வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (07/07/2017)

கடைசி தொடர்பு:10:23 (07/07/2017)

ஆளுக்கொரு வீடு- கேரள அரசின் இலக்கு!⁠⁠⁠⁠

கேரள

"கேரள அரசின் ஓராண்டுக் கால சிறந்த ஆட்சியை, மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன்" - இது, நடிகர் கமல்ஹாசன் மே 25-ம் தேதி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பிய வாழ்த்து இமெயில். இதற்கு, "நன்றி. எங்கள் அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதில் மெயில் அனுப்பியது கேரள அரசு. தனது அதிரடி விமர்சனங்களால் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியை வறுத்தெடுத்து வரும் கமல்ஹாசன், கேரள அரசைப் புகழ்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதோ, இரண்டாவது ஆண்டின், இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கேரள அரசு சாதித்தது என்ன? 

"கடந்த ஜூன் 17-ம் தேதி கொச்சியில மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடி, எங்க முதல்வர் பினராயி விஜயன் திறந்துவெச்சாங்க. இது, 25 கி.மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக... 5 ஆயிரத்து 180 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆலுவா முதல் பாலாரிவட்டம்வரை 13 கி.மீட்டர் தூரத்துக்குப் பணிகள் முடிக்கப்பட்டன. இந்தக் கட்டுமானப் பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செஞ்சாங்க. அதுல ராஜஸ்தான், பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம்னு வட மாநிலங்கள்ல இருந்து 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செஞ்சாங்க. தொழிலாளர்கள் இல்லைனா, நாட்டுல எந்த வளர்ச்சியுமில்லை. அதனால அவங்கள கௌரவிக்கிற வகையில, 800 தொழிலாளர்களையும் அழைச்சி அவங்களுக்குக் கேரளாவின் பாரம்பர்ய முறைப்படி 21 வகை கூட்டுகளுடன் 'சத்யா' என்ற விருந்து வழங்கியது, எங்க கேரள அரசு. பொதுவா, வட மாநிலத் தொழிலாளர்களைப் பெரும்பாலான மாநிலங்கள் சாதாரணமா பாக்குற நிலையில... அவங்களுக்கு மரியாதை கொடுத்திருக்கு எங்க அரசு. கம்யூனிஸ்ட் அரசில்லாம வேறு யாரிடம் இதை எதிர்பார்க்க முடியும்" என்றார் நாம் தொடர்புகொண்ட பாலக்காட்டைச் சேர்ந்த பிஜு.  

பினராயி விஜயன்

அடுத்து நம்மைத் தொடர்புகொண்டு பேசினார் பாலக்காட்டைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் நிதின் கனிச்சேரி. ''நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் முதன்மைக் காரணி கல்விதான். அந்தக் கல்வியில் கவனம் செலுத்தினார் எங்கள் முதல்வர். ஒரு சின்ன உதாரணம், சொல்கிறேன். சம்மர் ஹாலிடேஸ் முடித்துவிட்டு, ஸ்கூலுக்குத் திரும்பிய குழந்தைகள் ஆச்சர்யப்பட்டனர். காரணம், ஸ்கூல் கிளாஸ்ரூமின் வெளித்தோற்றம் ரயில், விமானம்போல அமைக்கப்பட்டிருந்தது. உள் அறைகளிலும் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இவை எல்லாமே குழந்தைகளை உற்சாகப்படுத்தியது. பொதுவாகவே பள்ளிகள், சிறைச்சாலைகள்போல குழந்தைகள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக அதை ஒரு குதூகலமான பயிற்சி நிலையமாக மாற்றியது எங்கள் அரசின் சாதனையாகும். இதன் தொடர்ச்சியே, எங்கள் ஆட்சிக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் புதிதாக 1 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் இணைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளைத் தரம் வாய்ந்ததாக மாற்றி வருவதன் வெளிப்பாடாகவும் இதைப் பார்க்கலாம். இந்த ஏப்ரலில் ஒரு முக்கியத் திட்டத்தை அரசு அறிவித்தது. '6 லட்சம் ரூபாயும் அதற்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள அனைத்துக் கல்விக் கடன்களையும் அரசாங்கமே செலுத்தும்' என்பதுதான் அந்த அறிவிப்பு. இதற்காக 900 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கீடு செய்தது எங்கள் அரசு. தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் கல்விக் கடனைச் சில தனியார் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. அதனால் ஏற்பட்ட விளைவுகளை நீங்களே பார்த்திருப்பீர்கள். ஆனால், எங்கள் அரசு ஏழை, நடுத்தர மாணவர்களின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு, செலவுகளைத் தாமே ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோல, இந்தியாவின் நூறு சதவிகித முழுமையான சுகாதாரம் அடைந்த மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடு, கடந்த நவம்பர் மாதத்தில்... கேரளத்தைப் பொதுவெளியில் மனிதக்கழிவுகள் இல்லாத மாநிலமாக அறிவித்தது. கடந்த ஒரே ஆண்டில், மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் புதிய கழிப்பறைகளைக் கட்டி முடித்திருக்கிறது. இந்தியாவின் நிதின் கனிச்சேரி மிக அதிக மக்கள்தொகை உள்ள மாநிலங்களில் இதைச் சாதித்துக் காட்டியிருக்கும் முதல் மாநிலம் கேரளம் மட்டும்தான். இதைப்போல், இளம்பெண் குழந்தைகளின் சுகாதாரம் என்பது அவர்களது அடிப்படை உரிமை. சானிடரி நாப்கின் வாங்க முடியாமல் பல பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரமுடியாத நிலை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு இளம்பெண் குழந்தைகளுக்குச் சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, இதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை நடப்புக் கல்வி ஆண்டு முதல் எங்கள் அரசு அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. பல இடங்களில் முழுமையான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மனிதர் என்ன சாப்பிடவேண்டும் என்று அவர்தான் முடிவு செய்யவேண்டும். மத்திய பி.ஜே.பி அரசு மக்களின் உணவில் கைவைத்தது. அவர்கள் கொண்டுவந்த மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக, கேரள சட்டமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றத் தீர்மானம் போடப்பட்டது. இதுமட்டுமல்ல, பல மாநிலங்களில் தங்கள் எதேச்சதிகாரத்தைப் பி.ஜே.பி நிறுவிவரும் தருணத்தில், அதற்கு எதிரான வலுவான ஒருங்கிணைவையும், எதிர்வினையும் ஆற்றிவருவது எங்கள் அரசு மட்டுமே. உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி... இவை மனிதன் வாழ்வதற்கான முதன்மை அடிப்படைகள். இதைக் கவனத்தில்கொண்டே முழுவீச்சாக எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. ஓராண்டிலேயே பலவற்றை சாதித்திருக்கிறோம். இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளது. கேரளாவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது இலக்கு. ஐந்தாம் ஆண்டு இறுதியில் கேரள மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் இருப்பார்கள்" என்றார் உறுதியான குரலில். 

நம்பிக்கையோடு தமது நகர்வுகளை முன்நகர்த்திச் செல்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள ஆட்சி.


டிரெண்டிங் @ விகடன்