வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (05/07/2017)

கடைசி தொடர்பு:16:18 (05/07/2017)

”குண்டர்சட்ட வழக்கு ஆவணத்தில் போலீசார் மோசடி”- திருமுருகன் தரப்பு அதிரடி வாதம்

திருமுருகன்

திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்ட வழக்கில், பல ஆவணங்கள் தவறானவையாகவும் மோசடியாகவும் போலீசாரால் கொடுக்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேர் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள அறிவுரைக் கழகத்தில் கடந்த 29ஆம் தேதி முறையீடு செய்யப்பட்டது. 

திருமுருகன் காந்திக்காக பேராசிரியர் சிவக்குமாரும் டைசனுக்காக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணியும் அருள்குமாருக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாட்டாளர் முகிலனும் இளமாறனுக்காக திருமுருகனின் தந்தை பொறியாளர் சா. காந்தியும் வாதிட்டனர். அட்வைசரி போர்டு எனப்படும் அறிவுரைக் கழகத்தின் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமன், மாசிலாமணி, ரகுபதி ஆகியோர் முறையீடுகளை விசாரித்தனர். 

விசாரணையில், “ மெரினா கடற்கரையில் அஞ்சலி செலுத்திய 34 பேரை அன்று இரவு 7 மணிக்கு கைதுசெய்து, பட்டினப்பாக்கம் மீனவர் சமுதாயக் கூடத்தில் போலீசார் தங்கவைத்துள்ளனர். இரவு 9 மணியளவில் அவர்களில் 17 பேரை மட்டும் விடுவித்தனர். விடுவிக்கப்படாத 17 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லப்பட்டனர். அதில் திருமுருகனின் தாடையில் தாக்குதலால் ஏற்பட்ட வீக்கம் எக்ஸ்ரே படமாகவும் எடுக்கப்பட்டது. அதையடுத்து நள்ளிரவு மெரினா டி-5 போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மறுநாள் ஆகிவிட்ட நிலையில், 1.30 மணிக்கு நடுவர் வீட்டில் 17 பேரும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மாலையிலிருந்து இதை தொடர்ச்சியாக தொலைக்காட்சி செய்தியில் காட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் திருமுருகனின் கைது அட்டையில் காவல்நிலையத்துக்கு கொண்டுவந்த நேரம் 21ம் தேதி இரவு 7 மணி என மாற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் திருமுருகனே குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார் எனக் கூறுகிறார்கள். ஆனால், வாக்குமூலத்தில் அவரின் கையெழுத்து இல்லை. போலீசின் கட்டுப்பாட்டில் 7 மணி நேரம் திருமுருகன் உட்பட 34 பேரும் இருந்தும், அந்த நேரத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தால், ஆய்வாளர் அதை காவல் அடைப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பார். அப்படி அவர் குறிப்பிடவே இல்லை” என்றும், 

“ ஒருவரைக் கைதுசெய்யும்போது எங்கு, எப்போது, எதற்காகக் கைதுசெய்யப்பட்டார் எனும் விவரத்தை, கைதி சோதனைப் பதிவேட்டில் குறிப்பிடவேண்டியது கட்டாயம். அது திருமுருகன் மீதான குற்றச்சாட்டுப் புத்தகத்தில் இணைக்கப்படவில்லை. ஏனென்றால் மொத்தம் 34 பேர் கைதுசெய்யப்பட்டதும் அவர்களில் 17 பேர் விடுவிக்கப்பட்டதால், இதைக் காட்டினால் கேள்வி வரும் என்பதால் ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதை நேரில் பார்த்த சாட்சி ஆதாரத்தையும் தாக்கல்செய்துள்ளோம். ஊடகச் செய்திகளிலும் இதை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும். ” என்றும், 

” வள்ளுவர் கோட்டத்தில் பணமுடக்கப் பிரச்னை தொடர்பான ஆர்ப்பாட்டம் செய்த 2016 டிசம்பர் வழக்கில், திருமுருகன் கைதுசெய்யப்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் அதில் கைது செய்யப்பட்டதாக கைதி சோதனைப் பதிவேடு இப்போது இணைக்கப்பட்டுள்ளது” என்றும் வாதிடப்பட்டது. 

மேலும், “ மெரினா வழக்கில் மே 21 அன்று திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்ட பிறகு, ஜூன் 7ஆம் தேதி சிறையில்தான் அவரை அவரின் தந்தை பொறியாளர் காந்தி நேரில் பார்த்தார். ஆனால் கைதுக் குறிப்பாணையில் திருமுருகனின் தந்தை காந்தியின் கையெழுத்தை போலியாக போலீசாரே போட்டுக்கொண்டுள்ளனர். இது மாபெரும் ஆள்மாறாட்ட மோசடியாகும்’ என்று திருமுருகன் தரப்பில் கூறியதுடன், காந்தியிடம் அறிவுரைக் கழக உறுப்பினர்கள் விசாரணை செய்துகொள்ளலாம் என்றும் கோரிக்கைவைத்தனர். அது தேவையில்லை என நீதிபதிகள் கூறிவிட்டனர். 

காந்தியிடம் மெரினா போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர் வாக்குமூலம் பெற்றதாகவும் ஆவணப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் அதை எங்கு, எப்போது பெறப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை. ஆய்வாளரின் கையொப்பம் மட்டும் உள்ளது; தேதிகூட இல்லை; எனவே, அது பொய்யான ஆவணம் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. 

மேலும், ” மெரினா கைதின்போது பேருந்துகளை உடைத்ததாக போலீசால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் சேத மதிப்பு 0 அதாவது ஒன்றுமில்லை என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். பொருட்சேதம் 100 ரூபாய் அளவுக்காவது இருந்தால்தான், திருமுருகன் தரப்பினர் மீது பதியப்பட்டுள்ள பொதுச்சொத்து சேத வழக்கு செல்லும்” என்றும் திருமுருகன் தரப்பினர் வாதிட்டனர்.  

இது குறித்து சூழல் செயல்பாட்டாளர் முகிலனிடம் பேசியபோது, ” இவற்றையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் போலீஸ் ஆணையர் எந்திரத்தனமாக குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய ஒப்புதல் அளித்துள்ளார். மே 31ஆம் தேதி நீதிமன்ற முத்திரையை வைத்து அதற்கு முந்தைய 28ஆம் தேதியில் குண்டர்சட்ட அடைப்புக்கு போலீஸ் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு ஏற்ப ஆவணங்களை சோடித்துள்ளனர். எனவே, இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று வாதிட்டிருக்கிறோம். போலீஸ் தரப்பு ஆவணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகளைச் சான்றுகளுடன் முன்வைத்திருக்கிறோம்” என்று கூறினார். 

குண்டர் தடுப்புச் சட்ட வழக்கில் பொதுவாக ஏழு வாரங்களுக்குள் அறிவுரைக் கழகமானது கூடி முறையீட்டை விசாரிக்கும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 32ஆவது நாளில் முறையீடு விசாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான தன்னுடைய அறிவுரையை உள்துறைச் செயலாளருக்கு அனுப்பிவைக்கும். அதன்பேரில் அவர் தக்க உத்தரவைப் பிறப்பிக்கவேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்