வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (30/06/2017)

கடைசி தொடர்பு:15:38 (30/06/2017)

‘பல சமயம் வழித்துதான் எடுக்கவேண்டியிருக்கும்!’ - 2,600 சடலங்களுக்கு மேல் மீட்ட மதுரை முருகன்

மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். 35 வயது. இவர் போலீஸுக்கு உதவியாக, பிரேதங்களை எடுத்துக்கொடுத்து சேவையாற்றுகிறார். மதுரை வட்டாரப் பகுதியில் மிகவும் கொடூரமாகவும் மர்மமான முறையிலும் இறந்த மனித உடல்களை, போலீஸ் தகவல் கொடுத்த பிறகு மீட்டு அதைப் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்று கொடுக்கிறார். அரசு ஊழியர்கள்கூட தயங்கும்  நிலையில் கொடூரமான மரணத்தைத் தொடர்ந்து விழும் பிரேதங்களைக்கூட சற்றும் அஞ்சாமல் மீட்டு ஒப்படைக்கிறார் முருகன். அவரை நேரில் சந்தித்துப் பேசுனோம்.

முருகன்

“என் பெயர் முருகன். நான் எட்டாம் வகுப்பு வரைப் படித்தேன். என் மனைவி கூலி வேலை செய்கிறார். நான்கு குழந்தைகள். எனக்கு ஆரம்பத் தொழில் கார், ஆட்டோ ஓட்டுவது . சுமார்  ஆறு வருடங்களுக்கு முன்னர் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் கல்லூரி மாணவன் ஒருவன் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அவனை என் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். வழியிலேயே அவன் இறந்துவிட்டான். அவனை முன்பே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருந்தால் காப்பாத்தியிருக்கலாம். ஆனால், யாரும் அவனைக் கண்டுகொள்ளவேயில்லை. அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை. ‘ஒரு உயிரைக்கூடக் காப்பாற்ற யாருக்கும் தைரியம் இல்லையே!' என்று மனதுக்குள் பல போராட்டம்.

மறுநாள் காலையில் எனக்குள் ஓர் எண்ணம். ‘விபத்தில் சிக்கிய உயிர்களைக் காப்பாற்றும் பணியை நாம் ஏன் செய்யக் கூடாது' எனத் தோன்றியது. அதற்குப் பிறகு, என் நண்பன் ஒருவன் உதவியோடு ஒரு டிரஸ்டின் கீழ், ஆம்புலன்ஸ் வண்டியில் வேலைக்குச் சேர்ந்தேன். விபத்து நடக்கும் இடங்களுக்கு விரைந்து சென்று, பல உயிர்களைக் காப்பாற்றினேன். மேலும், இறந்த சடலங்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டேன். சில இடங்களில் உடல் மிகவும் சிதறிக்கிடக்கும். அவற்றை எடுத்து போஸ்ட்மார்ட்டத்துக்காக அனுப்பக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். அதை நான் கொஞ்சம்கூடத் தயங்காமல் `இதுவும் மனித உடல்தானே' என்று மீட்டு, போலீஸுக்கு உதவி செய்வேன். என் குடும்பச் செலவுக்கு  இறந்தவர்களின் உறவினர்கள் உதவுவார்கள். அவர்கள் எனக்குப் பணம் கொடுக்காவிட்டாலும்  நான் கவலைபட்டதில்லை. நாளடைவில் நான் ஆம்புலன்ஸ் தொழிலை விட்டுவிட்டு, சடலங்களை மீட்கும் பணியில் முழுமையாக இறங்கினேன். இதுவரை 2,600 பிணங்களுக்குமேல் மீட்டிருப்பேன். கொத்துக்கொத்தாகப் பிணங்களை என் கைகளால் அள்ளியிருக்கிறேன். பல சாலை விபத்துகளில் குடல் எது, தலை எது எனத் தெரியாமல் குழம்பிகிடப்பதை வழித்து எடுத்து ஒப்படைப்பேன்.

முருகன்

ஒருமுறை மதுரை யாகப்பா நகரில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவளது முண்டம் மட்டுமே வீட்டுக்குள் கிடந்தது. தலையைக் காணவில்லை. நானும் போலீஸ்காரர்களும் வீடு முழுக்கத் தேடிப்பார்த்தோம். கடைசியில் அந்தத் தலை, அவர்களது வீட்டு பீரோவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து ஒன்றுசேர்த்தேன். வேறு ஒரு சம்பவம், 150 ரூபாய்க்காக ஒருவர் கொலை செய்யப்பட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.  அவரை பல நாள்கள் கழித்து கண்டுபிடித்து மீட்டேன்.

இரண்டு வருடம் இருக்கும். மாமனார் பாலியல் தொல்லை செய்ததால், அவர் தூங்கும்போது பெட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தாள் மருமகள். அதனால், அந்த முதியவர் எலும்பு தெரியும் அளவுக்கு உடல் எரிந்த நிலையில் கிடந்தார் அவரையும் மீட்டேன். இப்படி ஏகப்பட்ட பிணங்களைத் தூக்கியிருக்கேன். பல நாளா புழுபூத்த பிணங்களைக்கூடத் தூக்கியிருக்கேன். அந்த வாடையை நினைத்தாலே உசுரைக் கொத்தோடு பறிப்பது மாதிரி இருக்கும். அப்படிபட்ட சடலங்களை எல்லாம் மீட்டிருக்கேன். இப்படிப் போலீஸ்காரரர்களுக்கு பலமுறை உதவியுள்ளேன். மதுரை பெரியாஸ்பத்திரி, தத்தனேரி உள்ளிட்ட இடங்களில்தான் ஒரு நாளில் பல பிணங்களை ரெக்வரி செய்துகொண்டு சென்றுள்ளேன்.  அவ்வாறு எடுக்கப்படும் உடலுக்கு நான்தான் அங்க அடையாளங்களைப் பார்ப்பேன்.  எத்தனை வெட்டுக்காயம், என்ன அகலம், உயரம் என எல்லாவற்றையும் கணக்கிட்டு போலீஸ் ஆவணங்களுக்குப் பதில் அளிப்பேன்'' என்றவர், அதை நம்மிடம் போட்டோ ஆல்பமாகக் காண்பித்தார். அதை போட்டோவில்கூட பார்க முடியவில்லை. அத்தனை கொடூரமாக இருந்தது.

முருகன்

“நான் நினைத்திருந்தால், இன்று லட்சாதிபதியாக மாறியிருக்க முடியும். இறந்தவர்களிடமிருந்து நகை, பொருள் என ஆடம்பரப் பொருள்களை எடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ததில்லை. பிணம் தூக்கும் தொழில் என்றாலும், அதை நான் நேர்மையாகச் செய்துவருகிறேன்'' என்று கரைபடியாமல் பேசினார். “எனக்கு நான்கு குழந்தைகள் எல்லாரையும் கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிக்கவைக்கிறேன். எனக்கு இன்றுவரை உயர் அதிகாரிகள் மூலம் பாராட்டுதான் கிடைச்சிருக்கு. உதவிகள் இல்லை. செல்லூர் ராஜு , ராஜன் செல்லப்பா உள்ளிட்ட கட்சிக்காரங்க பலரையும், கலெக்டரையும் சந்தித்து மனு கொடுத்தேன். இதுவரை எந்த உதவியும் கிடைக்கலை. எனக்குத் தேவை பழைய ஆம்புலன்ஸ் மட்டும்தான். அதை வெச்சுப் பொழச்சுக்குவேன். ஏழை எளிய மக்களுக்கு மிகக்குறைந்த செலவில் உதவிகள் செய்ய காத்திருக்கேன். ஆனா, நான் வாங்குற 100 , 200 எங்க வாயிக்கும் வயித்துக்குமே பத்தலை'' என்று கண்ணீர் வடித்தார் முருகன் .


டிரெண்டிங் @ விகடன்