வெளியிடப்பட்ட நேரம்: 04:56 (04/07/2017)

கடைசி தொடர்பு:11:04 (04/07/2017)

ஜெயலலிதா சைக்கிள் ஓட்டிப் பழகிய தி நகர் வீதிகள்! அங்காடித் தெருவின் கதை பகுதி 11

அங்காடி தெரு

ஜெயலலிதா தி நகர் வீடு சென்னை தியாகராய நகர் பகுதியில் தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த சிலர் குடியிருந்த பெருமை உண்டு. அவர்களில் காமராஜர், எம்.ஜி.ஆர் குறித்து கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். ஜெயலலிதாவும் தி.நகரில்தான் வசித்தார் என்பதை, தி நகர் சோஷியல் கிளப் பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஜெயலலிதா படித்த பள்ளி

ஜெயலலிதா தமது தாயார், சந்தியா உடன் சென்னைக்கு முதன் முதலாக வந்தபோது, அடையாறு பகுதியில் உள்ள காந்திநகர் நான்காவது மெயின்ரோட்டில் உள்ள வீட்டில் இருவரும் தங்கி இருந்தனர். அப்போது ஜெயலலிதாவுக்கு நான்கு வயது. சில மாதங்கள் மட்டும் சென்னையில் இருந்தவர்கள் மீண்டும் பெங்களூர் சென்று விட்டனர். இதன் பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை வந்தனர். முதலில் தி நகர் மாசிலாமணி தெருவில் குடியிருந்தனர். அங்கு இருக்கும்போது சென்னை பாண்டிபஜாரில் இருக்கிற ஹோல் ஏன்ஜல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 5வது வரை படித்தார். அதன் பின்னர்தான் சர்ச் பார்க் பள்ளிக்கு மாறினார்.


ஜெயலலிதாவின் தாய் சந்தியா, தமது வருமானத்தில் தி நகர்  சிவஞானம் தெருவில் இடம் வாங்கி, அதில் வீடு கட்டினார். அந்த வீட்டுக்குக் குடிபோன பின்னர்தான், மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர் சபாவில் ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்துக்கு சிவாஜி கணேசன் வந்திருந்தார். அப்போது அவர், "இந்தப் பெண்ணைப் பார்த்தால், சினிமாக் கதாநாயகி போல இருக்கிறார். நிச்சயமாக இவர் படங்களில் நடிப்பார்" என்று தெரிவித்தாராம். அதே போல இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் சொல்லித்தான், இயக்குனர் ஶ்ரீதர், ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை  படத்தில் நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டார். அதன் பின்னர்தான் சந்தியாவை அழைத்துப் பேசினார்.

ராசியான வீடு

ஜெயலலிதாவின் பள்ளித் தோழிகள் பலர் சிவஞானம் தெருவில்தான் வசித்து வந்தனர். இந்தத் தெருவில்தான் ஜெயலலிதா சைக்கிள் ஓட்டிப் பழகினார். அப்போது ஜெயலலிதாவின் வீட்டில் சந்தியாவின் சகோதரிகள் ஒருவரான வித்யாவதியும் இருந்தார். அவர் ஒரு நடிகையாகவும், விமானப் பணிப்பெண் ஆகவும் பணியாற்றினார். அவருடன் தி.நகர் சோஷியல் கிளப்புக்கு டென்னிஸ் விளையாடுவதற்கு ஜெயலலிதா செல்வார். சந்தியாவின் இன்னொரு சகோதரியான அம்புஜா என்பவரும், தமது கணவர் கண்ணனுடன் (இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை)ஜெயலலிதாவின் சிவஞானம் தெருவீட்டில்தான் வசித்தனர்.
முதலில் கன்னடப்படத்தில் 14 வயதில் ஜெயலலிதா நடித்தபோது, சென்னை தி.நகரில்தான் இருந்தார். பின்னர் தமிழ்படங்களில் நடித்தபோதும் இந்த வீட்டில்தான் இருந்தார். அறிமுகம் முதல், தமிழகத்தில் ஒரு பெரும் நடிகையாகப் புகழ்பெற்றது வரை சிவஞானம் தெரு வீட்டில் இருந்தபோதுதான் நடந்தது. ஜெயலிதாவைப் பொறுத்தவரை இந்த வீட்டை தம்முடைய ராசியான வீடாகத்தான் அவர் கருதினார்.

ஜெயலலிதா, சந்தியா

அண்ணனுக்கு அஞ்சலி

ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவின் வருமானத்தில் போயஸ் கார்டனில் ஒரு இடம் வாங்கி, சந்தியா அதில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆனால், முழுமையாகக் கட்டி முடிக்கும் முன்பு 1971-ம் ஆண்டு சந்தியா இறந்து போனார். அதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து போயஸ்கார்டன் வீட்டுக்கு ஜெயலலிதா  குடிபுகுந்தார். இருந்தபோதிலும் அவர் சிவஞானம் தெரு வீட்டை எப்போதும் மறந்ததில்லை. சந்தியா இறக்கும் முன்பு, இந்த வீட்டை ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் பெயருக்கு உயில் எழுதி வைத்தார். இப்போது ஜெயக்குமாரின் மகள் தீபா, இந்த வீட்டில்தான் வசிக்கிறார். ஜெயக்குமார் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிவஞானம் தெரு வீட்டுக்கு ஜெயலலிதா  சென்றார்.
தி.நகரில் ஒரு வெள்ளை மாளிகை இருக்கிறது. அது யாருக்குச் சொந்தமானது என்று தெரியுமா? அது ஒரு பிரபல நடிகருக்குச் சொந்தமான வீடு. அவர் யார் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்