வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (06/07/2017)

கடைசி தொடர்பு:11:31 (07/07/2017)

"நீட் விவகாரத்துக்கு மெரினா புரட்சி பாணி எழுச்சியே தீர்வு!" முன்னாள் நீதிபதி

நீட் தேர்வு பிரின்ஸ் போராட்டம்

நீட் தேர்வு தொடர்பாக தமிழகம் அனுப்பிய சட்டவரைவுக்கு குடியரசுத்தலைவர் பதில் அளிக்கும்வரை மருத்துவப் படிப்புச்சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களான நடிகர் கருணாஸ், ஜனநாயக மனிதநேயக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் அணி தனியரசு ஆகியோர் உண்ணாவிரதத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் வந்திருந்து வாழ்த்திப் பேசினார்கள். 

போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன். 

முன்னதாக, வரவேற்றுப் பேசிய பொதுப்பள்ளியின் மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “அரசியலமைப்புச்சட்டத்தின்படி அரசு, நீதித்துறை, நிர்வாகம் ஆகியன தனித்தனியாகச் செயல்படவேண்டும். உச்சநீதிமன்றம் நினைத்தபடி எதையும் செய்துவிடமுடியாது. நீதிமன்றத்தின் மீது பழியைப் போட்டு ஏமாற்றுகிறார்கள். 92-வது நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில்,” பொது நுழைவுத்தேர்வு நடத்துவதிலிருந்து தமிழகம் போன்ற மாநிலங்கள் விலக்கு கேட்டால், விலக்கு தரப்படவேண்டும்” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தானே இடம்பெற்றிருந்தார்கள். அதையும் மீறி நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்குப் புதிய சட்டம் கொண்டுவந்திருப்பது, மக்களவையின் உரிமைமீறல் இல்லையா” என ஆவேசமாகப் பேசினார். 

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில், அவ்வப்போது அதிர்ச்சியையும் கொடுத்தார். 

நீட் தேர்வு நீதிபதி அரி பரந்தாமன், பிரின்ஸ்க் கஜேந்திரபாபு

”முன்னர் பேசிய பிரின்ஸ் கஜேந்திரபாபு சட்டம் சாதகமாக இருப்பதாகக் கூறினார்; அப்படிப் பார்க்க என்னால் முடியவில்லை” என்று ஆரம்பத்திலேயே குறிப்பைக் காட்டியவர், தொடர்ந்து பேசியதாவது: ''பதினேழு வயது மாணவன் நன்றாகப் படித்துவிட்டால் மருத்துவப்படிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை, இப்போது தகர்த்துவிட்டார்கள். இதே நிலைமை இங்கு 1984-க்கு முன்னரும் இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நேர்காணல் மூலம் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எம்ஜிஆர் ஆட்சியில் அந்த முறையை நீக்கிவிட்டு, பொது நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டது. இப்போது அதை நாம் எதிர்க்கிறோம். அப்போது பெரிய பதவிகளில் இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சொத்து படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டும்தான் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரமுடியும் என்பதை அந்தப் பொதுத்தேர்வு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான முறை மாற்றியது. 

பொது நுழைவுத்தேர்வு முறையால் நிறைய பயிற்சிமையங்கள் உருவாகின. அவற்றில் பணம்கட்டி படிக்கமுடியாதவர்கள், மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் போனது. 2001-ல் ஜெயலலிதா ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தார். அதை எதிர்த்து 2006-ல் கருணாநிதி ஆட்சியில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்புச் சேர்க்கை என மீண்டும் கொண்டுவரப்பட்டது. இப்போது மத்திய அரசால் மருத்துவப் படிப்புச் சேர்க்கையில் மாநிலங்களுக்கு அனுகூலம் இல்லை. இங்கு எல்லா கட்சிகளும் ஒரு விஷயத்தை மொத்தமாக ஏற்றுக்கொள்வது கஷ்டம். ஆனால், கடந்த ஜனவரி 31-ம் தேதி அப்படி ஒன்று நடந்தது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, இன்றுவரை மத்திய அரசு பதில்கூறவில்லை. 

இது மாணவர்களின் பிரச்னை மட்டுமல்ல, மக்களின் பிரச்னை, இந்தத் தமிழ்நாட்டின் பிரச்னை. (இங்கே அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது) 1976 அவசரநிலைக் காலத்தில்தான் மாநில அரசிடமிருந்து கல்வித்துறையானது களவாடப்பட்டது. கழக ஆட்சிகளும் இதைக் கேட்கவில்லை. அதை மீட்கவே முடியாது என்பதில்லை, முடியும். 

ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது; பா.ஜ.க. அரசு அதையே சொன்னது. ஆனால், அதைப் புரட்டிப்போட்டுவிட்டு மெரினா புரட்சி, தைப்புரட்சி புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரவில்லையா? அதில் தெற்கிலிருந்து போராட்டம் தொடங்கி வெற்றிபெற்றது; இப்போது இங்கிருந்து அப்படியே போகட்டும். உண்ணாவிரதம் காந்தி காலத்தோடு போச்சு.. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்த கோவை பிரிக்கால் தொழிலாளர்களுக்கு, 8 நாள் சம்பளத்தைப் பிடித்துவிட்டார்கள் என்று அதை எதிர்த்து ஒரு போராட்டம்.. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்.. நானும் போயிருந்தேன். ஆறு நாள் ஆகியும் ஒன்றும் பலனில்லை. ஏழாவது நாளில் சட்டமன்ற முற்றுகை என அறிவித்தார்கள். உடனே காவல்துறையினர் அங்கு கிளம்பிவந்தார்கள். அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. 

இதைப் போலவே ஜல்லிக்கட்டு, இட ஒதுக்கீடு, மதுக்கடை எதிர்ப்பு போன்ற பிரச்னைகளில்... நீதிமன்றத்துக்குப் போனால் என்ன நடந்தது? சமூகப் பிரச்னைக்கு நீதிமன்றம் அல்ல, தெருதான் தீர்வு! 

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி, நெடுவாசலில் மீத்தேன் என மாநில உரிமைப் பறிப்பு தொடர்கிறது. அ.தி.மு.க-வில் இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன் ஆகிய மூன்று தரப்பும் குடியரசுத்தலைவர் தேர்தலில் கோவிந்துக்கு வாக்களிக்க முடிவுசெய்திருக்கிறார்கள். அது அவர்களின் முடிவு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்... 80-100 விவசாயிகள் தற்கொலைசெய்திருக்கிறார்கள். அய்யாகண்ணுவுக்கு டெல்லியில் போய் முதலமைச்சர் ஆதரவு தெரிவித்தார்.. இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு நிபந்தனை விதிக்கக்கூடாதா? அப்படியே டெல்லியில் போய் காவடி எடுப்பது கேவலமாக இல்லையா? எதற்கோ பயப்படுகிறீர்கள்.. இப்படிப் பயந்தால் மக்கள் வேறு முடிவை எடுப்பார்கள். 

புதுச்சேரியில் தோற்றுப்போனவர்களை எம்எல்ஏ-ஆகப் பதவி நியமனம் செய்ததற்கு விரைவாக ஒப்புதல்தரும் மத்திய அரசு, தமிழ்நாட்டு சட்டமசோதாவுக்கு ஆறு மாதங்களாக எந்தப் பதிலும் தராமல் இருக்கிறது. சட்டம் சாதகமாக இருக்கிறதோ இல்லையோ மக்கள்சக்தி வெற்றிபெறும். மக்களின் பிரச்னைகள் தள்ளுபடி ஆகிவிடும். 

இதில் முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் கருத்துப்பரப்பலைச் செய்துள்ளார், பிரின்ஸ் கஜேந்திரபாபு. அடுத்து இந்த உண்ணாவிரதம். 3-வது, 4-வது, 5-வது என அடுத்தடுத்த படிகள் எப்படி இருக்கவேண்டும் எனப் புதிதாக யோசிக்கவேண்டும்” என்று நீதிபதி அரிபரந்தாமன் பேசினார்.