வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (11/07/2017)

கடைசி தொடர்பு:19:45 (11/07/2017)

அகதி ஆக்கியது டிரம்ப்... அடைக்கலம் தந்தது யார்? #StartUpBasics அத்தியாயம் 16

ஸ்டார்ட்அப்

ஒரு நண்பர் கேட்டார். "ஸ்டார்ட்அப் பற்றி எழுதுறீங்க சரி. ஆனால் நாட்டு நடப்பு எதுவும் சரியில்ல... டிமானிடைசேசன் ஜிஎஸ்டி என்று அரசு நம்மை வாட்டி வதைக்குது. இப்போ எப்படிப்பா தொழில் தொடங்குவது". அவருக்கு Airbnbயின் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இறுதிவரை கேட்டுவிட்டு இப்படி சொன்னார் ”உண்மை தான்... வெற்றி என்பது நேரம் காலத்தில் எல்லாம் இல்லை... வெல்வோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறது.”
 
2008 உலகப் பொருளாதாரம் மேற்குலக நாடுகளை உருட்டி எடுத்த நேரம். உலக பணக்காரர்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் எல்லாம் மிகப் பெரிய அடியை வாங்கிய நேரம். இந்தியா, சீனாவைத் தவிர உலக பங்குச்சந்தைகள் அனைத்தும் மண்ணைக் கவ்வின. அமெரிக்காவில் நிறைய வேலை இழப்புகள். டாலர் பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்தது. இப்படியான கடும் சூழலில் தான் ஏர்பிஎன்பி பிறந்தது. 

இரண்டு பள்ளிதோழர்கள் தொழில் நிமித்தம் சான் பிரான்சிஸ்கோவில் ஒரே அறையில் வசிக்கிறார்கள். அவர்களால் விடுதி அறை வாடகை கொடுத்து கட்டுபடியாகவில்லை. காசு கரையக் கரைய ஊருக்கு வெளியே மலிவான தங்கும் விடுதிகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது ஒரு ஐடியா உதிக்கிறது. அந்த நகரில் எத்தனை வீடுகள் இருக்கிறது? அவர்களில் சிலர் ஒரு படுக்கை, காலையில் சிற்றுண்டி வாடகைக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறார்கள். அதை செயல்படுத்த ஓர் இணையதளத்தை ஆரம்பிக்கிறார்கள். 

பிரையன் செஸ்கி என்ற 25 வயதே நிரம்பிய அந்த இளைஞர் தன் அறை தோழன் ஜோ கெப்பியாவுடன் தொடங்கிய www.airbedandbreakfast.com 2008 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படுகிறது. அப்போது இண்டஸ்ட்ரியல் டிசைனர் சொசைட்டி கருத்தரங்கு ஒன்று நடைபெறுகிறது. அதில் பங்குகொள்ள நாடெங்கும் உள்ள தொழில்வல்லுனர்கள் சான்பிரான்சிஸ்கோவிற்கு படை எடுக்கிறார்கள். ஆனால் தங்குவதற்கு ஓட்டல் அறைகள் இல்லை. அந்த நேரம் இவர்கள் கைகொடுக்க, ஒரு புதிய அத்தியாயம் பிறக்கிறது.

பிரையன்  துறுதுறு இளைஞர் மட்டுமல்ல அதிரடி பேர்வழி. தங்கள் நிறுவனத்திற்கு தேவையான முதல் முதலீட்டை ஒரு வித்தியாசமான ஐடியாவால் திரட்டினார். அப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஒபாமா மற்றும் ஜான் மெக்கெய்ன் முக்கிய வேட்பாளர்கள். அவர்கள் பெயரில் ஒரு காலைசிற்றுண்டி பேக் ஒன்றை வெளியிடுகிறார். ஒவ்வொன்றும் 40 டாலர்களுக்கு விற்கப்பட்டாலும் தேர்தல் சூட்டில் இரண்டே மாதத்தில் 800 பேக்குகள் விற்றுதீர அவர்களுக்கு தேவையான ஆரம்ப முதலீடு கிடைத்துவிடுகிறது. 

ஸ்டார்ட்அப் கதைகளில் பொதுவான விஷயம் எந்த பயமும் இல்லாமல் ஊக்கத்துடன் இறங்கிவிட வேண்டும். பிறகு தானாக காலம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கும். அவை அதிர்ஷ்டம் என்பார்கள் சிலர். ஆனால் உண்மையில் அவை ஊக்கத்திற்கான இயற்கையின் பரிசு. அப்படி ஒரு பரிசு பால் கிரஹாம் என்ற முதலீட்டாளர் மூலமாக இவர்களுக்கு கிடைத்தது. இந்த பொடியர்களின் வித்தியாசமான முதலீட்டு முயற்சியை பார்த்த கிரஹாம் , YCombinator என்ற சிறுதொழில் முதலீட்டு நிறுவனம் மூலமாக அவர்களுக்கு தேவையான தொழில்பயிற்சியும், 20000 டாலர்கள் முதலீட்டை குறைந்த வட்டிக்கு கொடுக்கிறார். 

குறுகிய காலத்தில் பத்தாயிரம் பயனாளர்கள் இவர்கள் சேவையை பயன்படுத்துகிறார்கள். சுமார் 2500 வீட்டுக்காரர்கள் உள்வாடகைக்கு விட பதிவு செய்கிறார்கள். நிறுவனம் வேகமாக வளர்கிறது. ரொம்பவும் நீளமான இதன் பெயரை airbnb.com என்று சுருக்கி வெளியிட இன்னும் பலரை சேர்க்கிறது. நாதன் ப்ளாக்கார்ஷிக் என்ற டெவெலப்பரையும் சேர்த்து மூவர் கூட்டணி இன்னும் பல வசதிகளை தங்கள் தளத்தில் அறிமுகப் படுத்துகிறார்கள். 

ஸ்டார்ட்அப்

அந்த கடும் பொருளாதார நெருக்கடி காலத்திலும் எப்படி வெற்றி பெற்றது என்று பார்ப்போம். உங்கள் வீட்டின் ஒரு அறையையோ அல்லது ஒரு பகுதியையோ ஒரு காற்றுப்படுக்கை, காலை சிற்றுண்டியுடன் கட்டண விருந்தினர்களுக்கு தின வாடகைக்கு கொடுக்கிறீர்கள். இதற்கு பெரிய முதலீடு தேவையில்லை. மறுபுறம் சுற்றுலா செல்லும் பயணிகள் பெரிய ஹோட்டலில் வாடகைக்கு எடுத்தால் நிறைய செலவாகும். அதுவே ஒரு வீட்டில் விருந்தினர் போல சென்று அதற்கு கட்டணம் செலுத்திவிடுவது மிகவும் எளிது. அன்றைய தேதியில் பொருளாதார நெருக்கடியில் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்த நடுத்தரவர்க்க மக்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது. Airbnb இருதரப்பையும் இணைப்பதோடு மட்டுமல்லாமல் பயணிகள், வீட்டு உரிமையாளர்கள் இருவரின் பாதுகாப்பையும் பல வழிகளில் உறுதி செய்கிறார்கள்.  

ஆகவே 2009இல் இவர்களின் வேகமான வளர்ச்சியை கண்டு தொழில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இவர்களும் அந்த முதலீட்டுகளை வைத்து டிஜிட்டல் மார்கெட்டிங்கில் கவனமாக செலவு செய்கிறார்கள். அது நன்கு பலன் கொடுக்கிறது. விரைவில் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுவந்து சேர்க்கிறது. 

இங்கே ஒரு ட்விஸ்ட் கொடுக்கிறார் ஹாலிவுட் ரொமான்டிக் ஹீரோ ஆஸ்டன் குட்சேர் (Ashton Kutcher). இவர் பல படங்களில் காதல் மன்னனாக வலம் வருபவர். இவரது A-Grade Investment நிறுவனம் Airbnbஇல் முதலீடு செய்கிறது. கூடவே இவர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் மாற அமெரிக்காவில் மட்டுமே இயங்கி வந்த Airbnb உலகம் முழுக்க பரவுகிறது. உலக சுற்றுலாக்களின் தொட்டிலான ஐரோப்பா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கிளைகளை பரப்புகிறது. இந்தத் துறையில் அங்குள்ள சிறு குறு நிறுவனங்களை கையகப்படுத்துகிறது. 

2014 தொடக்கத்தில் உலகம் முழுக்க ஒரு கோடி வாடிக்கையாளர்களை பெற்று வலுவான நிலையில் முன்னேறுகிறது. ஹரிக்கேன் புயல் வந்த சமயத்தில் இவர்களின் சேவையை அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக திறந்துவிடுகிறார்கள். இது போன்ற சமூகநல நடவடிக்கைகள் மக்களிடையே இவர்களுக்கு நல்ல பெயரை கொண்டுவந்து சேர்க்கிறது. 

பிரையன் அதிரடி மன்னன் என்பதை 2017 ஜனவரியில் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு திடீர் சட்டத்தின் மூலம் சில நாட்டினரை அமெரிக்காவில் நுழைய தடைவிதித்தார். இதனால் திடீர் அகதிகளாக்கப்பட்ட அந்த மக்களுக்கு பிரையன் தங்கள் சேவையின் மூலமாக இலவச தங்கும்விடுதிகளை கொடுத்தார். இது அமெரிக்க மக்களின் ஆதரவை பெருவாரியாக அள்ளியது. அதன் பலன் இந்த காலாண்டில் மிகப் பெரிய லாபத்தை சம்பாதித்தது.

முப்பந்தைந்து வயதிற்குள் சாதித்த இளைஞர்கள் பட்டியலில் பேஸ்புக் சக்கர்பெர்க்கிற்கு அடுத்து பிரையனும், ஜோவும் தான் இருக்கிறார்கள். இன்று இருவரின் பாக்கெட்டிலும் 20,000 கோடி ரூபாய்களுக்கு அதிகமாக சொத்து இருக்கிறது. 

ஸ்டார்ட்அப் பாடம்
”பறவையோட குணம் பறப்பது தான். அதை கூண்டுக்குள் அடைத்து வைக்காதே. பறக்க விடு. வாழ்வா சாவா என்று அது தீர்மானிக்கட்டும்” என்பார் கபாலி ரஜினி. 

ஸ்டார்ட்அப் உலகிலும் அது தான் முக்கியம். இளமை என்பதன் அர்த்தமே புதிதாக ஒன்றை படைப்பது தான். அவர்களின் இயல்பில் நம்பிக்கையோடு ஒரு தொழிலில் இறங்கினால் குடும்பமும், நண்பர்களும் ஆதரவு கொடுத்து அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும். அவர்களின் முயற்சியும், சிந்தனையும், ஊக்கமும் இயற்கை சக்தியை இவர்களின் பக்கம் திருப்பி நினைத்தே பார்த்திராத இடத்தில் இருந்தும் உதவிகள் கிடைக்ககூடும்.

இளைஞர்களுக்கு விடாத ஊக்கம் என்பது மிக மிக இயல்பானது. சிலர் காதலில், சினிமாவில், அரசியலில் செலுத்துவார்கள். சிலர் ஒரு புதுமையான தொழிலில் செலுத்துவார்கள். எங்கு செலுத்தினாலும் உண்மையான ஊக்கத்திற்கு வெற்றி நிச்சயம் உண்டு

 

முந்தைய அத்தியாயங்கள்

அமேசன்

 

உச்சபட்ச வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையில் யார் அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்தது என்று பார்த்தால் பெரும்பாலும் எந்த தனிமனிதரும் இருக்க மாட்டார்கள். ஒரு பயணம் அல்லது புத்தகங்கள் தான் அவர்களுக்கு அந்த அசாத்திய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. வேலையை விட்ட பின் ஒரு தரைவழிப் பயணத்தை நியுயார்க்கில் இருந்து சியாட்டில்க்கு மேற்கொள்கிறார்.அந்தப் பயணம் பல அனுபவங்களை கொடுக்கிறது. புதிய யோசனைகளை அதை செயல்படுத்தும் வழிமுறைகளை கொடுக்கிறது. அந்தப் பயணத்தில் உதித்த யோசனை தான் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்