வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (30/06/2017)

கடைசி தொடர்பு:16:18 (30/06/2017)

வெட்டப்படும் மரம்... கண்ணீர் விடும் பாட்டி..! - ஒரு புளியமரத்தின் நிஜக் கதை

னித உறவுகளுக்கு அப்பாற்பட்டு  ஒரு பெண்ணினுடைய கண்கள் எவற்றுக்கெல்லாம்  கலங்கிப் பார்த்திருக்கிறீர்கள்? அதிகப்படியாக,   தான் செல்லமாக வளர்த்த நாய்குட்டியின்  மரணத்துக்காக அழுத கண்களை நமக்குத் தெரியும்.  ஒரு மரத்தின் மரணத்துக்காக  அழும் பெண்ணை யாரேனும்  அறிந்ததுண்டா?  மனித உறவுகள் மீது நம்பிக்கையற்ற அல்லது நம்பிக்கை  இழந்த ஒரு பெண்  தன் மகிழ்ச்சியை மீட்டுத்தரும்  நாய்க்குட்டிக்காக அழுவது  இவ்வுலகில் இயல்பு. ஆனால், கேட்பாரற்று நிற்கும் ஒரு மரத்துக்காக அழும் பெண் நம் எல்லோருக்கும்  புதிது.


    மரம்

சாலை விரிவாக்கப் பணிக்காக மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வெட்டுகிறார்கள் என்ற செய்தியறிந்து கடந்தவாரம்  நாம் அந்த மரங்களை பார்வையிடச் சென்றிருந்தோம்.   “அந்த அதிகாலைப் பொழுதில் மனித சூழ்ச்சிகள் ஏதுமறியாது சில்லிடும் காற்றை விசிறிக் கொண்டிருந்த மரங்களைப் பார்க்கும்பொழுது பரிதாபம் கலந்த கோபம் கொப்பளித்தது.  உடல் பாகங்கள் யாவும்  செயழிலந்த ஒரு மனிதனை அறிவியலின் துணைகொண்டு காப்பாற்றி வைத்திருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவும்,  ஒரு கொலைக் குற்றவாளி  சாட்சியங்கள்  இல்லாததால்  சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வெளியேறுவது போன்ற காட்சியும் அந்த மரங்களின் நிழலில் படர்வதுபோல மனதில் தோன்றியது.

எல்லாம் எப்படியும்  அறுபது  எழுபது வருஷ மரமாக இருக்கும். சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்களை சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப் போகிறார்கள் என்று வேதனை கலந்த குரலில் சொல்லியபடி புகைப்படக் கலைஞர் தி.விஜய்,  அந்த மரங்களையெல்லாம் பல்வேறு கோணங்களில் படம் எடுத்துக்கொண்டிருந்தார். ஒருவனை கொலை செய்யப்போகிறார்கள் என்பதை அவனிடம் சொல்லாமல், அவன் இறந்ததற்குப் பிறகு மாலையிடுவதற்காகவோ அல்லது நினைவில் வைத்துக்கொள்வதற்காக  அவனை விதவிதமாக படம் எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அந்த கணம்.  பார்த்த எனக்கே அப்படியிருந்தால் படம் எடுத்த அவருக்கு.?   “நம்ம  கையில என்ன இருக்கு. இன்னும் பல வருஷம் கழிச்சி இங்கெல்லாம் மரம் இருந்துச்சின்னு இந்த மரங்களின் படங்களை  ஒரு விசேஷமாதான் அடுத்த தலைமுறைக்கு காட்ட வேண்டியிருக்கும் போல! என்றவரின் கம்மிய குரல் சூடேறி,  வளர்ச்சிங்கிற பேருல இருக்கிற மரங்களை வெட்டி கட்டடங்களாகவும் சாலைகளாவும் மாத்திட்டா..  காத்தை காசு கொடுத்தா வாங்க முடியும்?  என்று கேட்டவர்.. சட்டென்று  மெளனமாகி... கொலைசெய்யப்பட இருக்கும் மரங்களை தன் கேமராவுக்குள்  சிறைபிடிக்கத் தொடங்கினார்.”  மரங்களுக்கு மட்டுமல்ல அங்கு குடியிருந்த பறவைகளுக்கும் இன்னும் சில நாள்களில் அந்த மரங்கள் அழிக்கப்பட இருக்கின்றன என்பதை அறியாதவாறு மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருந்தன... ஒரு  மனிதன் செத்தால் அவரால் ஆளாக்கப்பட்டவர்கள், அவரோடு பழகியவர்கள் அழுவதுபோல, நாளைக்கு இந்த பறவைகள் அழும்தானே.? அதனால் என்ன.  பறவைகளைப் பற்றியெல்லாமா  இப்போதுள்ள மனிதர்கள் கவலைப்படுகிறார்கள்? சக மனிதன் மீது அன்புகாட்டவே இங்கு பலரும் தயாராயில்லாதபோது இந்த மரங்களையும், பறவைகளையும் பற்றி இப்படி யோசிப்பதையோ எழுதப்போவதையோ கூட சிலர் ஏளனமாகத்தானே  பார்ப்பார்கள் என்ற அச்சமும் தட்டியது.
        
இப்படியான சிந்தனையோடு போய்க்கொண்டிருக்கையில்தான் ஒரு புளியமரத்தடியில் பழக்கடை போட்டிருந்த ஜோதிமணியை சந்தித்தோம். தன் வாழ்நாளில் ஐம்பத்தைந்து வருடங்களை  கடந்தவரின் முகத்தில் பெருஞ்சோகம் குடியிருந்தது.  “ நான் பொறந்தது கோயம்புத்தூரு... வாக்கப்பட்டது பெரியநாயக்கன்பாளையம்.  காசு பணம், சொந்தக்காரங்க, சிநேகிதகாரங்கனு  வாழ்க்கையில எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிடிப்பு இருக்கும் கண்ணு.  மிகப்பெரிய கஷ்டத்துல இருக்கும் போது அவுங்க யாராச்சும்தான்  கை கொடுப்பாங்க. எனக்கு இந்த புளிய மரம்தான் கண்ணு எல்லாமே.!  இந்த புளியமரம் தான்  முப்பது வருஷமா எனக்கு அடைக்கலம் கொடுத்துச்சி. எனக்கு பத்து நாளா தூக்கமே இல்லை கண்ணு.  என் புருஷன் செத்தப்பக்கூட நான் எதிர்காலத்தை நெனைச்சு இப்படி பயப்படலை... ராப்பூராவும் ஏதேதோ நெனப்பு ஓடுது.
      
எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கும்.  மொதமொதல்ல என் பாட்டியோட இந்த ஊருக்கு பழம் விக்க வந்தேன். தோள்ல பை நிறைய பழங்களை மாட்டிகிட்டு என் பாட்டி பின்னாடியே... ’கொய்யா பழம்.. மாதுளம் பழம்... ஆப்பிள்ள்ள்ள்’னு கூவிகிட்டே போவேன்.  இந்த ஊருக்குள்ளயே மொதல்ல பழ வியாபாரத்துக்கு வந்தது எங்க பாட்டிதான். அப்புறம், கொஞ்ச வருஷத்துலயே எனக்கு பெரியநாயக்கம் பாளையத்துல மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுத்தாங்க. ஒரு பொண்ணு, ஒரு ஆண். ரெண்டு கொழந்தைங்களோட வாழ்க்கை நிம்மதியா போய்கிட்டு இருந்துச்சி. திடீர்னு என் புருஷன் செத்துட்டாரு. என்ன பண்றதுன்னே புரியலை. நான் தனியா வாழ்றதைவிடவும் என் ரெண்டு பிள்ளைகளையும் கரைசேர்க்கணுமேங்கிற பயம் என்னை அரிச்சிருச்சு. அப்பதான் பாட்டிகிட்ட கத்துகிட்ட  பழ வியாபாரம் எனக்கு கை கொடுத்துச்சி. ஆனா சின்ன வயசுல போனதைப் போல தெருத்தெருவா தூக்கிகிட்டு போனா வேலைக்கு ஆகாது. பெரிய வருமானமும் கிடைக்காதுனு தோணுச்சி. அப்பதான் இந்த புளிய மரத்தடியில வந்து கடை போட்டேன். புருஷன் போனதிலிருந்து இன்னைக்குவரைக்கும் இந்த புளியமரம் எனக்கு துணை” என்றவர்,  கொஞ்சம் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்..

   மரம்

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் மகனும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான். என் மகளை கட்டிகிட்டவணும் ஏமாத்திட்டு ஓடிட்டான். அவளுக்கு மூணு பிள்ளைங்க. என் மகள், என் பேரப்பிள்ளைங்களை நான்தான்  காப்பாத்துறேன். என்னை இந்த மரம்தான் காப்பாத்துச்சு. இந்த மரத்தடி நிழலை நம்பிதான் இந்த வயசான காலத்துல நான் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்கி வச்சிருக்கேன். இதை வெட்டிட்டா நான் எங்க போவன்னே தெரியலை; இந்த மரம் யாரை என்ன பண்ணுச்சி, அதுபாட்டுல ஒரு ஓரமாத்தானே இருக்கு?  இந்த மரங்கள் இருக்கிறதாலதான் இயற்கையை அனுபவிச்சப்படி எல்லாரும் இந்த வழியா  ஊட்டிக்கு போறாங்க. இதை அழிச்சிட்டு அகலமான ரோடு போட்டு எல்லாரும் வேகமா போய் என்ன பண்ணப் போறாங்க?  என்று  ஜோதிமணி வெள்ளந்தியாக கேட்பதை ஆமோதித்து   சிறு துளி கண்ணீரைச் சிந்துகிறது அவர் கண்கள்.

இது ஒரு புளிய மரத்தின் கதைதான். வெட்டப்படும் 500 புளியமரங்களுக்கும் பின்னால் இன்னும் எத்தனை கதைகள் புதைந்திருக்கும்? அவைகள் எத்தனை பேருக்கு வாழ்வளித்திருக்கும்?

எத்தனை பேரை வாழ வைத்திருக்கும்?  சந்தர்ப்ப சூழலைப் பயன்படுத்தி ஒரு கொலை குற்றவாளிக்கூட இந்த உலகில் சுதந்திரமாக வாழ முடிகிறது. வாழ்வு முடிந்துபோன மனிதனை நம் அறிவியல் அறிவைப் பயன்படுத்தி வாழவைக்கிறோம். ஆனால், இந்த மனிதனுக்கு எல்லா வகையிலும் உதவியாய் இருந்ததைத் தவிர அந்த மரங்கள் வேறு என்ன பாவம் செய்தது?  சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை' நாவலின் தொடக்கம் தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

மரம்

அதில், “ சொல்லப்போனால்  புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டுதானே இருந்தது?  மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக  நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக்கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனிதனின் சிரிப்பையும், கண்ணீரையும், கண்ணீரே சிரிப்பாக வெளிப்படுவதையும், சுயநலத்தையும்,  தியாகத்தையும், தியாகத்தில் கலந்துபோயிருந்த சுயநலத்தையும், பொறாமையையும், அன்பில் பிறந்த துவேஷத்தையும் பார்த்தபடி நின்றதே  அன்றி வேறு என்ன செய்தது? மனித ஜாதிக்கு அது  இழைத்த கொடுமைதான் என்ன? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்துகொண்டு யாருக்கேனும் குழி பறித்ததா?   அது தானாகப் பூத்தது. தன்னையே நம்பி வளர்ந்தது. இலைவிட்டது. பூ பூத்தது. பூத்துக் காய் காயாகக் காய்த்ததில் இலைகள் மறைந்தன. பழுத்த இலைகள் உதிர்ந்து மண்ணை மறைத்தன.  மண்ணை மறைத்து, மண்ணில் கரைந்து பெற்ற தாய்க்கு வளங்கூட்டி  மீண்டும் மரத்தில் கலந்தன. வானத்தை நோக்கி துழாவின கைகள். வேர்கள் மண்ணுக்குள் புகுந்து அலைந்தன. ஆமாம்,  சுயமரியாதையுடன்  நிறை வாழ்வு வாழ்ந்த மரம் அது.

ஆனால், நாட்டையும் பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும் புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன் புளியமரத்தை விட்டு வைக்கிறேன் என்கிறானா ? அதையும் காயாக வைத்து விளையாடி விட்டான் !


டிரெண்டிங் @ விகடன்