வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (06/07/2017)

கடைசி தொடர்பு:09:54 (06/07/2017)

கூட்டுக்குடும்பத்தின் அடையாளம்! நடிகர் திலகம் சிவாஜி வீடு! அங்காடித் தெருவின் கதை 12

அங்காடித் தெரு

ணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால், ஒரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு  

இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.

“இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று  அழைக்கப்பட்டது.

பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்படார்.

சிவாஜி வீடு

தந்தை பெயரில் வீடு

இந்த இஸ்லாமியரிடம் இருந்து1959-ம் ஆண்டு தமது தந்தை பெயரில் சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதன் பின்னர் வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார். செவாலியே விருது வாங்கியதைப் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு போக் சாலைக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயர் வைக்கப்பட்டது".

சிவாஜியின் வீடு குறித்து சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். "சிவாஜி நடித்த சில படங்களின் படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கின்றன. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.  

அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும். லேசாக அழுக்குத் தென்பட்டாலும், சிவாஜி அதனை சுத்தம் செய்யச் சொல்வார். தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணியாற்றினர்.

சிவாஜியின் ஆசை

சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிவாஜியின் சகோதரர் சண்முகம் இறந்தபோது, எம்.ஜி.ஆர் வந்திருந்தார். ஷுட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். இயக்குநர்களிடம் கதை கேட்பது எல்லாம் ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் நடக்கும். சில நேரங்களில் மட்டும் இயக்குநர்களை வீட்டுக்கு வரச்சொல்லிக் கதை கேட்பார். சிவாஜி வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். தமது பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று. காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்தி விட்டுப் போனார். அதற்கு அடுத்த நாள் காமராஜர் மரணம் அடைந்தார். இந்தப் பிறந்தநாள் வாழ்த்தை சிவாஜி அடிக்கடி நினைவு கூறுவார்.  

சிவாஜி கணேசன்

2010-ம் ஆண்டு, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இன்றளவும் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சிவாஜியின் சகோதரர் சண்முகத்தின் குடும்பத்தினரும் இங்குதான் வசிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை சிவாஜி பெருமையுடன் கருதினார். அவரது ஆசை அவர்களின் குடும்பத்தினரால் இன்றளவும் நிறைவேற்றப்படுகிறது" என்றார்.
சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டுக்கு வந்த 'இசைக்குயில்' யார் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

 முந்தைய அத்தியாயங்களைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்