‘சசிகலாவுக்கு சிறையில் நெருக்கடி?’ - ரகசிய கண்காணிப்பில் மூன்றுபேர்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை

சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் நடவடிக்கைகளை சிறைத்துறை 24 மணி நேரமும் ரகசியமாக கண்காணித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவை சரிவர தூங்கவும் விடுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி, சுதாகரன். இவர்களுக்கு வி.ஐ.பி-களுக்கான சலுகைகளோடு கூடுதல் சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் செய்துகொடுத்தாகத் தகவல் வெளியாகியுள்ளன. இதை கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியான ரூபா அம்பலப்படுத்தியுள்ளார். சசிகலாவுக்கு, சிறையில் தனி சமையலறை இருந்தாகவும் ரூபா, தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது, சசிகலாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சில நாள்களுக்கு முன்பு டி.ஐ.ஜி ரூபா அதிரடி சோதனை நடத்தினார். அந்தச் சோதனையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத்துறை விதிமுறைகளை மீறி சில சலுகைகள் செய்து கொடுப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்குத் ரூபா விரிவாக கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் சிறைத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மூன்று பேரின் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் தகவல் கொடுத்துவருகின்றனர்.

சசிகலாவுக்கு மட்டுமல்ல சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.வி.ஐ.பி.களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். சசிகலா விவகாரத்தால் தற்போது அவர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி பெற்ற சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. தண்டனைக் கைதிகளை பொறுத்தவரை, அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். அடுத்து காலை உணவுக்குப்பிறகு சிறைத்துறை கொடுக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும். சிறையில் சீருடை கட்டாயம் அணிய வேண்டும். இந்த விதிமுறையிலிருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

டி.ஐ.ஜி ரூபாவின் அதிரடியால் அவர்களுக்கும் தண்டனைக் கைதிகளுக்குரிய விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கைதியின் அறை காலை ஆறு மணிக்கு திறக்கப்பட்டு மாலை ஆறு மணிக்கு மூடப்படும். ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட பெங்களூரு சிறையில் உள்ள வி.வி.ஐ.பி.களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவர்களையும் அதிகாலையிலேயே சிறைக் காவலர்கள் எழுப்பிவிடுகின்றனர்.

அடுத்து, மாலை ஆறு மணிக்கு அறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு ஏழு மணியளவில் கைதிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பிறகு சசிகலாநைட் ரவுண்ட்ஸ் நடக்கும். இது, கைதிகளை தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் யுக்தி. அந்த நடைமுறைகளில் சசிகலா, இளவரசி, சுதாகரனின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன. சிறைத்துறை நடவடிக்கை குறித்து சசிகலா, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்" என்றார்.

சசிகலா தரப்பில் பேசியவர்கள், "குடியரசுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்ததும் காங்கிரஸால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் டெல்லி போலீஸரால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில், டி.டி.வி.தினரகனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாமல் டெல்லி போலீஸார் திணறிவருகின்றனர்.

தற்போது, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், சிறையில் உள்ள சசிகலாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையின் விதிமுறைகளை மீறி சலுகைகளைப் பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். வழக்கம் போல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் சிறை மாறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்" என்றனர்.

சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவிடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அடுத்து சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அவரும் பதிலளிக்கவில்லை.

சசிகலா, விவகாரத்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை பரபரப்பாகியுள்ளது. சிறைத்துறை அதிகாரிகளின் அதிரடியால் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு இன்னும் சிக்கல்கள் எழும் என்று சொல்கின்றனர் உள்விவர வட்டாரங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!