சண்டை நீக்கி இணையவிருக்கும் குடும்பங்கள்?! சசிகலாவின் மாஸ்டர் ப்ளான்!

சசிகலா - ஜெயலலிதா

சிறையில் இருக்கும் சசிகலா, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை நினைத்து வேதனையில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் விரிசல் அதிகமாகிக் கொண்டு இருப்பது கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்தாகிவிடும் என்று குடும்ப உறவுகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் சசிகலா. கசப்புகளை மறந்து ஒன்றுசேர்வதற்கான இணைப்பு வேலைகளில் மன்னார்குடி குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.

 

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில், வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் கிலியில் இருக்கும்போதே... 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க பணம் கொடுக்க முயன்றார்' என்ற வழக்கில் டி.டி.வி.தினகரனைச் சுற்றிவளைத்தது டெல்லி போலீஸ். அதனால், அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தி... ''டி.டி.வி.தினகரனை மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தையே கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம்'' என்று அறிவித்தனர். தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டு இருந்த சசிகலா பேனர்களையும் அகற்றினர். அதே நேரத்தில், ''கட்சியில் இருந்து ஏற்கெனவே ஒதுங்கிவிட்டேன்'' என்று டி.டி.வி.தினகரன் அறிவித்து தனது ரூட்டை மாற்றினார். 

டி.டி.வி.தினகரன்

ஆனாலும், டெல்லி போலீஸ் பிடியிலிருந்து தப்ப முடியாமல் டி.டி.வி.தினகரன் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அரசு நிர்வாகம் தங்குத்தடை இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்தநிலையில், கட்சியிலிருந்து 45 நாள்கள் ஒதுங்கியிருந்த டி.டி.வி.தினகரன் ஜூன் 1-ம் தேதி திகார் ஜெயிலிலிருந்து வெளியே வந்தவுடன், ''அ.தி.மு.க-வில் தொடர்கிறேன். கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன். சசிகலாவைத் தவிர, அ.தி.மு.க-வில் இருந்து தன்னை நீக்க வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை'' என்று தடாலடியாகப் பேட்டியளித்தார். அவரது பேட்டி, முதல்வர் எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. டி.டி.வி.தினகரனின் அடையாறு இல்லாம் மீண்டும் பிஸியானது.

ஜூன் 5-ம் தேதி பெங்களூரு ஜெயிலில் சசிகலாவைப் பார்த்துவிட்டு வெளியே வந்த டி.டி.வி.தினகரன், ''கட்சியிலும் ஆட்சியிலும் என்ன நடக்கிறது என்று இன்னும் 60 நாள்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்'' என்று சசிகலா சொல்லி அனுப்பினார் என்ற தகவலைச் சொன்னார். அதன்பிறகும் எடப்பாடி அணி, டி.டி.வி.தினகரன் பேச்சை கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல முதல்வரும் அமைச்சர்களும் அரசுப் பணிகளில் முழுவீச்சில் இருந்தனர். இதற்கிடையில், திருத்தணி எம்.பி கோ.அரி, ''சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக விலக்கிவைக்க வேண்டும்'' என்று பேட்டியளித்தார். அதற்குப் பதிலடியாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், ''கட்சிக்கு டி.டி.வி.தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி என வெளிப்படையாகச் சொன்னால்தான் குழப்பம் இல்லாமல் இருக்கும். எடப்பாடி வாய் திறக்க வேண்டும்' என்றார். ஆனாலும் எடப்பாடி தரப்பிலிருந்து அதற்கு எந்தப் பதிலும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி

இப்படி மோதல் நாளுக்குநாள் முற்றிவரும் தகவல் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டுவிட்டது. அதுபோல மன்னார்குடி உறவுகளும் இந்த மோதலை ரசிக்கவில்லை. இப்போது எழுந்துள்ள பிரச்னைகளைப் பேசி தீர்க்காமல் விட்டுவிட்டால், ஆட்சிக்கும் கட்சிக்கும் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டுவிடும் என்ற கலக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அதனால், அவர் இந்தப் பிரச்னைகளுக்கு இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று திட்டம் வகுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக எடப்பாடி அணியிடம் பேச்சு நடத்தி சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல, டி.டி.வி.தினகரன் தரப்ப்பும் அமைதிகாக்க வேண்டும் என்று சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள். இந்தச் சமரசம் குறித்து ஜூலை முதல்வாரத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை மன்னார்குடி உறவுகள் சந்திக்கிறார்கள். அப்போது, சசிகலா என்ன சொல்லப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் டி.டி.வி.தினகரனின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று அவரது நெருங்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!