வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (08/07/2017)

கடைசி தொடர்பு:09:28 (08/07/2017)

பி.ஜே.பி-யின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் கிரண்பேடி’’- கொதிக்கும் காங்கிரஸ்!

கிரண்பேடி


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்குவதில் கிரண்பேடி தலையிட்டதில் தொடங்கி, மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கில் அவர் காட்டிய அதிரடி நடவடிக்கை வரை, புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியது. கிரண்பேடியின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து பதிலடிகொடுத்து வந்தபோதிலும், அவை அனைத்தும் நமத்துப்போன பட்டாசாகவே இருந்தது.

இந்நிலையில், பி.ஜே.பி. ஆதரவாளர்கள் மூன்றுபேரை எம்.எல்.ஏ-க்களாக நியமனம் செய்து, அவர்களுக்கு கிரண்பேடி பதவிப்பிரமாணமும் செய்துவைத்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தவிவகாரத்தில் கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் இடையே கடுமையான மோதல் வலுத்து வருகிறது. இந்த விவகாரம் புதுச்சேரியிலிருந்து பிரதமர் மோடி வரை புகாராகச் சென்றுள்ளது. 

'புதுச்சேரி அரசியலில் என்னதான் நடக்கிறது?' என அங்குள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். 

ரவிச்சந்திரன்பி.ஜே.பி-யைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறுகையில், "1954-ம் ஆண்டில் புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்தது. அதன்பிறகு புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர்களில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் சேத்திலால், குல்கார்னி ஆகியோர். அந்த வரிசையில் தற்போது கிரண்பேடி இடம்பெற்றுள்ளார். 24 மணிநேரமும் பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். மற்ற ஆளுநர்கள் என்றால், ஆடம்பரவாழ்வில் வலம் வந்திருப்பார்கள். இதற்குமுன்பு இருந்த துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா 45 லட்ச ரூபாய் செலவில் கார் வாங்கிப் பயன்படுத்தினார். அந்தக் காரை கிரண்பேடி ஓரிரு முறைதான் பயன்படுத்தியிருப்பார். அப்படி ஒரு எளிமையான ஆளுநர் அவர். 1990-ல்  தி.மு.க-வைச் சேர்ந்த பி.ராமச்சத்திரன் முதலமைச்சராகவும், துணைநிலை ஆளுநராக சந்திராவாதியும் இருந்தனர். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப்போன நாஜிம், கேசவன் இருவரையும் எம்.எல்.ஏ-வாக நியமனம் செய்தனர். இதே அடிப்படையில்தான் இப்போதும் நடந்துள்ளது. யூனியின் பிரதேசம் என்பதால் விதிமுறைப்படி எம்.எல்.ஏ-க்களை பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் மத்திய அரசின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு உண்டு. அந்த அடிப்படையிலேயே தற்போது கிரண்பேடி மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, பி.ஜே.பி-யைச் சேர்ந்த மூன்றுபேரை எம்.எல்.ஏ-க்களாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த விதிமுறைகள் எல்லாமே முதல்வராக இருக்கும் சட்டம் படித்த நாராயணசாமிக்கு தெரியும்" என்றார்.

இதுகுறித்து, என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த பாலனிடம் பேசியபோது, "2013-ம் ஆண்டில் மத்திய அமைச்சராக இருந்த இப்போதைய முதல்வர் நாராயணசாமி, 'யூனியன் பிரதேசத்தில் அனைத்து அதிகாரங்களும் துணைநிலை ஆளுநருக்கே உண்டு; என்.ரங்கசாமி சட்டம் தெரியாமல் பேசுகிறார்' என அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி குறித்து கருத்து தெரிவித்தார். ஆனால், துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டை இப்போது மட்டும் ஏன் முடக்கப்பார்க்கிறார் நாராயணசாமி? 

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியாவை வைத்து, ரங்கசாமி அரசுக்கு நாராயணசாமி எப்படியெல்லாம் செல்வம்நெருக்கடி கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது ரங்கசாமிக்கு என்ன நடந்ததோ, அதுதான் தற்போது  நாராயணசாமிக்கு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதல்தான் வலுத்துக்கொண்டிருக்கிறது" என்றார் ஆதங்கத்துடன்.

சமூக ஆர்வலரான செல்வம் கூறுகையில், "கிரண்பேடி தன்னை எப்போதும் பி.ஜே.பி-க்காரர் என அடையாளம் காட்டிக்கொள்வதில்லை. நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஒரு ஆளுநர் செய்யவேண்டிய பணிகளை அவர் செய்து வருகிறார். துறைமுக முகத்துவார அடைப்பை சரிசெய்யும் பணியை டெண்டர் விடுவார்கள். ஆனால், இந்தமுறை இந்த டெண்டர் மத்திய அரசின் ஷிப்பிங் கார்ப்ரேஷன் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று தனியார் மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டில் நேரடியாக அவரே சென்று கண்காணித்ததுடன், அதிரடியாக ஏழை மாணவர்களுக்கு சீட்களை ஒதுக்க வழிவகை செய்தார். மற்ற துணைநிலை ஆளுநர்கள் செய்யாமல் போனதை கிரண்பேடி சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். அதனால் அவரை குறைசொல்லத் தேவையில்லை" என்றார்.

"துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எம்.எல்.ஏ-க்களை நியமித்து, பதவிப்பிரமாணம் செய்துவைத்தது செல்லாது" என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன்.

 லட்சுமி நாராயணன்.அவரிடம் பேசினோம். "ஆரம்பத்தில் திட்டங்கள் செயல்படுத்துவதில் கிரண்பேடி தலையிட்டபோது, 'மக்களுக்கான நலத்திட்டங்களை யார் நடைமுறைபடுத்தினால் என்ன? மக்களுக்கு நல்லது நடந்தால் சரி' என்று எங்களுடைய கட்சியினர் நினைத்திருந்தோம். அதனால்தான் முதுகலை மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு, மக்கள் நலத்திட்டங்கள் என கிரண்பேடியின் எதிர்மறை செயல்பாடுகளைப் பார்த்தும் அமைதிகாத்து வந்தோம். இந்தநிலையில்தான் பி.ஜே.பி. ஆதரவாளர்களுக்கு மறைமுகமாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவருடைய இந்த நடவடிக்கை எந்த வகையில் சரியானதாகும். முதல்வருக்குக்கூட தெரியாமல் எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதுதான் விதியா? விதிகளை மீறி அவர் இவ்வாறு செய்திருப்பதன் மூலம் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர் என்பது தெள்ளத்தெளிவாகி விட்டது.

ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில், பி.ஜே.பி-யின் கொள்கையோடு துணைநிலை ஆளுநராக பதவி ஏற்று வந்துள்ளார் என்பது இப்போது உறுதியாகி விட்டது. பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் நியமன எம்.எல்.ஏ-க்களைத் தேர்வுசெய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்வார்கள். அதன்பின்னர்தான். அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ஆனால் இங்கே அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தலைமைச் செயலாளருக்கும், மத்திய அரசுக்கும், நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கும் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் நியாயமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்