வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (07/07/2017)

கடைசி தொடர்பு:18:29 (07/07/2017)

அமெரிக்க அதிபருக்கு கை கொடுப்பதில் இத்தனை பிரச்னையா?

ட்ரம்ப் மற்றும் மெலினியா ட்ரம்ப்

ருத்தர் கை கொடுக்கும்போது எப்படிக் கொடுக்கணும்... எவ்வளவு நேரம் கொடுக்கணும் என்பதற்கெல்லாம் வரைமுறை இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருப்பவருக்கும்கூட இந்த விஷயம் தெரியும். ஆனால், அமெரிக்கா மாதிரியான ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு கை கொடுப்பதில்தான் எத்தனை கன்ஃப்யூஷன்! பதவியேற்ற தினத்திலிருந்து ட்ரம்ப்புக்கு கை கொடுப்பதில் மட்டும் பல சிக்கல்கள்... அண்மையில் அவர் போலாந்த் அதிபரை சந்தித்தபோது கை கொடுப்பதில் ஏற்பட்ட குழப்பம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

போலந்து நாட்டின் ஃபர்ஸ்ட் லேடியான அகதா கார்ன்ஹவுசர்-துடா முதன்முதலாக வார்ஷா நாட்டுக்கு வந்திருந்தபோது, ட்ரம்ப்புக்குக் கை கொடுக்காமல் அவரது மனைவி மெலினியா ட்ரம்ப்புக்குக் கை கொடுத்தார். வீடியோவாகப் பதிவான இந்தக் காட்சி ஃபேஸ்புக், ட்விட்டர் எனச் சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலினியா ட்ரம்ப், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடா மற்றும் அவருடைய மனைவி அகதா கார்ன்ஹவுசர்-துடா ஆகியோர் மேடையில் நின்றுகொண்டிருந்தனர். மேடையில் இருந்து கீழே இறங்குவதற்காக போலந்து அதிபர் நகர்ந்தபோது அவருடன் ட்ரம்ப் கை குலுக்கினார். பின்னர், அவருடைய மனைவியுடன் கை குலுக்க எத்தனித்து கைகளை நீட்டினார். ஆனால், அகதா, ட்ரம்ப்புக்கு கை கொடுக்காமல், மெலினியா ட்ரம்ப்புடன் கை குலுக்கினார். பின்னர் ட்ரம்ப்புக்குக் கை கொடுத்தார். 

அகதா கார்ன்ஹவுசர்-துடா

கை குலுக்குவதில், ட்ரம்ப்புக்கு இது முதல்முறையான சொதப்பலில்லை. ட்ரம்ப்பின் கை கொடுக்கும் சொதப்பல்கள் பல சீசன்களைத் தாண்டியுள்ளது. அதில் சுவாரஸ்யமானது... ஜப்பான் பிரதமருக்கு நீண்ட நேரம் கை குலுக்கியதுதான். கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று வெள்ளை மாளிகையில், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபி. இந்த சந்திப்பை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்குத் திடீரென அவர்கள் வித்தியாசமாகக் கைகுலுக்கும் பதிவு கிடைத்தது. ட்ரம்ப், ஜப்பான் அதிபரது கையை வித்தியாசமாகப் பிடித்ததோடு, கையை லேசாகத் தட்டியும் கொடுத்தார். பின்னர் நீண்ட நேரமாகக் கைகுலுக்கினார். ட்ர்ம்ப்பின் இந்தச் செயலுக்கு அபி எந்தவிதமான எதிர்ப்பும் செய்ய முடியாமல் இருந்தார். பாவம் ஜப்பான் பிரதமர்... 'எவ்வளவு நேரம்தான் கை கொடுக்குறது' என்ற மைண்ட் வாய்ஸோடு நெளிந்துகொண்டிருந்ததுதான் பரிதாபத்தின் உச்சம். 

அடுத்தது, ஏஞ்சலா மெர்கலுடன் கைகுலுக்க மறுத்த ட்ரம்ப். ஜெர்மன் நாட்டின் ஆளுங்கட்சி 'கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி'. இந்தக் கட்சியின் தலைவரான அதிபர் ஏஞ்சலா மெர்கல், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது மெர்கலுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார் ட்ரம்ப். இது மெர்கலுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வியப்பாக இருந்தது. கைகொடுக்க வேண்டிய சமயத்தில், அவரை நேராகப் பார்க்காமல், தலையைத் திருப்பிக் கொண்டார் ட்ரம்ப். 

கை குலுக்குவதில் ட்ரம்ப்புக்கு பார்ட்னர் இன் க்ரைம் மோடிதான். இருவருமே வி.ஐ.பி-களுடன் கைகுலுக்குவதில் சொதப்பல் மன்னர்கள். சமீபத்தில், அமெரிக்கா சென்ற மோடி ட்ரம்ப்பை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மோடியும் ட்ரம்ப்பும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கும் நேரத்தில், சொல்லிவைத்தாற்போன்று இருவருமே சொதப்பித் தள்ளினர். பின்பு இருவரும் சுதாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டு சமாளித்தனர். 

ஏஞ்சலா மெர்கல்

ட்ரம்ப்புடன் கைகுலுக்கும் எல்லோருக்குமே ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்று சொல்வதில் தவறில்லை. கை குலுக்கும்போது எதிரே இருப்பவரின் கையைப் பிடித்து, இழுத்து, குலுக்கி பின்னர் அவர்களின் கையைத் தட்டிக் கொடுப்பது ட்ரம்ப்பின் வழக்கமாக இருந்து வருகிறது. அதை எதிர்கொள்பவர்களுக்குத்தான், அந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பது தெரியும். 

ட்ரம்ப்புடன் கை குலுக்க நேர்ந்தால், எதிராளி நேரே புத்தூரில் போய் கைக்கு கட்டுதான் போடவேண்டும். இல்லையென்றால், கை கொடுக்கிற நேரத்தில் கை கொடுக்காமல், நகர்ந்து சம்பந்தப்பட்ட நபரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவார் ட்ரம்ப். 'சிரியா மக்களுக்கு அமெரிக்கா கை கொடுக்கும்' என்று ஒபாமா ஏற்கெனவே சொல்லியது, செல்லாது என்று கூறினார் ட்ரம்ப்

'ஒரு நாட்டைக் கை கொடுத்துக் காப்பாத்தத் தெரியாதவர்னு நெனச்சா... நேர்ல ஒருத்தரோட கை குலுக்கக்கூடத் தெரியாதவரா இருக்கிறாரே இந்த ட்ரம்ப்!' எனக் கமென்ட் செய்கிறார்கள் சிரியா மக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்