Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’சேரி பிஹேவியர்: கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடு’ - பிக் பாஸை காய்ச்சி எடுக்கும் தலைவர்கள்!

காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஓவியாவைப் பார்த்து காயத்ரி ரகுராம் பேசிய "சேரி பிஹேவியர்" - என்ற ஒற்றை வார்த்தை, சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாத அலைகளை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம்.

"தமிழர் குடும்ப வாழ்க்கை முறையை சிதைக்கிற ஒரு நிகழ்ச்சியே இந்த பிக்பாஸ். ஒருவகையில் இது சேடிஸ்ட் யுக்தியாகவே பார்க்கிறேன். இந்த நிலையில் 'சேரி பிஹேவியர்' என்று காயத்ரி பேசியது, அப்பட்டமான  சாதி ஆணவ, ஆதிக்கத் திமிர் ஆகும். அவரின் கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடு இது. 'மனிதர்களுள் உயர்வு தாழ்வு கிடையாது' என்ற, சமத்துவ சிந்தனை அவரிடமில்லை. அவருக்குள் ஊறிப்போயிருக்கும், ஆதிக்க சாதிய மனோபாவமே இவ்வகையான மோசமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளது .அதை,வேல்முருகன் எந்தவிதத் தடையுமில்லாமல் எப்படி அந்தத் தொலைக்காட்சி  அனுமதித்தது...  என்று தெரியவில்லை. என்னுடைய வருத்தமெல்லாம் எப்படி இதைக் கமல் அனுமதித்தார் என்பதுதான். கமல் முற்போக்கானவர். பெரியாரிய, திராவிடக் கருத்தோடு இயங்கி வந்தவர் என்பதால், அவர் மீது ஜனநாயக சக்திகளுக்குக் கூடுதல் மதிப்பு உண்டு. ஆனால், அப்படிப்பட்டவரே, இதை அனுமதித்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் கள்ள மௌனம் சமூக நீதிக்கு எதிரான செயலாகும். பணம் கிடைத்தால் மட்டும் போதும் என்று கமல் நினைத்துவிட்டாரோ? பணத்துக்காக எதையும் சொல்ல அனுமதிக்கலாமா? இப்படி ஒரு மோசமான வார்த்தையைக் காயத்ரி வெளிப்படுத்தியபோது, அதற்கு கமல் தடை விதித்திருக்க வேண்டும். தொலைக்காட்சி நிறுவனம் அதை ஏற்கவில்லை என்றால், சமூக நீதிக்கு எதிரான இந்தச் சாதியப் பேச்சுகளை அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று கமல், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் கமல், மேலும் நம் மனங்களில் உயர்ந்திருப்பார். ஆக, எந்த வகையிலும் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியான சாதி ஆதிக்க  மனோபாவக் கருத்துகள் வெளிப்படும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை போடவேண்டும்" என்றார் காத்திரமான குரலில்.

'அக்ரஹாரம்'  என்றும் 'ஊர்' என்றும் 'சேரி' என்றும் தமிழ்ச் சமூகம் சாதியத் தீண்டாமை அலகுகளால் பிரிந்து காணப்படுகின்றன. தற்கால சமூகத்தில், சேரியில் ஒடுக்கப்பட்ட மக்களே அடர்த்தியாக வாழ்ந்துவருவதால், சேரி என்ற சொல் பொது சமூகத்தில், அங்கு வசிக்கும் மக்களைத் தாழ்ந்தவர்களாகச் சித்தரித்து, ஏனைய சமூகத்தினர், தங்களை ஆதிக்கமாக வெளிக்காட்டிக் கொள்ளும் உளவியலை உருவாக்கிவிட்டது. இது சாதிய ஆதிக்க சக்திகளால் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டு, இன்று பெரு நோயாக சமூகத்தில் இறுகிப்போயுள்ளது. உண்மையில்  சேரி என்றால் என்ன? 

கமல்

"சேரி என்றாலே சேர்ந்து வாழ்தல், கூடி வாழ்தல் என்பதுதான் பொருள். ஆகவேதான் சேரிப் பண்பாடு தமிழர்களின் மூத்தப் பண்பாடு என்று வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ளது" என்கிறார் விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு. தொடர்ந்து பேசும் அவர், "ஆனால்,  இந்தப் பண்பாட்டை அக்ரஹாரங்களும் அதன் அடிமைச் சாதிகளும் சீர்குலைக்கப் பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. அதுவே புழக்கத்தில் சேரி என்பது கேவலமான ஒன்று  என்ற உளவியலை உருவாக்கியது. அந்த நடிகை, (காயத்ரி) வன்னிஅரசுவெளிப்படுத்திய 'சேரி பிஹேவியர்' என்ற வார்த்தை, இந்த உளவியலில் இருந்தே வெளிப்பட்டுள்ளது. அவருக்குள் நிறைந்திருக்கும் சாதி ஆணவ வெறியின் வெளிப்பாடு இது. உண்மையில், சேரியில்தான் கூட்டுக்குடித்தனமும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுமான வாழ்க்கை முறை உள்ளது. வேகமான சுரண்டலை நிகழ்த்தி வரும் இந்த கார்ப்பரேட் உலகிலும், 'அன்பு செலுத்துதல்' என்ற தமது அழகியலில் இருந்து விலகாத பூமியாக இருப்பது சேரியே. இணைந்தும், பிறருக்காகத் தியாகம் செய்து வாழ்தலுமே சேரியின் அழகு. அதை அக்ரஹாரமோ, ஆதிக்க சமூக உளவியல் கொண்டவர்களிடமோ  எதிர்பார்க்க முடியாது. அவர்களிடம் அது கிடையாது. எனவே சமகாலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களைக் கேவலமான வகையில் சுட்டிக்காட்டும் எதையும் நாம் ஏற்க முடியாது. அந்த நடிகையின் பேச்சு கண்டனத்துக்குரியது. அதைவிட, தன்னை பகுத்தறிவாளராக வெளிப்படுத்திக்கொள்ளும் கமல், இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது மோசடியானது. இப்படி ஆதிக்க வெறியோடு ஒரு வார்த்தையை வெளிப்படுத்தும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஆதிக்க சாதித் தலைவர்கள் பொது மேடையில், தாழ்த்தப்பட்ட மக்களை மோசமாகப் பேசிவருவதன் விளைவே, தொலைக்காட்சியில் ஒரு நடிகை எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமில்லாமல், சாதி ஆணவப் போக்கை வெளிப்படுத்துவது. நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் அந்த நடிகையையும் மட்டுமே எதிர்க்காமல், இவ்வகையான சாதிய ஆணவப் போக்குகள் அனைத்துக்கும் எதிரான நமது பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதுவே சாதி ஒழிப்புப் பணியில் முதன்மை பாத்திரமாகும்" என்றார் அழுத்தமாக. 

பொறுப்புணர்வோடு வெளிப்படுத்தப்படும் கலை மட்டுமே சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும். சிந்திப்பார்களா கலைஞர்கள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close