வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (03/07/2017)

கடைசி தொடர்பு:15:37 (03/07/2017)

விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் மயக்க ஊசி... சமாளிக்கத் திணறும் யானைகள்!

 யானைகள்!


பல நூறு ஆண்டுகளாக சென்று வந்த பாதையை மறக்காமல் மீண்டும் அவ்வழியாக வரும் யானைகள், தன் பாதைகள் மறிக்கப்பட்டு மனிதன் ஆக்கிரமித்திருப்பதைக் காண்கிறது. ஏதோ அவன் இடத்தில் யானைகள் அத்துமீறி நுழைந்து விட்டது போல எண்ணி, அதன் மீது தாக்குதல்களைத் தொடுக்கிறான் மனிதன். பட்டாசு வெடித்து அதனை விரட்டினால் பயத்தில் தன்னைத் தற்காத்துக்கொள்ள யானைகள் முற்பட்டால், அவற்றை முரட்டு குணம் கொண்ட கும்கி யானைகளால் பிடிக்கப்படும் அல்லது அங்கேயே சுட்டுக்கொல்லப்படும்.

இந்தியாவில் ஒரு நாளில் குறைந்தது நான்கு முறையாவது யானை-மனிதன் மோதல்கள் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.  யானைகள் மட்டுமல்ல, அனைத்து வனவிலங்குகளுக்கும் மனிதன் கொடுக்கும் மிகப்பெரிய  தண்டனை, அதனை அச்சுறுத்துவதே. ஒரு புள்ளி மானை நீங்கள் கட்டிப்பிடித்து விட்டு மீண்டும் காட்டிற்குள் விட்டால், அது மன அழுத்தத்தால் மரணிக்கக்கூட வாய்ப்பிருக்கிறதாம். 

தந்தத்திற்காகத்தான் கொல்லப்படுகிறோம் என்று அச்சமடைந்த ஆப்பிரிக்கா யானைகளின் அடுத்த தலைமுறை யானைகளுக்குத் தந்தங்களே வளர்வதில்லை என்ற செய்தியைப் படித்திருக்கலாம். அதற்கு மிக முக்கிய காரணம், அச்சுறுத்தல்தான். 

ஊருக்குள் புகுந்துவிடும் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிப்பதன் மூலம், அவற்றை பெரிய அளவில் அச்சுறுத்தாமலும், மன அழுத்தத்தில் இருந்தும் காக்க முடியும் என்ற கருத்து பல வருடங்களாக வனத்துறையால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அந்த மயக்க மருந்துகளால் தான் யானைகள் அதிகமாக மரணிக்கின்றன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். 

சமீபத்தில் கோவை அருகே, ஊருக்குள் புகுந்த யானை, நான்கு பேரைக் கொன்றுவிடுகிறது. யானையைக் காட்டிற்குள் விரட்ட முடியாத சூழலில், அதற்கு மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு முறை இரண்டு முறை அல்ல, மொத்தமாக மூன்று முறை மயக்கமருந்து செலுத்தப்பட்டு அந்த யானையைப் பிடித்தனர் வனத்துறையினர். நான்கு பேரைக் கொல்லும் அளவிற்கு கடுமையான மன அழுத்ததில் இருந்த யானைக்கு, மூன்று முறை மயக்க மருந்து செலுத்தி அதனை உடல் ரீதியாக வனத்துறை தாக்கியிருக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

யானைகள் விஷம்

இதுபற்றி செயற்பாட்டாளர் ‘வனம்’ சந்திரசேகரிடம் பேசினோம்.

“யானை என்பது ஆயிரம் மனிதர்களுக்குச் சமம். ஒரு யானை இறந்தால் ஆயிரம் மனிதர்கள் இறப்பது போல. காட்டை சமநிலைப் படுத்தும் பணியைச் செய்வது யானைகள்தான். ஆனால் அந்த யானைகளை எந்தெந்த வழிகளில் அச்சுறுத்த முடியுமோ அவை அனைத்தையும் மனிதன் இன்று செய்துகொண்டிருக்கிறான். ஒரு யானை ஊருக்குள் புகுந்துவிட்டது என்று சொல்வதே தவறு. அதன் இடத்திற்குள்தான் மனிதன் புகுந்திருக்கிறான். ஊருக்குள் யானை வந்துவிட்டது என்றால் அதனை முறையாகக் கண்காணித்து பாதுகாப்பாகக் காட்டிற்குள் விரட்டுவதே வனத்துறையின் வேலை. விரட்ட முடியவில்லை என்றால் அதனை கும்கி யானைகளின் உதவியோடு பிடித்துப் பாதுகாப்பாக காட்டிற்குள் விட வேண்டும். கும்கி யானைகளாலும் அந்த காட்டுயானையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்றால் மயக்கமருந்து செலுத்தி பிடிக்கவேண்டும். மயக்கமருந்தும் வேலை செய்யாமல் முரட்டுதனமாக இருந்தால் அந்த யானை சுட்டுக்கொல்லப்படும். அதெப்படி சுடலாம் என்று நீங்கள் கேட்டால் சட்டம் அப்படித்தான் சொல்கிறது. யானை, மூர்க்கமாக இருக்கும் சூழலில், யானையா? மக்களா? என்றால் மக்கள்தான் என்கிறது சட்டம். 

கடந்த ஆண்டு மகாராஜ் என்ற யானை கோவையில் செய்த கபளீகரம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனைக் கட்டுப்படுத்த மயக்கமருந்து செலுத்தப்பட்டது. சுமார் ஏழு டோஸ் அளவிற்கு மயக்க மருந்து செலுத்தி அந்த யானையைப் பிடித்தார்கள். பிடிக்கப்பட்ட யானை அடுத்த 60 மணி நேரத்தில் இறந்துவிட்டது.

மருத்துவமனையில், நம் உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அனைத்தையும் சோதித்த பிறகுதான் நமக்கு மயக்கமருந்து கொடுத்து ஆப்ரேஷன் செய்வார்கள். சராசரியாக 60 கிலோ இருக்கும் மனிதர்களுக்கே இவ்வளவு சோதனை செய்து மயக்க மருந்து கொடுக்கும்போது, 6000கிலோ எடை இருக்கும் வளர்ந்த ஒரு யானைக்கு வெறும் பார்வையிலேயே அதன் எடை, உடல் நிலை கணக்கிடப்பட்டு மயக்கமருந்து கொடுக்கப்படுகிறது. சரி, அப்படி ஒரு சூழலில் யானையின் உடல் எடையை அளக்க முடியாதுதான். ஆனால், காட்டிற்குள் எத்தனை யானைகள் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்தில் இருக்கும் யானைகளின் இயல்பு என்ன? அது எந்த பகுதியில் இருக்கும்? என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளும்? உடல் நிலை எப்படி இருக்கும் என்ற தோராய கணக்கீடு கூட வனத்துறையிடம் இல்லை. அதனை ஒரு யானையாக மட்டுமே கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

இன்று யானைகள் இயற்கையான உணவுகளை மட்டுமே சாப்பிடுவதில்லை. காட்டை விட்டு கீழ் இறங்கி விவசாய நிலங்களுக்குள் சென்று விருப்பப்பட்டதைச் சாப்பிடுகிறது. இங்கே இயற்கை விவசாயமா செய்கிறார்கள். வாழை முதல் தென்னை வரை அனைத்திலும் ரசாயன மருந்துகளைத் தெளித்து அனைத்தையும் விஷமாக்கி வைத்திருக்கிறார்கள். பசியால் கிடைத்ததைச் சாப்பிடுவோம் என்ற மனநிலையில் வரும் யானைகள், இந்த விஷத்தைத்தான் சாப்பிட்டாக வேண்டும். அப்படி இருக்க, உணவு முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்திருக்கும் யானைகளுக்கு, நேரடியாக மயக்க மருந்து செலுத்துவதால் அவற்றில் உடலில் எதிர்வினை உருவாகி யானைகளை மரணத்திற்கு கொண்டு செல்கிறது. இதைப் பற்றி ஒரு விரிவான ஆய்வை தமிழக வனத்துறை செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மயக்கமருந்து செலுத்துவதை முறைப்படுத்த வேண்டும். என்னை கேட்டால் மயக்கமருந்து கொடுப்பதை தடைசெய்ய வேண்டும் என்பேன்” என்கிறார் ’வனம்’ சந்திரசேகர்.

யானை

மயக்கமருந்து செலுத்தியோ அல்லது கும்கி யானைகளின் உதவியினாலோ பிடிக்கப்படும் யானைகள் நேராக ‘கிரால்’ என்ற அமைப்பிற்கு கொண்டு செல்லப்படும். கான்கிரீட், இரும்பு, மரம் இவற்றால் செய்யப்பட்ட கூண்டு போன்ற அமைப்பு அது. அதனுள் அடைக்கப்படும் யானைகளுக்கு, மயக்கம் தெளிய ஒரு ஊசி போடப்படும். மயக்கம் தெளிந்து பார்க்கும் யானைகள்தான் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கடுமையாகக் கோபம் கொள்ளும். பிளிரும். அந்தக் கூண்டில் தன் தலையை வைத்து இடித்து வெளியே வரப்பார்க்கும். தலையால் முட்டி முட்டி களைப்படைந்து தானாக அமைதியானால்தான் உண்டு. இல்லையென்றால் மீண்டும் மயக்க மருந்து கொடுக்கப்படும் கொடூரம் இப்போதும் அரங்கேறிவருகிறது. அதற்கு அந்த யானைகளை அங்கேயே சுட்டுக் கொன்று விடலாம்.

மயக்கமருந்து செலுத்துவதால் யானைகள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பது உண்மைதானா என்று வனத்துறையில் பணிபுரிந்த மருந்துவர் ஒருவரிடம் கேட்டோம். தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 


“இயற்கையில் சுற்றித்திரியும் யானைகளுக்கு மருந்து செலுத்தினால் அதன் உடல் நிலைப் பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தற்போது யானைகளைப் பிடிக்க மயக்க மருந்து செலுத்தப்படுகிறது என்ற கருத்தே தவறு. அவை மயக்க மருந்துகள் இல்லை. அவை, ஜைலடின், கீட்டமின் போன்ற தூக்கம் வரவழைக்கும் மருந்துகள். ஊசி செலுத்தப்பட்டவுடனேயே மயக்கமடையச் செய்யும் மருந்துகளும் சந்தைகளில் இருக்கிறது. ஆனால் அவற்றை காட்டுயானைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. அரசே அந்த மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறைக்கு உத்தரவு போட்டிருக்கிறது. இப்போது பயன்படுத்தும் மருந்துகள் பாதுகாப்பானதுதான்.

யானைக்கு மருந்து செலுத்தப்படும் முறை இதுதான். மருந்து நிரப்பப்பட்ட ஊசியை, துப்பாக்கியில் வைத்து சதைப்பற்று அதிகமாக இருக்கும் பகுதியில் சுடுவார்கள். அந்த ஊசியில் ஓர் அளவிற்குத்தான் மருந்தை நிரப்ப முடியும். அதிகமாக நிரப்பினால் துப்பாக்கியால் அந்த ஊசியை அதிக தூரத்திற்கு சுட முடியாது. மேலும் யானையின் தோல் கடினமாக இருப்பதால் துப்பாக்கி அதிவேகத்தில் சுட்டால்தான் ஊசித் தோலை துளைத்துக்கொண்டு உள்ளே செல்லும். எனவே அதிகமான மருந்து யானைக்கு செலுத்தமாட்டார்கள். செலுத்தவும் முடியாது. இது ஒருபுறம் இருக்க, அந்த யானை என்ன மனநிலையில் இருக்கிறது என்று மருத்துவர்கள் கணித்த பிறகுதான் ஊசி போடலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்கள். அதிக மூர்க்கத்துடன் இருந்தால் மட்டுமே ஊசி போடலாம் என்று அறிவுறுத்துவார்கள். தமிழக வனத்துறையில் கடந்த வருடம் வரை இரண்டே இரண்டு வன மருந்துவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆம்.! இதுதான் உண்மை. இந்த வேலைக்கு யாருமே வர மாட்டார்கள். தமிழகம் முழுவதும் அந்த இரண்டு பேர் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்க வேண்டும். வால்பாறையில் சிறுத்தை சிக்கிவிட்டது என்று போன் வரும். அடுத்த நொடி கோவையில் யானைக்குள் வந்துவிட்டது என்று போன் வரும். சிறுத்தையைப் பார்த்துவிட்டு யானையைப் பார்க்க ஓட வேண்டும். இப்படி ஓய்வில்லாமல் இருக்கும் மருத்துவர்கள், யானை ஊருக்குள் புகுந்துவிட்டது என்று சொன்னதும், நேராக வந்து பார்ப்பார்கள். எப்படியும்  மூர்க்கமாகத்தான் இருக்கும். ’சரி  ஊசி போட்டு பிடிக்கலாம்’ என்பார்கள். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களின் நிலையில் ஓர் நாள் கூட நீங்கள் இருக்க முடியாது. இப்படி உடனடி நடவடிக்கைகளால் யானைகளுக்கு ஊசி போடுதல் அதிகரிக்கிறது. பெரும்பாலும் அதன் உடல் நிலையை மருத்துவர்கள் பார்த்தவுடன் கணித்துவிடுவார்கள். யானை இறக்கிறது என்றால் ஊசி போடுவதால் மட்டும் இறக்கிறது என்று சொல்லிவிட முடியாது. மக்கள் வசிப்பிடத்திற்குள் வரும் யானைகள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கும். அதன் மனநிலை அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும். கவலையோடு டாஸ்மாக் செல்லும் குடிமகன்கள் எவ்வளவு குடித்தாலும் போதை ஏறவில்லை என்று சொல்வது போலதான் யானைகளும். மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கு எவ்வளவு மருந்து செலுத்தினாலும் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் ஐந்து டோஸ் ஆறு டோஸ் என்று போடவேண்டியதாக இருக்கும். சமீபத்தில் கோவையில் பிடிபட்ட யானைக்கும் மூன்று டோஸ் கொடுத்து தான் பிடித்தார்கள். 

வெறும் மருந்து மட்டுமே யானையைப் பாதிக்கிறது என்று சொல்லிவிட முடியாது. மேலும், வன மருந்துவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும். அதற்கு இந்த வருடம்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மருத்துவர்கள் அதிகரித்தாலே தேவையான ஆய்வுகளும், யானையைப் பிடிப்பதில் சில நவீன உத்திகளும் கண்டுபிடிக்கப்படும்.’’ என்றார்.

சங்க இலக்கியம் யானைகளை 170ற்கு மேற்பட்ட பெயர்களைக் கொண்டு அடையாளப்படுத்துகிறது. தமிழர்களின் வாழ்வியலிலும், வாழிடத்திலும் மிக முக்கிய அங்கமாக யானைகள் இருந்திருக்கின்றன என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. நாளொன்றிற்கு சுமார் 30 கிலோமீட்டர் வரை இடம் பெயரும் யானைகளால் வனத்தின் சமநிலை பேணப்படுகிறது. யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் மனிதர்களை (இனி ’ஊருக்குள் புகுந்த யானை’ என்ற சொல்லாடலைத் தவிர்ப்போம்.!) உடனடியாக வெளியேற்ற வேண்டும். அவற்றை அச்சுறுத்தினால் கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும். 

மருந்து ஊசிகளால் யானைகள் துளையிடப்படுவது தடுக்கப்பட வேண்டும். யானைகளின் இடம் யானைகளுக்கே கொடுக்கப்பட வேண்டும். யானைகள் இல்லையென்றால் வனம் இல்லை. வனம் இல்லையென்றால் மழை இல்லை. மழை இல்லையென்றால் மனிதனே இல்லை.


டிரெண்டிங் @ விகடன்