வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (13/07/2017)

கடைசி தொடர்பு:13:36 (13/07/2017)

சேரி பிஹேவியரும் எண்ணெய் அரசியலும்..! - கசியும் கதிராமங்கல ரகசியம் #3MinsRead #Analysis

 

“இது, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல. தசாப்தங்களைத் தாண்டி ஓட வேண்டிய  மாரத்தான். நிலத்தைச் சுரண்டி எண்ணெய் திருடுவோரை நிச்சயம் ஒருநாள் வெற்றிகரமாக எங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றுவோம். வலிமையான இந்தப் போராட்டம் ஒருநாள் வெற்றி பெறும்! கென் சாரோ வைவா கண்ட கனவுகள் ஒருநாள் நிஜமாகும்” - இது கடந்த ஆண்டு ஜூன் மாதம்  நைஜீரியாவில் உள்ள  ‘பூமியின் நண்பர்கள்’ அமைப்பின் தலைவர் நிம்மோ பாஸி கூறியது.  

கதிராமங்கலம், காவிரி டெல்டா, கென், நைஜீர் டெல்டா

இப்போது காவிரி டெல்டாவில் நடைபெறும் போராட்டங்களை, மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளை, வழக்குகளை, கைதுகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நிம்மோ பாஸி கூறிய வார்த்தைகளையும், அதன் பின்னால் உள்ள பெரு நிறுவனங்களின் அரசியலையும் குறிப்பாக கென் சாராவையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆம், இப்போது  காவிரி டெல்டாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் எதுவும் புதியன அல்ல. வரலாற்றில் நைஜீர் டெல்டாவில் நிகழ்ந்தது, இப்போது காவிரி டெல்டாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

என்ன நடந்தது நைஜீரியாவில்...?

காவிரி டெல்டா பகுதியின் முழு நிலப்பரப்புக்கும் கீழே எரிவாயுவும், எண்ணெயும் நிரம்பி இருக்கிறது அல்லவா...? அதுபோலதான் வளமான நைஜீர் டெல்டாவும் இருந்தது. குறிப்பாக ஓகோனிலாந்த் பகுதி முழுவதும் எண்ணெய் படர்ந்து இருந்தது. ‘எண்ணெய்’ என்றால் என்னென்ன நிகழுமோ அல்லது பெரும் நிறுவனங்கள் நிகழ்த்துமோ அவை அனைத்தும் அங்கும் நிகழ்ந்தன அல்லது நிகழ்த்தப்பட்டன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமையைப் பயன்படுத்திக்கொள்வது, பொய் புரட்டுகள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களை நிலங்களிலிருந்து வெளியேற்றுவது, எரிவாயுத் திட்டங்களை எதிர்ப்பவர்களை - அது ஏற்படுத்தும் சூழலியல் கேடுகள் குறித்து கேள்வி எழுப்புபவர்களை அரசின் துணையுடன் அடக்குவது, திமிறி எழுபவர்களைக் கொல்வது என அனைத்தையும் 90’களில், எண்ணெய் நிறுவனங்கள்  செய்தன.

சூழலியல் கேடுகள் என்று ஒற்றை வார்த்தையில் நான் கடந்திருந்தாலும், எண்ணெய் நிறுவனங்கள் நைஜீரியாவில் ஏற்படுத்திய ரணம் சாதாரணமானவை அல்ல. அவை ஏற்படுத்திய ரணங்களைச் சரிசெய்ய இன்னும் ஒரு நூறாண்டு ஆகும். ஆம், நிலம், நீர் நிலை ஊடாகக் கடந்த எண்ணெய்க் குழாய்களில் ஓட்டை ஏற்பட்டு  நிலத்திலும் நீரிலும் எண்ணெய் சிந்தி, மொத்த சூழலியலையும் விஷமாக்கியது. நிலங்கள் வேளாண்மை செய்யத் தகுதியற்றதாக மாறின.

கிளர்ந்தெழுந்த கவிஞன்

கென்நிலத்தையும், நீரையும் எழுத்துகளாகப் புனைந்துகொண்டிருந்த கவிஞர் கென் சாரோ வைவா இந்த அநீதிகளைக் கண்டு வெதும்பினான்.  “எழுத்தாளன் என்பவன் வெறும் புனைவுகளை மட்டும் எழுதிக் கொண்டிருப்பவன் அல்ல” என்று உரக்கச் சொல்லி, இந்த  அநீதிகளுக்கு எதிராக எழுதத் தொடங்கினார்; பேசத் தொடங்கினார், மக்களுடன் கரம் கோத்து தீவிரமாக வேலை செய்யவும் தொடங்கினார். தொடக்கத்தில், உலக சமூகத்துக்குத் தெரியாமல் இருந்த நைஜீர் மக்களின் கண்ணீர், எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்திய வலிகள் கென் சாரோவுடைய எழுத்துகளால், வெளியே தெரியத் தொடங்கின. உலகளவில் சூழலியலாளர்கள் இதுகுறித்துப் பேசத் தொடங்கினார்கள்.  எண்ணெய் எடுப்பதில் தீவிரமாக இருந்த நிறுவனங்களுக்கு இது உறுத்தியது. எப்போதும் பெருநிறுவனங்கள் பக்கமே நிற்கும் இயல்புகொண்ட அரசுகள் அங்கேயும் எண்ணெய் நிறுவனம் பக்கமே நின்றன. கென்னையும் அவர் தோழர்களையும் கைது செய்து தூக்கிலிட்டது. 

'ஒரு தலைமையை முடக்கினால் மொத்தப் போராட்டமும் முடங்கும்' என்று அரசு நினைத்தது. ஆனால், அதன் பின்னர்தான் எளிய மக்கள் வெகுண்டெழுந்தார்கள். சட்டப் போராட்டமும், மக்கள் போராட்டமும் ஒருங்கே நிகழ்ந்தன. நீண்ட அழுத்தங்களுக்குப் பின் எண்ணெய் நிறுவனங்கள் ஓரளவு பணிந்தன. அதனால் ஏற்பட்ட சூழலியல் கேடுகளுக்கு ஓரளவு இழப்பீடு தர முன் வந்தன. 

 நைஜீர் டெல்டாவும் - காவிரி டெல்டாவும்

நிலத்தை மக்களிடமிருந்து அபகரித்தது முதல் அதற்கான குறைந்தபட்ச இழப்பீடு கொடுத்தது வரை... இவை அனைத்தும் நிகழ்ந்தது 30 ஆண்டுகள் காலகட்டத்தில். இந்த இடைவெளியில், லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து அகதிகள் ஆகினர். 
போடோ சமூகம் நைஜீரியாவின் மீனவச் சமூகம். நீரோடும், மீனோடும்தான் அவர்கள் வாழ்வு. எண்ணெய், நீரில் சிந்தி ஏறத்தாழ ஒரு லட்சம் போடோ சமூக மக்களின் வாழ்வைக் கேள்விக் குறியாக்கியது. அவர்களுக்காக வழக்காடிய மார்டியன் டே சொல்கிறார், “உலகம் இதுவரை சந்திக்காத மோசமான சூழலியல் கேடு இது.  நீரில் சிந்திய எண்ணெய், ஒரு  சமூகத்தையே வாழ்வாதாரம் இன்றி வீதியில் நிறுத்திவிட்டது” என்கிறார். 

இப்போது அப்படியே நைஜீர் டெல்டாவிலிருந்து காவிரி டெல்டாவுக்கு வாருங்கள். நைஜீர் டெல்டாவில் என்னவெல்லாம் நடந்ததோ... அவை அனைத்தும் காவிரி டெல்டாவிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக எண்ணெய் கசிவும்... அதனால் ஏற்படும் மாசுபாடுகளும். 
கமலாபுரம் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் வேளாண் பஞ்சாயத்து. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு என்ணெய் சிந்தியது. முதலில் இதுகுறித்து ஓ.என்.ஜி.சி கிஞ்சித்தும் கவலைகொள்ளவில்லை. ஒரு மழை நாளில், இந்த நிலத்தில் சிந்திய எண்ணெய், அருகில் உள்ள வேளாண் நிலங்களிலும் பரவின. எந்தெந்த நிலத்தில் எல்லாம் எண்ணெய் சிந்தியதோ அந்த நிலங்கள் எல்லாம் பாலையாக மாறின. ஆம், இப்போதும் அந்த நிலங்களில் பச்சையம் எதுவும் பூப்பதில்லை.

அந்த மக்கள் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினர். அதன்பின் ஓ.என்.ஜி.சி கொஞ்சம் இறங்கி வந்தது. அவர்களுக்கு இழப்பீடு தர சம்மதித்தது. ஆனால், அவர்களின்  நீண்ட நாள் கோரிக்கையான எண்ணெயினால் பாழ்பட்ட நிலத்தை சரிசெய்து தர ஓ.என்.ஜி.சி மறுத்துவிட்டது. இப்போதும் மக்கள் அந்த கோரிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  இதே நிலைதான் கதிராமங்கலத்திலும்... கடந்த மாதம் ஸ்ரீராம் என்பவரின் நிலத்தில் எண்ணெய் சிந்தியது. அதன்பின் பெய்த மழையால்,  அந்த எண்ணெய் பிறர் நிலங்களிலும் பரவி இருக்கிறது. 'இதை சரி செய்து தாருங்கள். மேல் மண்ணை மாற்றித் தாருங்கள்' என்றக் கோரிக்கைக்கு இதுவரை ஓ.என்.ஜி.சி அறமான எந்தப் பதிலையும் தரவில்லை. 

காவிரி டெல்டா - நைஜீர் டெல்டாஇதற்கெல்லாம் மேலாக காவிரி டெல்டாவில், எங்கெல்லாம் எண்ணெய் எடுக்கும் பணி நடந்திருக்கிறதோ... அங்கெல்லாம் நிலத்தடி நீர் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் வாழ்வாதாரம் இழந்து, சுகாதாரம் இழந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். நைஜீரியா அரசு போல நம் அரசாங்கமும் நிறுவனத்தின் பக்கம்தான் நிற்கிறதே தவிர, மக்களுடன் உரையாட கிஞ்சித்தும் தயாராக இல்லை. 

எண்ணெய் எடுத்தால் வளர்ச்சி வரும், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்று எப்போதும் அரபு நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுபவர்கள்... உண்மையில், காவிரி டெல்டாவை  ஒப்பிட வேண்டியது வரலாற்றுக் காலம் தொட்டு பாலையாக இருக்கும் அரபு நாடுகளுடன் அல்ல... சமகாலத்தில் டெல்டா பிரதேசங்களாகயிருந்து பாலையாகிப்போன நைஜீர் டெல்டாவுடன்தான். 
பாஸி சொன்னதுபோல, சூழலியலைக் கெடுக்கும் எண்ணெய்  நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் ஒரு மாரத்தான் ஓட்டம்... இப்போது அந்த மாரத்தான் சுடர், காவிரி டெல்டா மக்களின் கைகளுக்கு வந்திருக்கிறது. 

 ‘சேரி பிஹேவியர்’ என்ற பதம் ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு. அந்த ஆதிக்கச் சிந்தனையில் இருக்கும் அரசுகள்தான் அப்போது நைஜீரியாவை ஆண்டது... இப்போது இந்தியாவையும் ஆள்கிறது. அந்தச் சிந்தனை எப்போதும் மண்ணின் மக்களை கீழ்மைப் படுத்துகிறது, பூர்வக் குடிகளை நிலத்திலிருந்து வெளியேற்றப்பார்க்கிறது. பிக் பாஸின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் மக்களை எலிமினேட் செய்கிறது.   

எண்ணெய் வேண்டும்... வளர்ச்சி வேண்டும் என்பதையெல்லாம் கடந்து, 'வாழ்க்கை வேண்டும்; அதற்கு நிலம் வேண்டும்' என்று மக்கள் அந்தச் சுடரை இறுக்கமாகப் பற்றிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்