“கேள்வி கேட்க யாரும் இருக்கக் கூடாது!” என்ன சொல்ல வருகிறீர்கள் திரு. நரேந்திர மோடி? | Weakening the National Green Tribunal Is Not a Good News

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (06/07/2017)

கடைசி தொடர்பு:11:49 (06/07/2017)

“கேள்வி கேட்க யாரும் இருக்கக் கூடாது!” என்ன சொல்ல வருகிறீர்கள் திரு. நரேந்திர மோடி?

நரேந்திர மோடி

திராமங்கலம், ஜி.எஸ்.டி என்று மக்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டு, போராடிக் கொண்டிருக்க... சத்தமே இல்லாமல், மத்திய அரசு நாம் அஞ்சத்தக்க இன்னொரு வேலையைச் செவ்வனே செய்து இருக்கிறது. சூழலியல் செயற்பாட்டாளர்களின் ஒரே நம்பிக்கையான தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தைக் குறைத்து இருக்கிறது. மன்னிக்கவும்... முற்றும் முழுவதுமாக பறித்தே இருக்கிறது! 

“நியூட்ரினோ, கங்கை மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்”

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்'மக்களே எந்த அதிகாரமும் இல்லாமல், அரசின் பல்வேறு அழுத்தங்களில் உழல்கிறோம்... இதில் யாருக்கு அதிகாரம் இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன...?' என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. ஆனால், இது ஏதோ ஓர் அமைப்பு... அதற்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று சுலபமாகக் கடந்து சென்றுவிட முடியாது. ஆம், அரசின் சீழ்பிடித்தக் கட்டமைப்பில் உள்ள உருப்படியான சில அமைப்புகளில் இதுவும் ஒன்று. இது வளர்ச்சிக்கான அழிவைக் கேள்வி கேட்டது. நிறுவனங்களுக்காகக் காடுகள் வரைமுறையற்று அழிக்கப்படுவதை... மலைகள் குடையப்படுவதை எதிர்த்தது; கேள்வியும் எழுப்பியது. இந்தியச் சூழலில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 'கங்கையின் ஒரு சொட்டு நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை. மக்களின் பணத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்' என்று மத்திய அரசுக்கு அசெளகர்யம் கொடுத்தது இந்த அமைப்புதான். 

இன்னும் நெருக்கமாகத் தமிழகச் சூழலில் இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், தேனி மலையைச் சுரண்டும் திட்டமான  நியூட்ரினோவுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதிக்குத் தடை விதித்தது இந்த அமைப்புதான். வாழும் கலையைச் சொல்லித்தரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்குக் கோபம் ஏற்படுத்தியதும் இந்த அமைப்புதான். வாழும் கலை மாநாடு கடந்த ஆண்டு யமுனைப் படுகையில் நடந்ததுதானே? அந்த மாநாட்டுக்குப் பின் அந்தப் படுகையை ஆய்வு செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்... 'யமுனை சமவெளியைச் சரிசெய்ய 42 கோடி ரூபாய் பணமும், 10 ஆண்டுகளும் ஆகும்' என்று அறிக்கை கொடுத்து வாழும் கலை அமைப்புக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. 

இலக்கற்ற வளர்ச்சிக்காக, முடிவிலிக்கு அப்பால் சென்றுவிட வேண்டும் என்பதற்காக, எந்தத் தொலைநோக்குத் திட்டங்களும் இல்லாமல் செல்லும் அரசின் பயணத்துக்கு வேகத்தடையாக இருந்தது இந்த அமைப்பு. காடு, மலை எல்லாவற்றையும் பணமாக மட்டுமே பார்க்கும் நம் அரசுகளுக்குச் சூழலியல் பார்வையில் அசெளகர்யமான சில கேள்விகளைக் கேட்டது, இந்த அமைப்பு. 2010- ம் ஆண்டு உண்டாக்கப்பட்ட இந்த அமைப்பைத்தான் பலவீனப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு.

“சர்வாதிகாரத்துக்கான பாதை”

நேரடியாக இந்த அமைப்பைச் சிதைத்தால் கேள்விகள் எழும் என்ற அறமற்ற தெளிந்த பார்வையில், ‘நிதி மசோதா 2017’ மூலமாக தேசிய தீர்ப்பாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி தன்னாட்சி அதிகாரம் கொண்டிருந்த இந்த அமைப்பில், இனி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் பிடி ஓங்கும். அதாவது இத்தனை நாள்களாக யாரின் முடிவுகளை இந்தத் தீர்ப்பாயம் கேள்வி கேட்டுக் கொண்டும் தடை விதித்துக்கொண்டும் இருந்ததோ... இனி நேரடியாக அந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இது போகும். அதுமட்டுமல்லாமல், தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களை மத்திய அரசுதான் முடிவு செய்யும். 

இப்படியான சூழலில், இனி இந்தத் தீர்ப்பாயம் எப்படி இயங்கும்? ஜனநாயகத்துவமான அமைப்புகளைச் சிதைப்பதன் மூலம் என்ன செய்தியைச் சொல்ல வருகிறார் திரு. நரேந்திர மோடி?

தம்மை யாரும் கேள்விகள் கேட்கக்கூடாது; எங்கள் விருப்பப்படிதான் நாங்கள் நடப்போம்; மக்களின் கேள்விகளையும், உரையாடலையும் வெறுக்கிறோம் என்றா?

ஆம் என்றால், இது நிச்சயம் யாருக்கும் நல்ல செய்தி அல்ல. உரையாடலை விரும்பாமல், இறுகிக்கொண்டே இருப்பது சர்வாதிகாரத்துக்கான பாதை. அந்த இருள் கவ்விய பாதை நிச்சயம் சரியான இலக்கில் கொண்டுபோய் விடாது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close