Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''வீட்டுக்குப் போனா சோத்துல கைவைக்க முடியாது!" - துப்புரவுப் பெண்களின் வாழ்க்கை #LifeOfScavengers

ல்லிகா, லெட்சுமி இருவரின் வாழ்க்கையும் குப்பைகளுக்கு இடையே நகர்கிறது. அகற்ற அகற்ற சேர்ந்துகொண்டே இருக்கும் குப்பைகள். கோயம்புத்தூர் கலெக்டர் ஆபீஸ் வலதுபுறச் சாலையின் தூய்மைக்கு மல்லிகாவும், இடதுபுறச் சாலையின் தூய்மைக்கு லெட்சுமியும் பொறுப்பு. ஆம்... இருவரும் துப்புரவுப் பணியாளர்கள். 

துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள்

'குப்பை அள்ளுறவன் கூட' என்று உரையாடல்களில் பலரும் இந்த விளிம்புநிலை மக்களைக் குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. ஆனால், அவர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றி யாரும் சிந்தித்திருக்கமாட்டார்கள். குப்பைத்தொட்டிகளைக் கடக்கும்போது 'ச்சீ... என்னா நாத்தம்' என்று மூக்கைப் பொத்திக்கொண்டு போகவும்,  துப்புரவுப் பணியாளர்களை ஏளனமாகக் கடந்துபோகவும்தான் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் அவர்களின் வேலை பற்றி அறிய நேர்ந்திருந்தால், எந்தக் குப்பையையும் எறியும் முன், அதை அப்புறப்படுத்தப்போகும் ஒரு ஜோடிக் கைகளைப் பற்றி மனம் ஒருமுறை சிந்தித்து, குப்பைகளை முறையாகத் தொட்டிகளில் சேர்ப்பிக்கும் பழக்கம் நம்மைப் பற்றிக்கொள்ளலாம். அப்படி ஒரு முயற்சியாக, மல்லிகா, லெட்சுமியிடம் பேசுவோம்.

அதிகாலை 6 மணி. மல்லிகாவையும், லெட்சுமியையும் கலெக்டர் ஆபிஸ் சாலையில் சந்தித்தோம். துடைப்பத்தால் குப்பைகளை  வேகவேகமாக  இழுத்துக்கொண்டிருந்தார்கள். சரக் சரெக் எனச் சத்தம் எழுப்பிய துடைப்பம், புழுதியைக் கிளறிவிட்டபடி இருந்தது. 

“நல்லா வெச்சாங்க கண்ணு எனக்கு மல்லிகான்னு பேரு. பேரு மட்டும்தான் மணக்குது'' என்று அதிரும் சிரிப்போடு ஆரம்பிக்கிறார் மல்லிகா. “எங்கப்பாவும் அம்மாவும் கார்ப்பரேஷன்ல குப்பை கூட்டிக்கிட்டு இருந்தாங்க. பொறந்ததுல இருந்தே நாத்தத்தோட புழங்குனதால, கல்யாணத்துக்கு அப்புறமாச்சும் இதுல இருந்து வெலகி வாழலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்கும் வாய்க்கல. எனக்குப் பார்த்த மாப்பிள்ளை நாகராஜும் கார்ப்பரேஷன்ல குப்பைதான் கூட்டிக்கிட்டு இருந்தாரு. சரி அதுதான் வாழ்க்கையினு வாக்கப்பட்டேன். ஆனா கல்யாணம் ஆன கொஞ்சநாள்லயே, 'குடும்பச் சூழ்நிலை சரியில்ல, நீயும் வேலைக்கு வா’ன்னு என் புருஷன் கூப்பிட்டாரு.

'பப்ளிக்குல எல்லார் முன்னாடியும் எப்படிங்க குப்பை கூட்டுறது...'னு ஆரம்பத்துல நான் கூச்சப்பட்டேன். 'நானும் துணைக்கு வர்றேன்'னு சொல்லி கொஞ்ச காலம் அவரும் என்கூட வந்து, என்னைக் குப்பைக் கூட்டுறதுக்குப் பழக்கினாரு. ஆனாலும் எங்க சொந்தக்காரங்க யாராச்சும் வந்தா ஒளிஞ்சிக்குவேன். நரகலை எல்லாம் அப்புறப்படுத்தவேண்டி வரும்போது வீட்டுல போய் சோத்துல கைவைக்க முடியாது. அப்போதான் எங்கம்மாவும், அப்பாவும், என் புருஷனும் படுற கஷ்டம் புரிஞ்சு கலங்கிட்டேன். அவங்க அதெல்லாம் பண்ணினது எனக்காகத்தானேனு நெனச்சப்போ, அப்போ ஏன் அதை நாமளும் செய்யக்கூடாதுனு மனசு பக்குவப்பட்டுச்சு.

அடுத்து வந்த நாள்கள்ல எல்லாம் குனிஞ்ச தலை நிமிராம கூட்ட ஆரம்பிச்சேன். வர்றவங்க போறவங்க எல்லாரும் என்னையே கேவலமா பார்க்குறமாதிரி நெனச்சுட்டு இருந்த எனக்கு நாளாக நாளாகத்தான் புரிஞ்சது, யாரும் நம்மளை மனுஷனாவெல்லாம் மதிக்கிறதில்ல, நம்மளைக் கண்டுக்கிறதுக்கெல்லாம் அவுங்களுக்கு நேரம்மில்லைன்னு. அவமானத்தைவிட அது பெரிய வலியா இருந்துச்சு. காலப்போக்குல வெட்கம், கூச்சம் எல்லாமே அத்துப்போச்சி'' என்றார் விரக்தியுடன்.

துப்புரவு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்

லெட்சுமி பேசும்போது, “என் கணவர் இறந்து ஆறு வருஷம் ஆகுது. அதுக்கு முந்தி நான் இந்த வேலை பார்த்ததே இல்லை. குடும்பத்தைக் காப்பாத்துறதுக்காக திடீர்னு ரோட்டுக்கு வரவெச்சிடுச்சு விதி. புதுசா படும்போதுதான் அது கஷ்டம். பழகிட்டா அது வாழ்க்கை. ஆனா, டிப் டாப்பா டிரெஸு பண்ணிக்கிட்டு சென்டெல்லாம் அடிச்சிக்கிட்டு மணக்க மணக்கப் போற பொண்ணுங்களைப் பார்க்கும்போது, மனசுல எங்கேயோ ஒரு மூலையில ஏக்கமா இருக்கும். எங்களுக்கு இல்லைன்னாலும் எங்க பிள்ளைகளுக்காவது இந்த நாத்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைச்சு, அவங்க இப்படி ஜம்முனு உடுத்திட்டுப் போற வேலைக்குப் போகணும்னு வேண்டிக்குவோம்.

சிலர் எங்களை ரொம்ப கீழ்த்தரமா நடத்தும்போது, அவங்க பொறந்த மாதிரி நாங்களும் ஒருத்தி வயித்துல இருந்துதானே பொறந்து வந்திருக்கோம், நாங்களும் மனுஷங்கதானேனு ஆதங்கமா இருக்கும். ஆனா எங்ககிட்ட நடந்துக்குற முறையில முன்னவிட இப்போ சனங்களோட மனசு முன்னேறிட்டே வருது. இனியும் மாறினா நல்லாயிருக்கும்'' என்கிறார் காலத்தின் மீது நம்பிக்கை வைத்து.

இருவரும் மீண்டும் கூட்ட ஆரம்பிக்க, 'சரக் சரக்' சத்தம் புழுதி கிளப்புகிறது.

படங்கள்: ஷன்மதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close