Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘பிக் பாஸ்’ கமல் போல நமக்கும் இனி டி.விதான் போல! கேளிக்கை வரி நசுக்கும் சினிமா எனும் கொண்டாட்டம் #VikatanExclusive

சினிமா

மிழகத்தில் ஜிஎஸ்டி அமலானதால் அதிக விலை உயர்வை சந்தித்தது எது தெரியுமா? சந்தேகமே வேண்டாம் சினிமா டிக்கெட்தான். தீப்பெட்டி துவங்கி உணவகங்கள் வரை பல பொருள்களுக்கு வரி அதிகமாய் விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரித்தொகை முழுமையாக தளர்த்தப்பட்டு, அதற்குப் பதிலாக ஜிஎஸ்டி. அமலானது. ஆனால், இதில் திரையரங்கு மட்டும் விதிவிலக்கு. ஏற்கெனவே கேளிக்கை வரியுடன் வசூலிக்கப்பட்ட டிக்கெட் தொகையில் இருந்து 28 சதவீதம் ஜிஎஸ்டி. தொகையை கூடுதலாக வசூலிக்கின்றன திரையரங்குகள். புரியவில்லையா... புரியும்படியே சொல்கிறேன்.

சினிமா

(நேற்றும்... இன்றும்... சினிமா டிக்கெட் கட்டணம்)

இதுதான் சினிமா டிக்கெட்டுக்கான வரி கணக்கு

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஏ.சி. உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் கேளிக்கை வரியுடன் கூடிய அதிகபட்ச சினிமா கட்டணம் என்பது 120 ரூபாய். இதில் டிக்கெட்டின் நிகர விலை ரூ.83.30 மட்டும் தான். கேளிக்கை வரி ரூ.35.70. திரையரங்கப் பராமரிப்புக் கட்டணம் ரூ.1. மொத்தமாக சேர்த்து 120 ரூபாய். இதுதான் சினிமா டிக்கெட்டுக்கான கணக்கு.

இப்போது ஜிஎஸ்டி அமலானதையடுத்து, தமிழகத்தில் வசூலித்து வரப்பட்ட கேளிக்கை வரி என்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது டிக்கெட் விலையான ரூ.83.30 ரூபாய் மற்றும் அதன் மீதான 28 சதவிகித ஜிஎஸ்டி-யையும், அதோடு பராமரிப்புக்கட்டணம் ஒரு ரூபாயும் சேர்த்து வசூலிக்க வேண்டும். அப்படி பார்த்தால் டிக்கெட் விலை, ஏற்கெனவே இருந்த டிக்கெட் விலையை விட குறைவாகவே இருக்க வேண்டும். 

ஆனால், தற்போது கேளிக்கை வரியுடனான சினிமா டிக்கெட் விலை 120 ரூபாயில் இருந்து 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து 153.60 என வசூலிக்கப்படுகிறது. 83.30 ரூபாய்க்கு 28 சதவீத ஜிஎஸ்டியை கட்ட வேண்டிய மக்கள். 120 ரூபாய்க்கு ஜிஎஸ்டியை கட்டி வருகிறார்கள். இதன்மூலம் ஏறத்தாழ 50 சதவிகிதம் கூடுதல் வரியை  மக்கள் செலுத்தி வருகிறார்கள். உண்மையில் ஜிஎஸ்டியால் தியேட்டர் டிக்கெட் விலை உயரவில்லை. ஜிஎஸ்டியை காரணம் காட்டி டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி இருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

சினிமா

கேளிக்கை வரி வந்தது இப்படித்தான் !

கேளிக்கை வரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்தான் துவங்கியது. நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் நாடகங்கள் மூலம் சுதந்திரப் போராட்டங்களுக்கான விதை விதிக்கப்பட்டு வந்தது. பெரும்பான்மையான நாடகங்கள் சுதந்திரப்போரை முன்னிறுத்தியும், அதற்கான முன்னேற்பாட்டுக் களமாகவும் மாறின. இதைத் தடுக்க முடியாத ஆங்கிலேயர்கள், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கேளிக்கை வரியை கொண்டு வந்தனர். நாடகங்கள், திரைப்படங்களுக்கு வரும் மக்கள் அதற்கான கட்டணத்தோடு வரியையும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்றால், பெருங்கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என நினைத்தனர் ஆங்கிலேயர்கள். அதற்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்தக் கேளிக்கை வரி. இந்த வரியினங்கள் மூலம் கிடைக்கும் தொகை, அந்தப் பகுதி வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இது பெரும் பலனளிப்பதாக இருந்தது.

இதுவே நாடு சுதந்திரமடைந்த பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கவும் காரணமாக மாறிப்போனது. நாடகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், தொலைக்காட்சிகள் மூலம் கேளிக்கை வரி கிடைத்து வருகிறது. இதில் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களிடம் பெறப்படும் கட்டணம்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

வரி விலக்கு... ஏன் எதற்கு எப்படி?

மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணும் கருத்தாழமிக்க படங்களுக்கு ஆரம்பத்தில் வரி விலக்கு கொடுக்கப்பட்டது. அதாவது ’கப்பலோட்டிய தமிழன்’, ’ராஜராஜ சோழன்’, ‘பாரதி’, ‘காந்தி’ போன்ற தலைவர்களின் படங்களுக்கும், ‘வீடு’ போன்ற மக்களுக்குச் சென்றடைய வேண்டிய, கருத்துகளை உள்ளடக்கிய படங்களுக்கும் வரி விலக்கு கொடுக்கப்பட்டது. 

உதாரணமாக 1980களில் திரையரங்க நுழைவுக்கட்டணத்தில் நிகர கட்டணத்தை விட கேளிக்கை வரி, உபரி வரி ஆகியவை கூடுதலாக வசூலிக்கப்பட்டன. மொத்த நுழைவுக்கட்டணத்தில் 55 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. உதாரணமாக வரியுடன் சேர்த்து 4 ரூபாய் வசூலிக்கப்பட்ட திரையரங்கின் நிகரக் கட்டணம் என்பது ரூ.1.94 தான். கேளிக்கை வரி, உபரி வரி ஆகியவை ரூ.2.06 வசூலிக்கப்பட்டது. இந்த வரியினங்கள் மக்கள் நலப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.

அதுவே, வரி விலக்கு கொடுக்கப்படும் படங்களுக்கு நிகர கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. திரையரங்கு நுழைவுக்கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து தரப்பினரையும் அந்தப் படம் சென்றடைய வாய்ப்பாக இருந்தது.  அதுவே அரசின் நோக்கமாகவும் இருந்தது. அதற்காகவே வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

ஆனால், கேளிக்கை வரி என்பது கேலிக்கூத்தாக்கப்பட்டது 1980களின்  இறுதியில் தான். தமிழகத்தில் சுதந்திரத்துக்குப் பின்னர் கேளிக்கை வரி என்பது மொத்தக் கட்டணத்தில் 55 சதவீதமாக இருந்தது. கேளிக்கை வரியின் மூலம் கிடைக்கும் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதாரமாக சொல்லப்பட்டது. 1989-ம் ஆண்டு முதல்வரான கருணாநிதி, கேளிக்கை வரியை 45 சதவிகிதமாகக் குறைத்தார். அடுத்த இரு ஆண்டுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட... தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா கேளிக்கை வரியை மேலும் குறைத்து 30 சதவிகிதமாக்கி திரைத்துறை விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார்.

சினிமா

வரி விலக்கும்... தமிழ் வளர்ச்சியும் !?

2006ல் 5-வது முறையாக முதல்வரான கருணாநிதியிடம் கேளிக்கை வரியை நீக்க திரைத்துறையினர் கோரிக்கை வைத்தனர். அப்போது கருணாநிதி எடுத்த முடிவுதான் கேளிக்கை வரியை மிக மோசமான நிலைமைக்குக் கொண்டு சென்றது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக (?) எனச்சொல்லி, இனி தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு முழு வரி விலக்கு என அறிவித்தார் கருணாநிதி. இதனால் உற்சாகமடைந்த திரைத்துறையினர் ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ எடுத்துக் கொண்டாடினர்.

அரசின் இந்த அறிவிப்பால், ஏற்கெனவே ஆங்கில பெயர்களில் வைக்கப்பட்ட படத்தின் பெயர்கள் அவசர அவசரமாக தமிழ்ப் பெயர்களாக மாற்றப்பட்டன. 'சம்திங் சம்திங்' 'உனக்கும் எனக்கும்' என்றானது. 'ஜில்லென்று ஒரு காதல்' 'சில்லென்னு ஒரு காதல்' என மாற்றப்பட்டது. 'எம்டன் மகன்' 'எம் மகன்' ஆனது. 'மாஸ்’ என்ற பெயர் ‘மாசு’ என்றானதெல்லாம் பெரும் கேலிக்கூத்து. தமிழில் மாசு என்றால் குற்றம், தூசு என்ற பொருள் வரும். ஆனால், படத்தின்படி ‘மாசிலாமணி’ என்ற நாயகன் பெயரைச் சுருக்கி ‘மாசு’ என்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது.  இப்படி திடீர் என தமிழுக்கு மாறிய திரைப்படங்கள் பெரும் நகைப்பை ஏற்படுத்தின.

திரைப்படங்களின் பெயர் மட்டுமே தமிழில் இருந்ததே தவிர... படங்களின் காட்சியமைப்பில் எந்த மாறுதலும் இல்லை. அழகிய தமிழ்ப் பெயருடன், படம் முழுக்க ஆங்கில வசனங்களைக் கொண்ட படங்கள் வரிவிலக்கு பெற்றன. காந்தி, பாரதி போன்ற தலைவர் படங்களுக்கு கொடுக்கப்பட்ட வரி விலக்கு, காட்சிக்கு காட்சி ஆபாசமும், விரசமும் இருந்த படங்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பது மிகப்பெரிய முரணாக பார்க்கப்பட்டது.

சினிமா

வரி விலக்கில் நுழைந்த அரசியல்!

2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. "தமிழ்ப்பெயர் இருந்தால் மட்டும் போதாது. தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அத்தகையப் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்" எனவும் அறிவித்தார். தேர்வுக்குழு உறுப்பினர்கள் படத்தைப் பார்த்து, அப்படம் வரி விலக்குக்கு தகுதியானது தானா என்பதை முடிவு செய்யும் முறை அமலானது. தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு எனச்சொன்னாலும், வேண்டியவர்களுக்கு மட்டுமே வரியை விலக்கியது அரசு. அரசியல் காரணங்களால் பல படங்களுக்கு வரி விலக்கு கிடைக்காமலும் போனதாக புகார் எழுந்தது இந்த காலத்தில்தான்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வந்த படங்களுக்கு தொடர்ச்சியாக வரி விலக்கு மறுக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் மீனவர்கள் பிரச்னையை முன்னிறுத்தி வெளியாகி விருதுகளை பெற்ற ‘நீர்ப்பறவை’ படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் அடுத்தடுத்த அத்தனை படங்களுக்கும் வரி விலக்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மறுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்போது வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்குத்தான் உதயநிதி ஸ்டாலினால் வரிவிலக்கைப் பெற முடிந்தது.

இதேபோல், ஒரு காலத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது. ‘தலைவா’ துவங்கி, ‘ஜில்லா’, ’புலி’ என சில படங்களுக்கு அடுத்தடுத்து வரி விலக்கு கிடைக்காமல் போனதற்கும் அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டது. 
கமலஹாசனுக்கு விஸ்வரூபத்தில் துவங்கிய சிக்கல், பாபநாசம் வரை நீண்டது. பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற த்ரிஷ்யம் திரைப்படம், தமிழில் பாபநாசம் எனும் பெயரில் வெளியானபோது, அதற்கு வரி விலக்கு வழங்க மறுத்தது தேர்வுக்குழு. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் சுவாரஸ்யமானது. பாபநாசம் திரைப்படம் 'குழந்தைகளை பொய் சொல்ல ஊக்குவிக்கிறது' என காரணம் சொல்லி வரி விலக்கை வழங்க மறுத்தது அரசு.

சினிமா தியேட்டர்

கேளிக்கை வரி விலக்கின் பின்னணியில் லஞ்சம்?

மறுபுறம் வரிவிலக்கு வேண்டும் என்றால், லஞ்சமாக பெரும் பணம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கேளிக்கை வரியின் பின்னணியில் நடந்த லஞ்சத்தை வெளிப்படையாகவே பேசத்தொடங்கி விட்டார்கள் தயாரிப்பாளர்கள். 
"எனது நிறுவனம் தயாரித்த 'அட்ரா மச்சான்  விசிலு'  என்ற படத்துக்கு வரி விலக்கு அளிக்க 5 லட்சம் ரூபாய் அமைச்சரிடம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் வெளிப்படையாக மீடியாக்களிடம் பொங்கினார். கடந்த 7,8 ஆண்டுகளாக இது போன்று படங்களுக்கு பணம் பெறப்படுவதாக தயாரிப்பாளர் கே.ராஜனும் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.

ரஜினி, கமல் படங்களுக்கு 1.50 கோடி ரூபாய், விஜய், அஜித் படங்களுக்கு 1 கோடி ரூபாய், மற்ற முன்னணி நாயகர்களின் படங்களுக்கு 50 லட்சம், சிறிய படங்களுக்கு 5 முதல் 20 லட்சம் வரை பணம் பெறப்படுவதாக தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக பேசி வருவது வரிவிலக்கு எனும் பெயரில் நடந்து வந்த பல கோடி ரூபாய் மோசடியை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது. 

சினிமா டிக்கெட்

காணாமல் போன வரி... குறைந்து போன நிதி !

தமிழைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என கருணாநிதியும், கலாசாரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு வரி விலக்கு என ஜெயலலிதாவும் மாறி மாறி வரி விலக்கை திரைத்துறைக்கு வாரி வழங்க... கேளிக்கை வரி சூனியமாகிப் போனது. 

திரைப்படங்கள் மூலம் பெறப்படும் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கிய வருவாய்களில் ஒன்றாக இருந்தது. 55 சதவிகிதமாக கேளிக்கை வரி இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமான நிதி கிடைத்துவந்தது. இது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பயனளிப்பதாய் இருந்தது. சுதந்திரப்போரை தடுக்க கேளிக்கை வரியை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் நிதியை மக்கள் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தினர். ஆனால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அரசுகளின் சுயநலத்தால் கேளிக்கை வரி என்பது காணமாலே போனது. 

2000-ம் ஆண்டு துவக்கத்தில் ரூ.75 கோடிக்கும் மேலாக கிடைத்து வந்த கேளிக்கை வரி என்பது, வரி விலக்கு அமலுக்கு வந்ததும் 15, 16 கோடிகள் என குறைந்து போனது. 

சினிமா தியேட்டர்

வரி செலுத்துபவர்களுக்கு பலனளிக்காத 'வரி விலக்கு'

சரி இந்த வரி விலக்கால் மக்கள்தான் லாபமடைந்தார்களா என்றால் அதுவும் இல்லை. பொதுவாக வரி விலக்கு என்பது யார் வரி செலுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் போய் சேர வேண்டும். ஆனால் இங்கே வரி விலக்கு என்பது  திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மட்டுமே லாபத்தை கொடுத்தது. உலகிலேயே வரி செலுத்துபவர்களுக்கு பலனளிக்காத வரி விலக்கு ஒன்று இருக்குமானால் அது நிச்சயம் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட கேளிக்கை வரி விலக்குதான்.

120 ரூபாய் டிக்கெட்டில் ரூ. 84.30 தவிர, மீதமுள்ள ரூ.35.70 என்பது வரி. வரி விலக்கு பெற்ற படங்களின் டிக்கெட் தொகையில் வரித் தொகையை கழித்துக்கொண்டு ரூ.84.30 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் யாரும் டிக்கெட் கட்டணத்தை குறைக்கவில்லை. வரி சுமையை மக்கள் சுமக்க... வரி விலக்கால் கிடைக்கும் லாபத்தை தியேட்டர் உரிமையாளர் முதல் தயாரிப்பாளர்கள் வரை அடைந்தனர். 

நடிகர்களும் இந்த லாபத்தில் பங்கு போட்டுக்கொண்டனர். நடிகர்களின் ஊதியம் கணிசமாக உயரத் துவங்கியது இதன் பின்னால்தான். லிங்கா, தசாவதாரம் என தமிழ்ப் பெயர் இல்லாத படங்களுக்கு வரி விலக்கு கொடுத்ததன் பின்னணியில் இந்த சம்பள உயர்வையும் சேர்த்து பார்த்தால், சம்பள உயர்வுக்கான அர்த்தம் எளிதில் விளங்கும். இடையிடையே  சிலர் நீதிமன்றத்தையும் நாடினர்.

அப்போதெல்லாம் 'வரி விலக்கு என்பது வரி செலுத்துபவர்களுக்கானது. அதை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது" என நீதிமன்றம் கண்டிப்பாகவே சொன்னது. ஆனால், அதை திரையரங்கு உரிமையாளர்கள் மதிக்கவில்லை. அரசும் ஏன் மதிக்கவில்லை என கேட்கவில்லை. 

இதுவரை 500 கோடி வரை வருவாய் இழப்பு...?

ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வரியை செலுத்திப் படத்தை பார்த்து விட்டோம். ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் என கணக்கிட்டால் கூட, 10 ஆண்டுகளில் எப்படியும் ரூ.500 கோடிக்கு குறையாமல் விலக்களிக்கப்பட்ட வரியை நாம் செலுத்தி இருக்கிறோம். 500 கோடி ரூபாய் வருவாயை அரசு இழந்திருக்கிறது அல்லது 500 கோடிக்கு மிகப்பெரும் ஊழல் நடந்திருக்கிறது.

இதுவரை விலக்களிக்கப்பட்டாலும் வரித்தொகையை சேர்த்து வசூலித்த திரையரங்கு உரிமையாளர்கள், இப்போது கேளிக்கை வரி என்பதை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் அந்தத் தொகையை வசூலிப்பதுதான் உச்சம். இப்போது டிக்கெட் விலையோடு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேளிக்கை வரிக்கான தொகையையும் சேர்த்து,  அதோடு ஜிஎஸ்டி.யையும் சேர்த்து, நிகர விலை ரூ.83.30 கொண்ட டிக்கெட்டை 153.60க்கு விற்கிறார்கள். அதாவது பராமரிப்பு கட்டணத்தோடு ரூ.84.30 மதிப்பிலான டிக்கெட்டுக்கு, நாம் செலுத்தும் கூடுதல் கட்டணம் என்பது 70 ரூபாய். இதில் ஏறத்தாழ 30 ரூபாய்தான் ஜிஎஸ்டி. அப்படியென்றால் மீதமுள்ள 40 ரூபாய் எந்த கணக்கில் சேரும்?

சினிமா தியேட்டர்

பார்க்கிங் முதல் பாப்கார்ன் வரை

டிக்கெட்டில் மட்டுமல்லாமல், தியேட்டருக்கு வருபவர்களிடம் எல்லா வகையிலும் பணத்தைப் பிடுங்குகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். வரி விலக்கு என்ற பெயரில் சினிமா நடிகர்களின் சம்பளத்தை வானளவு உயர்த்தி விட்டு, அதைச் சமாளிக்க இல்லாத வரித்தொகையையும், பார்க்கிங் துவங்கி கேண்டீன் வரை அநியாயக் கட்டணங்களை விதித்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கின்றன  திரையரங்குகள்.

பார்க்கிங் கட்டணம் ரூ. 5 முதல் ரூ.10 வரை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்றால் இவர்கள் ரூ.30, ரூ.40, ரூ.50 என வசூலிக்கிறார்கள். மல்டிப்ளெக்ஸில் நிலைமை இன்னும் மோசம். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என கணக்கிட்டு 4 மணி நேரம் திரையரங்க வளாகத்தில் இருந்தால் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரே சாலையில் அருகருகில் இருக்கும் தியேட்டர்களில் ஒரு தியேட்டரில் பார்க்கிங் கட்டணம் 20 ரூபாயாகவும், இன்னொரு திரையரங்கில் 50 ரூபாயாகவும் இருக்கிறது. இவையெல்லாம்  மிகப்பெரிய மோசடி. நம்மைக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை நாம் உணரவும் இல்லை. இதைத் தடுக்க வேண்டிய அரசு இதை கண்டுகொள்வதும் இல்லை.

அடுத்து கேண்டீனில் நடக்கும் கொள்ளை. நீங்கள் தியேட்டரினுள் எந்த உணவுப் பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. பல திரையரங்குகளில் நீங்கள் தண்ணீர் கேன் கூட கொண்டு செல்லக்கூடாது என விதியை (!) உருவாக்கி இருக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு பிஸ்கெட்டில் துவங்கி எந்த உணவுப் பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கென பிரத்யேகமாக உள்ள பிஸ்கெட் கொண்டு செல்ல வேண்டும் என்றால் கூட உங்களுக்கு அனுமதி கிடைக்காது. இல்லாவிட்டால் வாசலில் உங்களை வலுக்கட்டாயமாக சோதிக்கும் காவலாளியிடம் கெஞ்சி அனுமதி வாங்க வேண்டும். 

திரையரங்கில் ஏன் உணவு அனுமதிப்பதில்லை என்றால், 'திரையரங்கு அசுத்தமாகி விடும்' என காரணம் சொல்கிறார்கள். 10 ரூபாய் கூல்டிரிங்க்ஸ் 60 ரூபாய், 30 ரூபாய் பாப்கார்ன் 100 ரூபாய், 15 ரூபாய் பப்ஸ் 60 ரூபாய் என பல மடங்கு கூடுதல் விலையை கொடுத்து திரையரங்கு கேண்டீனில் வாங்கினால், தட்டில் வைத்து உங்கள் சீட்டுக்கே வந்து பரிமாறுவார்கள். மக்கள் கொண்டு செல்லும் பிஸ்கட்டில் அசுத்தமாகிவிடும் திரையரங்கு, அவர்கள் கொடுக்கும் பப்ஸிலும், பாப்கார்னிலும் அசுத்தமாகாதா? 

விலக்கு கொடுத்த வரியை திருடி வைத்துக்கொள்கிறீர்களே, அதை நாங்கள் கேட்கவில்லை. பார்க்கிங் என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் வழிப்பறியை விமர்சிக்கவில்லை. கேண்டீனில் நடக்கும் கொள்ளையைக் கண்டிக்கவில்லை. ஆனால், திரையரங்கு வாசலில் குண்டர்களை நிறுத்தி, திருடர்களை சோதிப்பது போல் சோதிக்கிறீர்களே? உண்மையில் திருட்டு, வழிப்பறி, கொள்ளையடிக்கும் நீங்கள் எங்களை சோதிப்பது நியாயம் தானா? இப்போது இதற்கெல்லாம் உச்சமாக நிறுத்தி வைக்கப்பட்ட வரியையும், அதற்கும் சேர்த்து வரியையும் வசூலித்து மேலும் கொள்ளையடிக்கிறீர்களே இது எந்த வகையில் நியாயம்?

ஒரு படத்துக்கு டிக்கெட் விலை 153.60, ஆன்லைன் புக்கிங் கட்டணம் 30 ரூபாய், 3டி படமாக இருந்தால் கண்ணாடி 30 ரூபாய். ஒருவருக்கு ரூ.213.60. 4 பேர் கொண்ட குடும்பம் படத்துக்குச் சென்றால் ரூ.854.40 டிக்கெட்டுக்கு மட்டும் செலவாகும். 2 டூவீலருக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தினால் ரூ.100 முதல் ரூ.200, இடைவேளையில் கேண்டீன் பக்கம் ஒதுங்கினால் குறைந்தது ரூ.300 என மொத்தம் ஆயிரம் ரூபாயை கடந்து 1500 ரூபாயை எட்டும் செலவு. மக்களை இப்படி வாட்டி வதைத்து விட்டு, இணையத்தில் டவுன்லோடு செய்கிறார்கள், சிடியில் படம் பார்க்கிறார்கள் என்று புலம்புகிறீர்களே.. பின்னர் மக்கள் என்னதான் செய்வார்கள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close