சிறு நிறுவனங்களின் தேவையையும் அது பூர்த்தி செய்தது. அந்தச் சமயத்தில் ஜாவா படைப்பாளியான சன் மைக்ரோசிஸ்டம் அதை வாங்கி இருந்தது. MySQL ஐ கட்டுப்படுத்த 2010இல் சன்மைக்ரோசிஸ்டத்தையே ஆரக்கிள் வாங்கியது.

அதன்பிறகு இன்றுவரை உலக டேட்டாபேஸ்ஸில் 90% இவர்களின் நிறுவனத்தின் தயாரிப்பில்தான் இயங்குகிறது. கடந்த பத்துவருடங்களாக பில்கேட்ஸ், வாரன் பப்பெட்க்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் மூன்றாவது பணக்காரர் லாரி எல்லிசன்தான். கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடிகள் ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் ஏழாவது பணக்காரராக பல வருடம் இருக்கிறார். ஆனால் அதுவல்ல அவரது பெருமை. பல தொண்டு நிறுவனங்களுக்கு, புற்றுநோய் மருத்துவ கழகத்திற்கு, பள்ளி, கல்லூரிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவிற்கு நன்கொடை அளித்திருக்கிறார்.

ஸ்டார்ட்அப் பாடம்

ஒரு ஸ்டார்ட்அப்பின் வெற்றிக்கு அடிப்படை பருவத்தே பயிர் செய்வது. டேட்டாபேஸ் ரிலேசனல் வெறும் தியரியாக இருந்தபோது அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதிலுள்ள குறைகளை நீக்கிவிட்டு முயற்சித்துப் பார்க்கிறார் எல்லிசன். அங்கிருந்துதான் அவரது வெற்றி ஆரம்பமாகிறது. 1982 இல் ஆரக்கிள் என்ற டேட்டாபேஸ்ஸின் பெயரிலேயே அவர்களின் கம்பெனியையும் பதிவுசெய்கிறார்கள். அங்கிருந்து அந்த நிறுவனம் பீடுநடை போடுகிறது 

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு என்பார் ஔவையார். 

தண்ணீருக்கு நடுவே ஒரு கொக்கு பசியுடன் காத்துக்கொண்டிருக்கிறது. அதன் காலைச் சுற்றிப் பல சிறிய மீன்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தக் கொக்கு அவற்றைக் கவ்வித் தின்பதில்லை.

ஏனென்றால் தன் பசியைத் தீர்க்கக்கூடிய பெரிய மீன் வரும்வரை அந்தக் கொக்கு பொறுமையாகக் காத்திருக்கும். அதுபோல சரியான வாய்ப்பை நோக்கி காத்திருக்கவேண்டும். அதற்கு நிறைய படிக்க வேண்டும். 

 

முந்தைய அத்தியாயங்கள்

டெல்

மிரட்டலான ஸ்டார்ட்-அப் கதை என்றால் அது டெல் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல்லின் கதைதான். ஒரு பிசினஸில் நுழைவதற்கு உயர்நிலைப் பள்ளியில் படித்த சான்றிதழ் அல்லது அதற்கு இணையான தேர்வில் எழுதி வென்ற சான்றிதழ் வேண்டும். அதற்காக விண்ணப்பிக்கிறார். அப்போது அவரின் வயது வெறும் எட்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்