வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (06/07/2017)

கடைசி தொடர்பு:16:52 (06/07/2017)

பள்ளிக்கல்விக்கான வல்லுநர் குழு குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து என்ன?

பள்ளிக்கல்வி வல்லுநர் குழு

ள்ளிக்கல்வி கல்விமுறையை மேம்படுத்த நியமிக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு வரவேற்கத்தக்கது என்றும் இதில் சில விடுபடல்கள் இருக்கின்றன என்றும் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்பட மற்ற கல்விவாரியங்களின் பாடத்திட்டத்தைவிட சிறப்பானதாக, தமிழகப் பள்ளிக்கல்வி கலைத்திட்டம் (curriculum) மற்றும் பாடத்திட்டம் (syllabus ) இரண்டையும் மேம்படுத்த வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணனும் உறுப்பினர்-செயலராக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரும் உறுப்பினர்களாக தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, வேளாண்மைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் இராமசாமி, சென்னை கணித அறிவியல் நிறுவனப் பேராசிரியர் ஆர்.ராமானுஜம், எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், உயிரி நுட்பவியல் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் ஆகியோருடன், முனைவர் ஆர். பாலசுப்பிரமணியன், கல்வியாளர் கலா விஜயகுமார், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வளர்ந்துவரும் உலக நிலைமையில் இந்த கட்டத்திலாவது வல்லுநர் குழு அமைத்தார்கள் என்பது வரவேற்கக்கூடியதே; வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று, கல்வித்துறையில் புதுப்புது மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம் எனப் பல தரப்பினரும் வரவேற்றுப் பாராட்டுகின்றனர். இதேவேளையில் பள்ளிக்கல்வியை மேம்படுத்த உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி துறைகளைச் சேர்ந்தவர்களும் கல்வியியல் செயல்பாட்டில் இல்லாதவர்களுமே கணிசமாக இடம்பிடித்துள்ளனர் என்றும் விமர்சனமும் எழுந்துள்ளது. பரவலாக அறியப்பட்ட கல்வியியலாளர்கள் பட்டியலில் விடுபட்டிருப்பதாகவும் ஆதங்கமும் நிலவுகிறது. 

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது,“குழுவுக்குத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன், கல்விக்கொள்கையைச் சரியாக வகுக்கக்கூடியவர். தனியார்மயத்துக்கு எதிராக நிற்பவர். பேரா. இராமானுஜம் சிறந்த கணிதவியல் அறிஞர். பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான கணிதப் பாடத்தைக் கற்பிக்கவேண்டும் என்பதில் பார்வை உடையவர். சுற்றுச்சூழல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், ஓவியர் மருது போன்றவர்களும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்றார். 

பள்ளிக்கல்வி தொடர்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கல்வியாளர்கள் பேரா. பிரபா.கல்விமணி, பேராசிரியரும் எழுத்தாளருமான ச.மாடசாமி, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, கல்வியியலாளர் பொள்ளாச்சி நசன் போன்றவர்கள் இதில் விடுபட்டிருப்பது அதிருப்தியளிக்கிறது என்கிறார்கள், பள்ளிக்கல்வியில் மாற்றுமுறைகளுக்கான செயல்பாட்டாளர்கள். 

பள்ளி பாடநூல்

கல்வியாளர் பேரா.பிரபா கல்விமணியோ, ஏகத்துக்கும் அரசின் இந்த முயற்சியை வரவேற்றுப் பேசுகிறார்.

“பள்ளிக்கல்வித் துறையில் நாற்பது ஆண்டுகளாக இல்லாத ஒரு முயற்சிகள், இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன; ஆனந்தகிருஷ்ணனின் தலைமை, சிறப்பானது. கல்விமுறையில் ஜனநாயகத் தன்மை வேண்டும். மற்ற கல்வியாளர்கள் மட்டுமல்ல, கல்வி குறித்தான ஆர்வமுடைய அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும். வெளியிலும் நிறைய பேர் இப்படி இருக்கலாம். அவர்களின் பங்களிப்பும் அமைந்தால் கல்விமுறை மேலும் செழுமையடையும்” என்கிறார், கல்விமணி.

பிரின்ஸ் கஜேந்திரபாவைப் போலவே, ஆசிரியர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், கல்வி மேம்பாட்டுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி. 

”பெரிய படிப்பாளிகள், உயர்கல்வி நிறுவனங்களில் பொறுப்பில் இருந்தவர்களை நியமித்தால், அரசியல்சாசனத்தின் குறிக்கோள்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், மாணவர்கள் கற்கும் சூழல், குடும்பச் சூழல், கற்கும் திறன் ஆகியவற்றை அறிந்த ஆசிரியர்கள், விளிம்பு நிலைக் குழந்தைகளையும் வசதி படைத்த குழந்தைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்கேற்ப கலைத்திட்டத்தைச் சிறப்பாக வடிவமைக்க முடியும். வகுப்பறையில் குழந்தைகளுடன் கற்பித்தல்சார்ந்த செயல்பாடுகளில் உள்ள ஆசிரியர்களை இந்தக் குழுவில் இணைக்கவேண்டும். புதுப்புது முயற்சிகளைச் செய்துவரும் முன்னோடி ஆசிரியர்களின் அனுபவமும் இடம்பெற்றால்தான் உரிய கருத்துகள் உள்ளடங்கியதாக புதிய முடிவுகள் இருக்கமுடியும். குறிப்பாக, உள்ளூர் வளங்கள், புவியியல் அமைப்புகளுக்கு ஏற்ப மாற்றங்கள் தேவைப்படும். கடலையொட்டிய மாணவர்களுக்கு மீன்களைப் பற்றியும் நெசவுத்தொழில் மையமான பகுதிகளில் அதைப் பற்றியோ அதிகமாகத் தெரிந்திருக்கும். கிராமங்கள், மலைப்பகுதிகள் உட்பட்ட அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஆசிரியர்களையும் கலைத்திட்ட, பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெறச்செய்யவேண்டும்” என்று அழுத்தமாகச் சொன்னார் சு. மூர்த்தி. 

மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில், மேலும் விரிவாக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், இந்தக் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாமே, நம்பிக்கையோடு! 


டிரெண்டிங் @ விகடன்