வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (08/07/2017)

கடைசி தொடர்பு:11:09 (08/07/2017)

"அந்த வாட்ஸ்அப் ஃபார்வர்டுல சிறுத்தை கடிப்பது என் கைதான்” - பசுமை ஆஸ்கர் வென்ற சஞ்சய் குப்பி #VikatanExclusive

சிறுத்தை சஞ்சய் குப்பி

கடந்த வருடம் பிப்ரவரி மாதம். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, நீச்சல் குளத்தின் அருகில் நின்றிருந்த  ஒருவரை தாக்கி கீழே தள்ளி, அவரின் கையைக் கடித்த காட்சிகள் செய்திச் சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பானது. தமிழ்நாட்டில் அந்தக் காட்சியை கண்டு அனைவரும் பதறிப்போனோம். ஆனால் கர்நாடக மக்கள் பரிதவித்தார்கள். காரணம் அந்த விபத்தில் சிக்கியது சூழலியலாளர் சஞ்சய் குப்பி. கர்நாடக மாநிலத்தில் வன விலங்குகள் தொடர்பாகவும், சூழலியல் தொடர்பாகவும் இயங்கும் மிக முக்கியமானவர் சஞ்சய். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த சரணாலயம், தேசிய பூங்காக்கள், காடுகளை முழுமையாக மீட்டிருக்கிறார். சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம், தற்போது கர்நாடக மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 37% பாதுகாக்கப்பட்டப் பகுதி. அதற்கு மிக முக்கிய காரணம் சஞ்சய். இவரில் செயல்பாடுகளுக்காகவும், குறிப்பாக புலிகள் வாழிடத்தை மீட்டதற்காகவும், `பசுமை ஆஸ்கர்` என்று அழைக்கப்படும் `விட்லி விருது` சஞ்சய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. சஞ்சயை போனில் தொடர்புகொண்டு வாழ்த்துக்கள் கூறி பேசத்துவங்கினோம்.

 

 
சஞ்சய் குப்பி யார்?
கையில் கேமராவைத் தூக்கிக்கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டில் நடந்து திரியும் இயற்கை விரும்பி. கண் முன்னால் நடக்கும் இயற்கை அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் உணர்வுள்ள சாதாரண  மனிதன். அவ்வளவு தான்.

என் குடும்பத்தில் நான், என் மனைவி, ஒரு மகன். மனைவி மருத்துவராக பணியாற்றுகிறார். என்னை ஊக்கப்படுத்தி, காட்டிற்குள் சுதந்திரமாக விட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு அசாதாரண மனைவி அவர். நான் அடிப்படையில் எஞ்சினியரிங் மாணவன். ஆனால், நானும் என் மனதும் எஞ்சினியரிங் பக்கம் சென்றதே இல்லை. முப்பது வருடங்களுக்கு பிறகு இப்போதும் நான் நினைத்துப்பார்க்கிறேன். என் படிப்பு தொடர்பாக அன்று நான் உணர்ச்சிவசப்பட்டு அதனோடு பயணித்திருந்தால், என் நேரத்தை இழந்திருப்பேன். துக்கமாக உணர்ந்திருப்பேன். எனக்கென்று இயற்கை மீதான ஈர்ப்பு கலந்த எண்ணம் ஒன்று இருந்தது. அதை என் குடும்பத்தாரிடம் சொன்னேன். ஏற்றுக்கொண்டார்கள். பிறகென்ன, மிக எளிமையாக எடுத்துவிட்டேன் காடுகளுடன் பயணிக்கும் என் முடிவை. இன்று வரை அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை.

ஒரு சூழலியலாளருக்கு இந்தியாவில் என்ன மாதிரியான அங்கீகாரமும் சுதந்திரமும் கிடைப்பதாக நினைக்கிறீர்கள்?
சுதந்திரத்திற்கு எந்த பஞ்சமும் இல்லை. அங்கீகாரத்தை பொறுத்தவரை,  எதிர்பார்ப்பதெல்லாம் எங்கள் வேலைக்கான அங்கீகாரத்தை மட்டும் தான். அந்த அங்கீகாரமும் சில நேரங்களில் தொந்தரவுகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை நோக்கிய பயணத்தில் பங்கெடுப்பதில்லை. வனத்தை மீட்டெடுத்து, வனத்திற்கு சொந்தக்காரர்களான வனவிலங்குகளை அங்கே மீள்குடியமர்த்தும் போது ஏற்படும் மன நிறைவுக்கு நிகராக எந்த அங்கீகாரமும் பெரிதாக தெரிவதில்லை. அதேநேரம், உண்மையான ஒரு வேலைக்கு கிடைக்கும் சிறிய அங்கீகாரம் கூட எங்களை ஊக்கப்படுத்த தவறியதில்லை.

 நகராஹோல் சாலையை மீட்ட அனுபவம் எப்படி இருந்தது?
மிக சவாலாக இருந்தது. நகராஹோல் தேசிய பூங்கா அடிப்படையில் யானைகள் மற்றும் புலிகளின் வாழிடம். அது, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதி மட்டுமல்லாமல், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி உயிர்கோளப் பாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேசிய பூங்கா. மைசூரையும் மந்தவாடியையும் இணைக்கும் பிரதான சாலை அந்த சரணாலயம் வழியே தான் செல்கிறது. எந்த நேரமும் யானை, புலி, சிறுத்தை, மான் போன்றவை அந்த சாலையை கடக்கும். வேகமாக செல்லும் வாகனங்களால் தொடர்ச்சியாக அங்கே விபத்து ஏற்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு விலங்காவது வாகனங்களில் அடிபடும் சூழல் இருந்தது. வாகன பெருக்கம், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நகராஹோல் சாலை, தினசரி நாளிதழ்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சூழலியலாளர்கள் அனைவரையும் இணைத்து, கர்நாடக அரசிற்கு அழுத்தம் கொடுத்தோம். வணிக நோக்கம் கொண்ட மிகப்பிரதான சாலை என்பதால் அரசு சற்று தயங்கியது. எங்களின் தொடர் முயற்சியால், வன விலங்குகள் அதிகமாக நடமாடும் இரவு நேரங்களில் நகராஹோல் சாலை மூடப்பட்டது. அதற்கு பதிலாக வேறொரு சாலையை கர்நாடக அரசு தயார் செய்தது. இதே போல, பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஒன்றையும் இரவில் மூட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பகல் நேரங்களில் இந்த சாலைகளில் பயணிக்க பல புதிய, கடுமையான  கட்டுப்பாடுகளையும் கர்நாடக அரசு பிறப்பித்தது. தற்போது நகராஹோல் சாலை முழுமையாக மீட்கப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து கூட நடப்பதில்லை.

 
கர்நாடக மாநில காடுகளில் என்னென்ன மாற்றங்களைச்  செய்திருக்கிறீர்கள்?
கர்நாடக அரசு மற்றும் வனத்துறை உதவியுடன் மாநிலத்தின்   வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, காடுகளின் பரப்பளவை சுமார் 7 லட்சம் ஏக்கர் வரை விரிவுபடுத்தியிருக்கிறோம். இதற்குள் தேசிய பூங்காக்களும், சரணாலயங்களும் அடக்கம். 1970ற்கு பிறகு கர்நாடக மாநிலம் தனது காடுகளின் உண்மையான பரப்பளவை தற்போது தான் காண்கிறது. வனவிலங்குகளுக்கு தங்களின் பகுதி பரிசளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவற்றை பாதுகாப்பாக உணர வைத்திருக்கிறோம். குறிப்பாக புலிகள். இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கும் சூழலில், உலக அளவில் வெறும் 10% புலிகள் மட்டுமே கொண்டுள்ள கர்நாடக காடுகளில் அவற்றின் எண்ணிக்கை  கணிசமாக உயர்ந்திருக்கிறது. இது எங்களை சர்வதேச அளவில் பெருமைப் படுத்தியிருக்கிறது.

சுற்றுச்சூழல் விவகாரங்களில் அரசு எப்படி நடந்துகொள்கிறது?
கர்நாடக அரசு எப்படி நடந்துகொள்கிறது என்று என்னால் வெளிப்படையாகவே சொல்ல முடியும். இந்தியாவில், சுற்றுச்சூழல் விவகாரங்களில் வருங்கால சிந்தனையை மட்டுமே சிந்தையில் வைத்து வேகமாக முன்னேறும் மாநிலம் கர்நாடகா தான். அரசு அதிகாரிகள் முதல், அரசியல்வாதிகள் வரை சுற்றுச்சூழல் விவகாரத்தில் எந்தவித பாரபட்சமும் பார்ப்பதில்லை. வனத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர், இந்தப் பணிக்காகவே தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். வேறெந்த நினைப்பும் இல்லாமல், நாள் முழுவதும் காட்டிற்குள்ளேயே வலம் வருகிறார்கள். எங்களைப் போன்றவர்களால் அறிவுறுத்த மட்டுமே முடியும். ஆனால், செயலில் இறங்குபவர்கள் அவர்களே. ஒரு காட்டை மறு கட்டமைக்கும் போது ஏற்படும் பொருளாதார அழுத்தங்கள் மிகக் கொடூரமானவை. பணிகளை அப்படியே முடக்கி அழித்துவிடும். அதையெல்லாம் மீறி, அரசும், வனத்துறையும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். அதற்கு பக்கபலமாக இருந்தது, தனித்துவமான, துடிப்பு மிக்க, துறை சார்ந்த அறிவு கொண்ட, யோசிக்காமல்  காட்டில் குதிக்கக் கூடிய ஒரு கூட்டம். அது என் குழு தான். அவர்களால் தான் நான். அவர்களால் தான் இவை அனைத்துமே.

சிறுத்தை சஞ்சய் குப்பி


கடந்த வருடம் விப்ஜியார் பள்ளியில் சிறுத்தையால் நீங்கள் தாக்கப்பட்ட பிறகு, வன விலங்குகள் மீதான பார்வையில் உங்களுக்கு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. ஒரு விலங்கை அச்சத்திற்குள் ஆழ்த்தினால் அது அப்படி தான் நடந்துகொள்ளும். அது தான் அன்றும் நடந்தது. சிறுத்தைகள் மீதான காதல் சிறுவயதில் இருந்தே எனக்கு இருக்கிறது. அழகாக, சுறுசுறுப்பாக அதே நேரம் நழுவிச்செல்லும் ஒரு வேட்டையாடி அது. புலிகள் இல்லாத பகுதிகளில், காட்டை சமநிலைப்படுத்தும் முயற்சியில் சிறுத்தைகள் தான் அதிக பங்கு வகிக்கிறது. குறிப்பாக, காட்டுப்பன்றிகளை கட்டுபடுத்தி காட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சம்பவம் நடந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. மக்கள் என்னைப் பார்க்கும் போதெல்லம் அதை நினைவு படுத்தி என்னிடம் பேசுவார்கள். லண்டனில் நடந்த பசுமை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு எனக்கு பரிசளித்த இரண்டாம் எலிசபத் மகாராணியின் மகளான இளவரசி ஆன், மேடையில் கூறும் போது ` நிறைய வடுக்கள் கொண்ட மனிதர் நீங்கள்` என்றார். அதைக் கேட்டதும் எனக்கு பெருமையாக இருந்தது. அது உண்மை தான். ஆம், என் கையில் சிறுத்தை கடித்து முப்பது ஒட்டைகள் விழுந்திருந்தன. அவை வெற்று வடுக்கள் மட்டுமே. உண்மையில் நடந்த அந்த விபத்திற்காக நான் சந்தோசப்படுகிறேன். அந்த இடத்தில் நான் இல்லாமல் ஒரு குழந்தை இருந்திருந்தால்… அதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உண்மையில், அந்த விபத்திற்கு பின்னர் தான் என்னால் தைரியமாக காட்டிற்குள் வலம் வர முடிந்தது. வன விலங்குகள் மீதான என் கருத்தை அவை மாற்றவில்லை. மாறாக, சிறுத்தையின் வலிமையை கண்டு ஆச்சர்யம் கொள்ளவே தோன்றுகிறது.

 பசுமை ஆஸ்கர் விருது வென்றுள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?
பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். நானும் என் குழுவும் தொடர்ந்து பயணிக்க இந்த விருது ஊக்கம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிறுத்தை சஞ்சய் குப்பி

 

பசுமை ஆஸ்கர் விருது:

இயற்கைப் பாதுகாப்பு பணிகளில் உலக அளவில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டு தோறும் `பசுமை விருது` என்றழைக்கபடும் `விட்லி விருது` வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 166 பேரில் 6 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு  விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் இருவர் இந்தியர்கள். ஒருவர் அஸ்ஸாம் மாநிலத்தில், அழிவின் விளிம்பில் இருந்த `கிரேட் அட்ஜடண்ட் ` (Greater Adjutant Stork) என்ற நாரை இனத்தை பாதுகாக்க, அந்த பகுதியில் இருக்கும் பெண்களை அணி திரட்டி நாரையின் வாழிடப் பரப்பை அதிகரித்த சூழலியலாளர் பூர்ணிமா பர்மான். மற்றொருவர் சஞ்சய் குப்பி. பசுமை ஆஸ்கர் விருதுடன் தலா 35 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டு ரொக்கம் பரிசாக வழங்கப்படும். அதன் இந்திய மதிப்பு சுமார் 29 லட்சம் ரூபாய்.


டிரெண்டிங் @ விகடன்