வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (06/07/2017)

கடைசி தொடர்பு:19:01 (06/07/2017)

எரிபொருள், வளர்ச்சி குறித்து சமூகத்தின் 5 கேள்விகளும் அதற்கு கதிராமங்கலத்து மக்கள் பதில்களும்! #MustRead #2MinsRead

எரிபொருள் அரசியல்

திராமங்கலம் மக்களின் போராட்டத்தை, தூர தேசத்தில் அமர்த்து கொண்டு, மறை நீர் அதிகம் தேவைப்படும் கோலாவை உறிஞ்சிக்கொண்டு, பர்கரை சுவைத்தவாறு...“இவர்கள் எல்லாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்று ஒற்றை வரி கருத்தில் கடந்துச் செல்பவர்களிடம், எரிவாயு குறித்து சில கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகளை, கதிராமங்கலம் மக்களிடம் முன்வைத்தோம். 

“மாட்டுவண்டியில் ஏன் மக்கள் பயணிக்கக் கூடாது?”

“ஆம்...மாட்டுவண்டியை உபயோகிக்கலாம்தான். ஆனால், சாலைகள் அதற்கு ஏற்றார் போலவா வடிவமைக்கப்பட்டு உள்ளன. நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள் என ஊருக்கான சாலைகளாக இல்லாமல், ஊரை அழித்த சாலைகளில் சிறிய மோட்டார் வாகனங்களே செல்ல இயலாத போது... எப்படி மாட்டுவண்டியைப் போக்குவரத்துக்காக பயன்படுத்த முடியும்?”  

“பெட்ரோல் விலை ஏறினால், நமக்குக் குறைந்த விலையில் எரிவாயு கிடைக்கும்தானே. ஒரு பக்கம் பெட்ரோல் விலை ஏறினால் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள். இன்னொரு பக்கம், பெட்ரோல் எடுக்கவும் அனுமதி மறுக்கிறீர்கள். இது என்ன முரண்?”

“அறமற்ற முறையில் எரிபொருள் விலையை ஏற்றுகிறீர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாகை மாவட்டம் நரிமணம் பகுதியிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக மில்லியன் கணக்கில் எரிபொருள் எடுக்கிறீர்கள். குறைந்தபட்சம், தமிழக மக்களுக்காவது இந்த அரசுகள் குறைந்த விலையில் பெட்ரோல் தந்திருக்குமா? ஆக, இந்த வளங்கள் மக்களுக்காக அல்ல, பெரு நிறுவனங்கள் பெருத்துக் கொழுக்க. ஆக, இங்கிருந்து எரிபொருள் எடுத்தால் மண்ணின் மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.” 

கதிராமங்கலம்

“பின் ஏன் அதிகமாக வாகனங்கள் வாங்குகிறீர்கள்?”

“கட்டற்ற நுகர்வுக்கு தனிமனிதன் மட்டும் காரணமல்ல. அரசின் கொள்கைகள்தான் காரணம். அதிக நுகர்வினால்தான் அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. எதை எதையோ செய்யும் அரசு...ஏன் சரியான திட்டங்கள் தீட்டி, இந்த நுகர்வைக் குறைக்க கூடாது... பொது போக்குவரத்தை ஊக்குவிக்க கூடாது?  எரிபொருள் வளம் அதிகமுள்ள அரபு நாடுகளில், வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவது அவ்வளவு எளிதல்ல... அதுபோல பல நாடுகளில், சிங்கப்பூரில் கார் வாங்குவதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதுபோல, சட்ட திட்டங்களை இங்கே ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? உண்மையில், அரசுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை. அதன் ஒரே நோக்கம் நிறுவனங்களின் லாபம். அது மட்டும்தான்.”

“பெட்ரோல் எடுத்தால் இறக்குமதி குறையும்...  தேசம் வளர்ச்சி அடையும்தானே?”

“விவசாய  உற்பத்தியைப் பெருக்கி, அதற்கு சரியான ஆதார விலை கொடுத்தால் கூடத்தான் தேசம் வளர்ச்சி அடையும். நைஜீரியாவில் பெட்ரோல் எடுக்கப்பட்டது. அந்த தேசம் வளர்ச்சி அடைந்து உச்சத்தை தொட்டதா என்ன? அரபு நாடுகளை மட்டும் உதாரணமாகக் கொண்டு பெட்ரோல் எடுத்தால் தேசம் வளர்ச்சி அடையும் என்று சொல்வது வறட்டு வாதம். நாம் காவிரி டெல்டாவை ஒப்பிட வேண்டியது, அரபு நாடுகளுடன் அல்ல... நைஜர் டெல்டாவுடந்தான். எப்படி நிறுவனங்கள் நைஜீரியா டெல்டா பகுதியான ஒகோனிலாந்த் பகுதியில் எரிவாயு எடுக்க மக்களை துன்புறுத்தின... எப்படி வளமான நிலங்களை நாசமாக்கின என்று படித்துப் பாருங்கள். பெட்ரோல் வரமல்ல... சாபமென்று புரியும்!

“சரி... இறக்குமதி செய்தே இந்தியா திவாலாக வேண்டுமா?”

“வேண்டாம் என்பதுதான் சாமான்யனின் ஆசை. அதே நேரம் காவிரி டெல்டா பாலையாகிவிடக் கூடாது என்றும் விரும்புகிறோம். சரி... உங்கள் கேள்விக்கு வருகிறோம். பெட்ரோல் இறக்குமதியைக் குறைக்க வேண்டும்... எந்த தேசத்தில் பெட்ரோல் சுரண்டப்பட்டாலும் அது சூழலியல் கேடுதான். என்ன செய்யலாம்...? முதலில் அதன் நுகர்வைக் குறைக்க வேண்டும், அதற்கு தகுந்த செயல்வடிவங்களை தீட்ட வேண்டும். முன்பே கூறியது போல, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். வளங்குன்றா வளர்ச்சிக்கான மாற்று எரிப் பொருள் தொடர்பான ஆய்வில் கவனம் செலுத்த வேண்டும்.உண்மையில் சிக்கல் பெட்ரோல் அல்ல. அதன் கொள்கைகள்தான், அதை சீரமைத்தாலே இறக்குமதியைப் பெருமளவில் குறைக்கலாம்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்