Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“தூக்குல தொங்குறான் விவசாயி... எதுக்கு உங்களுக்கு நாற்காலி...?” ஆட்சியாளர்களை உலுக்கும் ‘கொலை விளையும் நிலம்’

கொலை விளையும் நிலம்

“அம்மண அம்மண தேசத்துல...
அதிகாரம் போடுற வேஷத்துல...
தூக்குல தொங்குறான் விவசாயி...
எதுக்குடா உங்களுக்கு நாற்காலி..

ஆறுமில்ல நீருமில்ல,
அண்டி நிக்க யாருமில்ல;
டெல்லி போன சாருக்கெல்லாம்
நின்னு கேக்க நேரமில்ல"

என்ற அதிரடியான பாடல்வரிகளுடன் தொடங்குகிறது அந்த ஆவணப்படம். திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையில் ஆட்சியாளர்களின் முகத்திரையை இப்படம் குத்திக்கிழிக்கிறது. அவ்வளவு பெரிய ஆயுதத்தை ஆரம்பத்திலேயே எடுத்திருப்பது, வலிநிறைந்த வர்க்கத்தினரின் கோபத்தின் வெளிப்பாடுதான் என்பதை பாடல் வரிகளே உணர்த்திவிடுகின்றன. ஒருபக்கம் அதிரடியான பாடல்வரிகளும் மறுபக்கம் விவசாயிகளின் மரணவலியும் இதயத்தை மென்று முழுங்குகின்றன. 

’“கொலை விளையும் நிலம்" என்னும் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். "கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே வந்துவிட்டது விவசாயம். விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவத்தை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிசிச் சோறு சாப்பிடும் ஒவ்வொருவரும் விவசாயத்தின் அவசியத்தைத் தெரிந்திருப்பர். ஆனால், 'நமது ஆட்சியாளர்கள் சோறு சாப்பிடுகிறார்களா?' என்ற சந்தேகம் எழுகிறது" என்று அதிரவைக்கும் வார்த்தை ஆயுதங்களோடு, இயக்குநர் சமுத்திரகனியின் குரலில் ஆவணப்படம் தொடங்குகிறது. 

விவசாயிகள்

விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் தற்போதையநிலை குறித்தும் எத்தனையோ ஆவணப்படங்கள் வெளிவந்தபோதிலும், இந்தப் படம் உண்மையில் விவசாயிகள் துயரங்களின் அடி ஆழத்தில் இருந்துதான் உருவாகியிருக்க வேண்டும். அப்படித்தான் அந்தப் படத்தின் இயக்குநர் ராஜீவ் காந்தி, இந்த நீண்ட நெடிய பயணத்தைத் தொடங்கி கண்ணீர் நிறைந்த பக்கங்களைத் திரைக்குக் கொண்டுவந்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் நிலவும் வறட்சியின் உச்சத்தை எடுத்துரைக்கும் காட்சிகளோடு ஓடும் இந்த ஆவணப்படம் முழுக்க, முழுக்க விவசாயிகளின் தற்போதைய வாழ்க்கைச் சூழலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது என்றே சொல்லவேண்டும். ஆறுகள், ஏரிகள், நீர் நிலைகள், அணைகள் எனத் தமிழகத்தின் பசுமைமிகு பெருமைகள் தொடங்கி முப்போக விளைச்சல்வரை விரிகிறது. "பசுமையும், விளைச்சலுமாக இருந்த பூமி, இப்படி ஏன் வறண்ட பாலைவனமாகி விட்டது? இதற்கு யார் பொறுப்பு?" என அப்படத்தில் சாட்டையை சுழற்றியுள்ளார் இயக்குநர். "விவசாயத்திற்கு பெரிதும் பயன்படக்கூடிய நீர்நிலைகளை அரசாங்கம் பாதுகாக்கத் தவறியதே, கொத்துக்கொத்தாக விவசாயிகளின் உயிர்பலிக்குக் காரணம்" என நேரடியாகவே வாதத்தை வைப்பதோடு, அதற்கான உண்மைக் காட்சிகளையும் இயக்குநர் அமைத்துள்ளார்.

"வறட்சி, கடன், வறுமை, தற்கொலை, மரணம், கேள்விக்குறியாகி விட்ட எதிர்காலம், இப்படியான நிலையில்தான் விவசாயிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்" என்ற உண்மையின்  ஆழத்தை உரக்கச் சொல்கிறது இப்படம். 'நிலத்தில் இட்டப் பயிர் காய்ந்து விட்டதே' என நின்ற இடத்தில் அதிர்ச்சியில் உயிரை இழந்த விவசாயிகள் மற்றும் கடன்சுமை தாங்காமல் வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின்   குடும்பப் பின்னணியும் விளக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி விவசாயம் பாதிக்கப்பட்டதால் இறந்த விவசாயிகளின் உயிரிழப்பைக்கூட மறைத்து, ஊழல்செய்யும் அரசாங்கத்தின் அவலத்தையும் பதிவுசெய்திருப்பது, வெளிர் வேட்டிக்கட்டிக் கொண்டு பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சவுக்கடி...

கொலைவிளையும் நிலம் ஆவணப்பட பதிவு

32 வயதில் கணவனை இழந்த ஆரோக்கிய மேரி இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கூலி வேலைக்குப்போய் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய துயரத்தை எடுத்துக்காட்டியிருப்பது நம் கண்ணில் இயல்பாகவே கண்ணீரை வரவழைக்கிறது. நோயில் தாய் இறந்துவிட, தந்தையோ பொய்த்துப்போன விவசாயத்தைக்கண்டு அதிர்ச்சியில் உயிரிழந்துவிட, அனாதைகளாகி விட்ட அண்ணன்-தங்கையின் வாழ்கைப்பாதை மாறிப்போனதை வலிகளோடு சொல்லியிருப்பது, நம் மனதையும் வலிக்கச்செய்கிறது.

தங்கையைப் படிக்கவைக்க வழியில்லாமல் உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டு கவலையில் காத்திருக்கும் அண்ணன் என நிஜவாழ்வில் இப்படியும் இருக்குமா? என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு இதயத்தைச் சிதறடிக்கிறது. விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் கொடுத்துவிட்டுப்போன வலிகள் நிறைந்த சூழலை நேரடியாக களத்திற்கே சென்றுபடமாக்கியுள்ள இயக்குநர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம். 

விவசாயிகளும் ஆவணப்படக்குழுவும்  சந்திப்பு

"தமிழகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்களை நோக்கித்தான் அனைவரது பார்வையும் இருந்தது. எனினும், போராடக்கூடியவர்கள், உணர்வாளர்கள் இயங்கவில்லை என்று நான் சொல்லவில்லை. விவசாயிகளின் உயிரிழப்புகளை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அந்த அழுத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதிலிருந்து உருவானதுதான் "கொலை விளையும் நிலம்". விவசாயப் பின்புலத்தில் இருந்து வந்த நம் ஆட்சியாளர்கள், விவசாயிகளின் தற்கொலைகளைக் கவனிக்க வைப்பதற்கு ஏதாவது ராஜுவ்காந்தி செய்யவேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான வேலையைத் தொடங்கினேன். இப்படிப் படத்தை எடுக்க, சம்பவங்கள் நடந்த இடங்களுக்குக் குழுவுடன் பயணப்பட்டோம். கிளம்பிய முதல்நாள் அனைவருமே 'நான்-வெஜ்' போன்ற நல்ல உணவுவகைகளைச் சாப்பிட்டோம். அதற்கு அடுத்தநாள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்துப்பேசினோம். அங்கு நிலவும் சூழல்களைப் படம் எடுக்கத் தொடங்கிய அன்றுஇரவு யாருமே சாப்பிடவில்லை. அனைவருமே விவசாயிகள்படும் துரயங்களைப் பார்த்த பிறகு தயிர்சாதம் சாப்பிடுவது நீராகாரம் எடுத்துக்கொள்வது போன்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். அந்த அளவுக்கு எங்கள் அனைவரின் முகத்திலும் சோகம் அப்பிக்கொண்டது. 'விவசாயிகளின் இந்த நிலையைக் கண்டு சிலர் இரவு முழுவதும் உறங்கவில்லை' என வலியோடு சொன்னார்கள்.

இந்த படப்பிடிப்புக்காக செலவிட்ட மொத்தம் 14 நாள்களும் இப்படித்தான் போனது. விவசாயிகளின் மரணத்தால் அந்தக்குடும்பங்கள் படும் இன்னல்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருந்தோம். காட்டப்பட்ட ஏழு குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்கும் உதவித்தொகை தற்போது கிடைத்துள்ளது. இந்தப்படம் குறித்து, சமூக வலைதளங்களில் எழுதியிருந்தேன். அதைப் படித்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் உதவிசெய்ய முன்வந்துள்ளனர். இப்படத்தில் ஆட்சியாளர்களை நேரடியாகக் கேள்விகேட்கும் பாடல்வரிகளையும், வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தேன். நாட்டின் முதுகெலும்பாக இருந்த விவசாயத்தை ஆட்சியாளர்கள் அழித்து விட்டார்கள். அப்படி அழிக்கப்பட்ட ஒன்றை கேள்விகேட்கும் ஆவணமாகவும் தட்டி எழுப்பும் பெருஎழுச்சியாகவும் இந்தப்படம் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார் இயக்குநர்.

"பயிருமில்ல உயிருமில்ல; 
வட்டிகட்ட பணமுமில்ல
அய்யா உங்க லிஸ்ட்டுல
விழுந்த எங்க பொணமுமில்ல

தூக்குல தொங்குறான் விவசாயி
எதுக்குடா உங்களுக்கு நாற்காலி
சந்ததிங்க சாகுதய்யா
சாராயம் விக்குது சர்க்காரு
இந்தியாவ வித்துத் தின்னும்
கார்ப்பரேட்டுங்க தான் அதுக்கு அப்பாரு"

அதிரடியும், வலியும் நிறைந்த வரிகளில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை அல்ல... தமிழக ஆட்சியாளர்களின் திறமையற்ற சிறுமையுடன் கூடிய செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதே உண்மை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement