வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (28/06/2017)

கடைசி தொடர்பு:18:06 (28/06/2017)

சிறுவர்கள், இளைஞர்களிடம் மனம்விட்டுப் பேசாவிட்டால், போதை அபாயம்..! - மருத்துவ எச்சரிக்கை

போதை எதிர்ப்பு அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில், குடிநோய், போதை எதிர்ப்பு தினம் ஜூன் 27 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மரு.சுரேஷ்குமார் தலைமைவகித்தார். அப்போது, ”சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடமும் பெற்றோரும் ஆசிரியர்களும் நட்பாகப் பேசவேண்டும்; அப்படிப் பேசும்போதுதான் அவர்களிடம் உள்ள மனக் கஷ்டங்கள், கவலை, அழுத்தம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள்; இதன் மூலம் அவர்கள் தங்களின் பிரச்னைக்கு குடி போன்ற போதையை நாடிவிடாமல் தடுக்கமுடியும்” என்று மரு. சுரேஷ்குமார் கூறினார். 

மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேசுகையில்,”இந்திய அளவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். போதைப்பொருள் பயன்படுத்துவதால் தினமும் 10 பேர் தற்கொலைக்கு ஆளாவதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது” என்றார். 

மேலும், “குடி உட்பட போதைப்பழக்கமானது, ஒன்று, உடனிருக்கும் நண்பர்களால் கொண்டாட்டமாகத் தொடங்குவது. மற்றது, மனக் கஷ்டம், பதற்றம், கவலை, அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக போதையை நாடுவது. இரண்டு வகையினருமே எப்போதாவது எனத் தொடங்கி, மாதம், வாரம் ஒரு முறை, சில நாட்களுக்கு ஒரு முறை, பிறகு தினசரி, கடைசியாக காலையில் எழுந்தவுடன் தொடங்கி எப்போதுமே போதையிலேயே இருப்பது என குடிநோயாளியாக மாறிவிடும் அபாயம் உண்டாகிறது. இப்படி குடிக்கு அடிமையாகிவிடும்போது கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், குடல்குழிப்புண், ரத்தவாந்தி, ரத்தக்கொதிப்பு, கணையம் கெட்டு சர்க்கரை, நரம்புத்தளர்ச்சி, கைகால்நடுக்கம், ஞாபகமறதி, பாதம் எப்போதுமே கொதிப்பதைப் போல எரிச்சல், மன அழுத்தம், மனப் பதற்றம், சிந்தனைக் குழப்பம், சக மனிதர்கள் மீது சந்தேகம்கொள்ளும் நோய், முக்கியமாக நுரையீரல், இதய பாதிப்புகள் என உடல், மனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும். குடிப்பவர்களில் 20% முதல் 30%வரை கட்டாயம் குடிநோயாளிகளாக மாறிவிடுவார்கள் ” என்று மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தார். 

குடிநோய்க்கான அவசரத் தீவிர சிகிச்சை, போதைசார்ந்த வலிப்புநோய் தடுப்பு சிகிச்சை, தீவிர குழப்பநோய்த் தடுப்பு சிகிச்சை, தயாமின் வைட்டமின் குறைபாடு சிகிச்சை, நுண்சத்துக் குறைபாடு சிகிச்சை, போதைசார்ந்த மனநோய்க்கான் அசிகிச்சை, போதைசார்ந்த உடல்நலக் கேட்டுக்கான ஆரம்பகட்டச் சிகிச்சை, போதையின் மீது பெரும்விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை, குடும்பத்தினருடனான கலந்துரையாடல், குடிநோய் பாதிக்கப்பட்டோருடன் குழுக் கலந்துரையாடல் ஆகியன, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் வழங்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

தலைமை மருத்துவர் சுந்தரராசு, போதை எதிர்ப்பு விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகித்தார். எலும்புசிகிச்சை வல்லுநர் இராதாகிருஷ்ணன், அறுவைச்சிகிச்சை வல்லுநர் தியாகராஜன் ஆகியோரும் பேசினர். 

நிகழ்ச்சியின் நிறைவாக, பொதுமக்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு மனநல மருத்துவர் விளக்கம் அளித்தார். 

விவசாயி ஒருவர் பேசுகையில்,” குடியில்லாமல் என்னால் இருக்கவேமுடியவில்லை; அந்த சமயத்தில் நன்றாகப் பழக்கமானவர்களிடமும் உறவினர்களிடமும் கோபத்தோடும் எரிச்சலோடும் சண்டை போடுகிறேன். பல நேரங்களில் வாங்கும் சம்பளம் முழுவதையும் குடித்தே காலியாக்கிவிடுகிறேன். தவறு எனத் தெரிகிறது. ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு வழி உண்டா?” என்றார்.

நோயாளியின் உறவினரான இன்னொரு பெரியவரோ,” பெண்களும் சில நேரங்களில் குடிப்பதாக செய்தி பார்க்கிறோம். அவர்களுக்கு இந்த அளவுக்கு பிரச்னைகள் இருப்பதாகத் தகவல் இல்லையே?” என்று கேட்க, “ குடிநோயின் பாதிப்பு வயது, பால், படிப்பு வித்தியாசம் பார்த்து வருவதில்லை. இன்னாருக்குதான் பாதிப்பு வரும் எனச் சொல்லமுடியாது” என்றார் மருத்துவர்.

அவ்வப்போது குடித்தால் பாதிப்பு வராதுதானே என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்,” குடியோ வேறு போதைப்பொருள்களோ எப்போது கட்டுப்பாட்டைத் தாண்டும் எனக் கூறமுடியாது. ஆரம்பத்தில் கொஞ்சம்தானே, ஒரு முறைதானே என்றுதான் தொடங்கும். பிறகு மோசமாகிவிடும் என்பதுதான்.” என்றார் சீரியஸுடன்.

” நான் தினமும் என்னுடைய வேலைகளைச் செய்துவிடுகிறேன். இரவு 10 மணிக்கு குடிக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் இல்லையே? இதை எப்படி எடுத்துக்கொள்வது?” எனக் கேட்டார், ஒருவர். அதற்கு, அந்த நேரத்தில்தான் குடிப்பீர்களா என்று பதிலுக்குக் கேட்டார், மருத்துவர். ’அந்த நேரத்தில் சரியாகக் குடிக்கத் தொடங்கிவிடுவேன் என்று அவர் உடனடியாக பதில்கூற, “ இந்த மன உந்துதல் குடிநோயின் அறிகுறிதான்” என்று விளக்கம் அளித்தார், மனநல மருத்துவர்.


டிரெண்டிங் @ விகடன்