எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.நகர்வாசிகள்! அங்காடித் தெருவின் கதை- 10

தி நகர்

தியாகராய நகர், அனைத்து வசதிகளும் கொண்ட முக்கியப் பகுதியாக இன்றளவும் இருந்துவருகிறது. கோடம்பாக்கத்துக்கு அருகில் இருக்கும் நகர் என்பதால், பல்வேறு திரைப் பிரபலங்கள் தி.நகரில் குடியிருப்பதற்குக் காரணமாக இருந்தது.

குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு

சென்னைப் புறநகராக இருந்த ராமாபுரத்தில், எம்.ஜி.ஆர் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றைக் கட்டி அங்கேயே குடியிருந்தார். அரசியல்ரீதியிலும், சினிமாத் துறையிலும் பெரும் உச்சத்தைத் தொட்ட எம்.ஜி.ஆர்., 1970-களில் 'எம்.ஜி.ஆர் புரொடக்‌ஷன்ஸ்' என்ற பெயரில் படம் தயாரிக்கத் திட்டமிட்டார். இதற்காக ஓர் அலுவலகம் திறக்க வேண்டும் என்று விரும்பினார்.

தியாகராய நகரில் அமைதியான இடத்தில் ஓர் இடம் கிடைக்குமா என்று பலரிடமும் கேட்டு வந்தார். அப்போது, 'மதுரை வீரன்' படத்தின் தயாரிப்பாளர் லேனா செட்டியார் தி.நகரில் இருந்தார். அவரிடமும் எம்.ஜி.ஆர் சொல்லிவைத்தார். தாம் குடியிருந்த தெருவுக்கு அருகில் ஆற்காடு சாலையில் சேட் ஒருவருக்குச் சொந்தமாக வீடு இருப்பதாக எம்.ஜி.ஆரிடம் அவர் சொன்னார். எம்.ஜி.ஆர் அந்த வீட்டைப் பார்த்தார். அவருக்குப் பிடித்துவிட்டது. அதை வாங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். அப்போது ஆற்காடு தெருவில் இருந்த குடியிருப்புவாசிகள் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் வீடு வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

''எம்.ஜி.ஆர் இங்கு வீடு வாங்கினால், தங்களுடைய அமைதி கெட்டுவிடும்'' என்று அவர்கள் கருதினர். ''எம்.ஜி.ஆரைப் பார்க்கத் தினந்தோறும் ரசிகர்கள் வருவார்கள்; கட்சித் தொண்டர்கள் வருவார்கள். இதனால், இந்தப் பகுதியின் அமைதி கெட்டுவிடும்'' என்று கருதி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பகைக்க வேண்டாம்

எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் சிலரைக் கூப்பிட்டு எம்.ஜி.ஆர் பேசினார். எம்.ஜி.ஆர் அவர்களிடம் பேசிய பிறகு, அவர்கள் எதிர்ப்புக் குறைந்தது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு சேட்டிடம் இருந்து எம்.ஜி.ஆர் வீட்டை வாங்கினார். இரண்டு கிரவுண்ட் இடமுள்ள அந்த வீட்டில், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் இரண்டாவது மாடியில் எம்.ஜி.ஆருக்குத் தனி அறை கட்டப்பட்டது. பெரிய கேட் போடப்பட்டது.

எம்.ஜி.ஆர் தி நகர் வீடு

வீட்டுக்குக் குடிபோனதும், அந்தத் தெருவில் உள்ளவர்கள் பற்றித் தம் உதவியாளர்களிடம் விசாரித்தார். நாம் இங்கிருக்கும் காலங்களில் நமக்கு அவர்களால் தொந்தரவு ஏற்படுமோ என்றும் அவர் கருதினார். அந்தச் சமயத்தில் ஆற்காடு தெருவில் இருந்தவர்களில் பலர் எம்.ஜி.ஆர் மீது அவ்வளவாக அபிமானம் இல்லாதவர்கள். இதுகுறித்து உதவியாளர்கள் சொன்னதும், "தெருவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. நாம் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்" என்று அவர்களிடம் எம்.ஜி.ஆர் சொன்னார்.

துண்டுகளை திருடியவன்
 
தி.நகர் வீட்டில் ஒருமுறை, எம்.ஜி.ஆர் பயன்படுத்தும் துண்டுகளைத் துவைத்து வீட்டின் பின்புறம் காயப்போட்டிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் திருடன் ஒருவன் பின்வாசல் வழியே வந்து துண்டுகளை எடுத்துப் போய்விட்டான். இரவில் ரோந்து சென்ற போலீஸாரிடம் அவன் சிக்கிக்கொண்டான். போலீஸார் அவனிடம் விசாரித்தபோது எம்.ஜி.ஆர் வீட்டில் துண்டுகளைத் திருடி வந்ததாகக் கூறினான். பின்னர், இதுகுறித்து எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ''அந்தத் துண்டுகளைத் திரும்ப வாங்கவேண்டாம்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார். இந்தத் தகவல் போலீஸ் அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டது.
 
அவருடைய, பல முக்கியமான அரசியல் திருப்பங்களுக்குக் காரணமாகத் தி.நகர் வீடு இருந்தது. கட்சி தொடங்கும்போது ராயப்பேட்டையில் முறைப்படி கட்சி அலுவலகம் திறப்பதற்கு முன்பு, தி.நகர் வீடுதான் அ.தி.மு.க அலுவலகமாகச் செயல்பட்டது. அவ்வை சண்முகம் சாலையில் கட்சித் தலைமை அலுவலகம் திறக்கப்பட்ட பிறகுகூட, முக்கியமான கட்சிப் பிரச்னைகள் பற்றித் தி.நகர் அலுவலகத்தில்தான் எம்.ஜி.ஆர் விவாதிப்பார்.

உள்கட்சிப் பிரச்னைகள் தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசுவதும் இங்குதான் நடக்கும். முதலமைச்சர் ஆக இருந்தபோது, மதிய ஓய்வுக்காக ராமாபுரம் செல்வதற்குப் பதில், தி.நகருக்குச் செல்வார். ஆனால், இரவு எவ்வளவு நேரமானாலும் ராமாபுரம் சென்றுவிடுவார். இரவு எக்காரணம் கொண்டு தி.நகர் வீட்டில் தங்கமாட்டார்.

சில நேரம் சந்திக்க விருப்பம் இல்லாதவர்கள் எம்.ஜி.ஆரைத் தேடிவந்து தொந்தரவு செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, வீட்டைவிட்டு வெளியே வருவதற்காக தி.நகர் வீட்டில் மாற்று வழியும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்று சொல்கிறார்கள். எம்.ஜி.ஆரின் தியாகராய நகர் வீடு இப்போது எம்.ஜி.ஆரின் நினைவு இல்லமாகப் பராமரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் மற்ற சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் தி.நகர் நினைவு இல்லம் பராமரிக்கப்படுகிறது.
 
தியாகராய நகரில் வசித்துவந்த இன்னொருவரும் தமிழகத்தின் முதல்வர் ஆனார். அவர் வசித்துவந்த தி.நகர் வீடு பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!