Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

அமலானது ஜி.எஸ்.டி...! இனி மாநில உரிமைகள் என்னாகும்? #Analysis

GST

1986ம் ஆண்டு வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என துவங்கிய பயணம், 31 ஆண்டுகளுக்கு பின்னர் ஜி.எஸ்.டி.யாக அமலாகி இருக்கிறது. ஜி.எஸ்.டி. என்ற பெயரில் ‘ஒரு வரி’ முறையை, அறிமுகப்படுத்தி 17 ஆண்டுகள் கடந்து விட்டன. ஜி.எஸ்.டி. மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தி 6 ஆண்டுகள் கடந்து விட்டன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரே ஜி.எஸ்.டி. அமலாகி இருக்கிறது.

'வரி மேல் வரி எனும் முறை நீங்கியிருக்கிறது. தங்கு தடையின்றி தொழில்கள் நடக்கும். உற்பத்தி அதிகரிக்கும்' என ஆகச்சிறந்த வரி முறையாக இப்போது சொல்லப்படும் இந்த ஜி.எஸ்.டி. அமலாக ஏன் இத்தனை ஆண்டுகள் ஆனது தெரியுமா?. மாநில அரசுகள் தங்கள் நிதி ஆதாரம் மீதான உரிமையையும், வரி வருவாயையும் இழக்கும் என்பதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும் என்பதுதான்.

2013ம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்தார். அப்போது ஒரு மாநிலத்தின் முதல்வர் இதை கடுமையாக எதிர்த்தார். "மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம் காக்கப்பட வேண்டும்," என கொந்தளித்தார். அதற்கு பின்னர்தான் பிற மாநில முதல்வர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கினர். அவர் குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி.

GST Modi

அன்று ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து, மாநில உரிமைகள் பாதிக்கப்படும் என முழங்கிய நரேந்திர மோடிதான், இன்று இந்தியாவின் பிரதமராக ஜி.எஸ்.டி. சிறந்த வரி முறை எனச்சொல்லி, அதை அமலாக்கியும் இருக்கிறார். "ஜி.எஸ்.டி.,யை வரி சீர்திருத்தமாக மட்டும் நான் பார்க்கவில்லை. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு சாட்சியாக, இது அமைந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிச்கு எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நடவடிக்கை," என்கிறார் அவர். உண்மையில் ஜி.எஸ்.டி. மாநில உரிமையை பாதிக்குமா? எந்த வகையில் பாதிக்கும்? அதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும் அமைப்பு. பல கலாசாரம், பழக்க வழக்கங்கள் கொண்ட, பல மொழிகளை பேசக்கூடிய மக்களைக்கொண்ட நாடு இந்தியா. அதன் அடிப்படையில்தான் யார் எப்படி வரி விதிப்பது என கேள்வி எழுந்த போது, இருவரும் வரி விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, மத்திய அரசு நேரடி வரியையும், மாநில அரசு மறைமுக வரியையும் விதிக்க முடிவு செய்யப்பட்டது. அரசியல் சாசன சட்ட விவாதங்கள் நடைபெறும்போது 'விற்பனை வரி விதிக்கக் கூடிய உரிமை மாநிலங்களிடம் இருக்க வேண்டும்' என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். அந்த உரிமைதான் இன்று பறிபோய் இருக்கிறது.

இதில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கொண்டு வரப்பட்டாலும், மாநிலங்கள் தனக்கு தேவையான வரியை கொண்டு வர போராட வேண்டியிருக்கும். ஏனென்றால் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அதை ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் தீர்மானிக்கும். மாநில நிதியமைச்சர்கள் இந்த கவுன்சிலில் இருப்பார்கள். தற்போதைய சூழலில் ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது மத்திய அரசுக்கு சாதகமான ஒன்றாகவே கருதப்படுகிறது. எனவே மாநிலங்கள் விரும்பும் அடிப்படையில் வரிகளை கொண்டு வருவது என்பது சிக்கல் நிறைந்தது.

GST

ஏற்கெனவே இருந்த வரி முறையின் அடிப்படையில், நேர்முக வரி (Direct Tax) என்பது மத்திய அரசிடம் இருக்கிறது. விற்பனை வரி போன்ற மறைமுக வரிகள் தான் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், ஒரு மாநிலத்தில் இருந்து பெறப்படும் நேரடி வரி என்பது மத்திய அரசுக்கு சென்று, நிதி ஆணையத்தின் மூலம் பிரித்து வழங்கப்படும். பின் தங்கிய மாநிலங்களின் வளர்ச்சிக்கு பெரும் தொகை ஒதுக்க வேண்டியுள்ளதால், தமிழகம் போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு நேரடி வரி மூலம் கிடைக்கும் வருவாய் என்பது குறைவாக கிடைத்து வருகிறது.  

இந்தச் சூழலில் மாநில அரசுகளே விதித்து, வசூலித்துக் கொள்கிற வரிகளும் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இருந்த வரிவிதிப்பு முறையில் பொருட்கள் உற்பத்தியாகும் மாநிலங்களில் அதற்கான வரியை விதித்துக் கொள்ளலாம். ஆனால் ஜி.எஸ்.டி. முறையில் பொருள்கள் வாங்கப்படும் இடத்தில்தான் வரி விதிக்கப்படும். எனவே தமிழ்நாடு, குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகம் போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதனால்தான் ஜி.எஸ்.டி அமலாகும் முதல் 5 ஆண்டுகளுக்கு 100 சதவீதம் இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு தர மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் கூட உற்பத்தி மாநிலங்களுக்கு இது கடுமையான சவாலாகவே இருக்கும். வரி வசூலிக்கிற, விதிக்கிற உரிமை இழப்பது என்பது மாநிலங்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே மாநிலங்கள் ஜி.எஸ்.டி.யின் மூலம் நிறையவே இழக்க நேரிடும்.

ஜி.எஸ்.டி அமலானதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையும், வருவாயும் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை மாநில அரசுகளும் ஒப்புக்கொள்ளவே செய்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஜி.எஸ்.டியை ஆதரித்தபோதும், 'ஜி.எஸ்.டி மாநில உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்' என்பதை அக்கட்சி ஒப்புக்கொள்ளவே செய்கிறது. ஜெயலலிதா ஜி.எஸ்.டி.யை கடுமையாக எதிர்க்க, மாநில உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தான் மிக முக்கியமான காரணமாக இருந்தது. ஜி.எஸ்.டி அமலாகும் முதல் 5 ஆண்டுகளுக்கு 100 சதவீதம் இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு தர மத்திய அரசு ஒப்புக்கொண்டது என்பது மாநில வருவாய் பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

Free Cycle Scheme

மாநிலத்தின் வருவாயை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்படுவது என்பது மக்கள் நலத்திட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் நலன் சார்ந்து சிறப்பு திட்டங்களுக்கு நிதி பெறுவது என்பது சிக்கலுக்குள்ளாகும். உதாரணமாக தமிழகத்தில் பெண்களின் நலனுக்காக, பெண்களின் உயர்கல்வி முழுக்க இலவசாமாக்கலாம் என தமிழக அரசு திட்டமிட்டால், அதற்கான நிதியை எப்படி திரட்டுவது என்பதில் சிக்கல் ஏற்படும். மாநில அரசு மத்திய அரசிடம் கையேந்த வேண்டியிருக்கும். தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வரும் இலவச திட்டங்கள் தொடர்வதில் சிக்கல் ஏற்படும்.

வரி விதிப்பு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததால், மாநில அரசின் பட்ஜெட் என்பது பயனற்று போய் விடும். மாநில அரசு சுயமாக இயங்குவது என்பதை பாதிக்கும். மாநில அரசின் சுதந்திரங்கள் பறிபோக வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதுவரை செயல்பட்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள். நாளடைவில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கும் குறையக்கூடும் என்றுகூட கணிக்கப்படுகிறது.

மாநில அரசு வரி விதித்து, வசூலிக்கும் முறை இருக்கும்போதே, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பல இலவச திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கடன் பெற வேண்டியுள்ளது. மத்திய அரசு கொடுக்கும் பணத்தை மட்டுமே சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் தொகை என்பது மிகவும் சொற்பமானதாகவே இருந்து வருகிறது. வருவாய், அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசிடம் குவிவது என்பது மாநிலங்களின் பங்கை குறைக்கவே செய்யும்.

Free Rice Scheme

வரி என்பது வருவாயை மட்டுமே தீர்மானிப்பதாக இல்லாமல், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளையும் இதன் மூலம் எடுக்க முடியும். உதாரணமாக தமிழகத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. கேரளாவில் துரித உணவுகள் (ஃபாஸ்ட் புட்) பயன்பாட்டை தவிர்க்க, அந்த உணவுகளின் மீது அதிக வரியை விதித்திருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக தமிழகத்தில் உற்பத்தியாகும் பட்டாசு, கிரைண்டர் போன்ற சில தொழில்களின் நலனுக்காக அந்த தொழில்களுக்கு குறைந்த வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சில மாநிலங்களில் புகையிலை பொருட்களுக்கு சர் சார்ஜ் விதிக்கப்பட்டு, அது சில திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. அமலாகியுள்ளதால் எந்த வரியையும் மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. அந்த உரிமை மாநில அரசிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும்.

இந்தியாவிலேயே மாநில சுயாட்சிக் கொள்கையை மிக வலுவாக எழுப்பியது தமிழகம்தான். இதற்கான வரலாற்று பின்னணியையும் தமிழகம் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா வரையிலான தமிழக அரசியல் தலைவர்கள் ஜி.எஸ்.டியை கடுமையாக எதிர்த்ததன் பின்னணியும் மாநில சுயாட்சிக் கொள்கையை பின்பற்றியதுதான். இந்த சூழலில் தமிழகம் ஜி.எஸ்.டியை ஆதரிப்பது என்பது அரசியல் போக்கில் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படும்.

Parliment

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நேரடி வருவாயை பொறுத்துதான் தீர்மானிக்கப்படும். நேரடி வருவாய் என்பது வருமானத்தை பொறுத்து விதிக்கப்படும் வரி. இதில் ஏழைகளை இந்த வரிகள் கட்டுப்படுத்தாது. மறைமுக வரிகள் ஏழைகளை கடுமையாக தாக்கும் என்பதால், மறைமுக வரி என்பது உண்மையில் பிற்போக்குத்தனமானதுதான் என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. நாட்டில் சமத்துவம் இருக்க வேண்டும் என்றால் மறைமுக வரி வருவாய் குறைவாகவும், நேரடி வரி வருவாய் என்பது அதிகமாகவும் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தியாவில் தற்போது நேரடி வரி வருவாய் என்பது 38 சதவீதத்துக்கும் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. மீதமுள்ள 62 சதவீத வரிகள் மறைமுக வரியாகத்தான் இருக்கிறது. அதாவது மக்கள் மீது சுமைகள் அதிகளவில் ஏற்றப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. மறைமுக வரிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேர்முக வரி என்பது குறைந்து வருகிறது. இது நிச்சயம் வளர்ச்சி என சொல்வதற்கில்லை.

17 விதமான வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வரி ஆக்கியிருக்கிறார்கள். இது மக்களுக்கு பலனா அல்லது பாதகமா என்ற விவாதம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. வர்த்தகம் சுலபமாக நடக்கும், உற்பத்தி அதிகரிக்கும், வேலைவாய்ப்பு அதிகமாகும் என சொல்லப்படும் அதே நிலையில், பண மதிப்பு நீக்க அறிவிப்பு செய்து 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சிறு, குறு உற்பத்தியாளர்களையும், வியாபாரிகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

ஒரு மாநிலத்தில் மட்டும் தொழில் செய்பவர்  37 ரிட்டன்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பெரு நிறுவனங்கள் தனி கணக்கு துறையை நிர்வகிப்பார்கள் என்பதால் அவர்களுக்கு சிக்கல் இருக்காது. ஆனால் சிறு, குறு தொழில் செய்பவர்கள், வியாபாரிகளின் நிலை கடுமையாக பாதிக்கும். பென்ஸ் கார்களுக்கான வரியை குறைத்து, தீப்பெட்டிக்கு, கடலை மிட்டாய்க்கும் வரி உயர்த்தியது சாமானியர்களை பாதிக்கும். ஆனால் இதையெல்லாம் மீறி ஜி.எஸ்.டி மாநில உரிமைகளை பாதிக்கும்.

ஜி.எஸ்.டி. அமலாகியுள்ளதால், மாநிலங்கள் மத்திய அரசிடம் கேயேந்தும் நிலைக்குச் சென்று விடக்கூடாது. ஒருவேளை அவ்வாறு நடந்தால், நம் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கித்தந்துள்ள கூட்டாட்சித்தத்துவம் அழிக்கப்பட்டு விடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement