வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (14/07/2017)

கடைசி தொடர்பு:16:32 (14/07/2017)

ராமாவரம் தோட்டத்துக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கும் உள்ள சம்பந்தம் இதுதான்!

சசிகாலா ராமாவரம்

கீழே நீங்கள் படிக்கப்போகும் செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை... ஆனால், தொடர்புண்டு. “உலகில் நடக்கிற வெவ்வேறு சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை" என்கிறது ‘கேயாஸ்’ தியரி. அந்தத் தியரியை அப்ளை பண்ணி இதைப் படிக்கவும்.

ராமாவரம் தோட்டம்....!

ஜெயலலிதாவை மாதிரி மேக்-அப் போட்டுக்கொண்டு, புரட்சித்தலைவியைப் போலவே புரட்சி(!) செய்ய முடிவெடுத்த சசிகலாவின் சாகசங்களில் ஒன்று, எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு அவர் விசிட் அடித்தது. கடந்த ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளன்று, எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்குப் போனார் சசிகலா. அங்கே அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து, எம்.ஜி.ஆரின் உருவச்சிலையைத் திறந்துவைத்தார். அங்கு செயல்படும் டாக்டர் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளியில் மாணவர்களோடு உணவு சாப்பிட்டு மீடியாக்களுக்குப் போஸ் கொடுத்தார். அந்தப் பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அளித்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகளை வழங்கினார் சசிகலா. அப்படித் தரப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான செக் பவுன்ஸ் ஆகிவிட்டது என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். பள்ளியின் தாளாளர் லதா ராஜேந்திரன், சசிகலா கொடுத்த காசோலையை வங்கியில் டெபாசிட் செய்ததில், ‘கணக்கில் பணம் இல்லை’ என சசிகலா கொடுத்த செக்கை திருப்பி அனுப்பினார்கள். இதை யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துப் புலம்புகிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். இப்படித்தான் காதுகேட்கும் கருவிகளுக்கும் உரிய பணம் தரப்படவில்லையாம்.

ஹில்டன் ஹோட்டல்!

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசரின் இளைய மகள் அமிர்தாவுக்கும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மகன் இசக்கி துரைக்கும் திருமண நிச்சயதார்த்தம், கடந்த மாதம் 29-ம் தேதி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள 'ஹில்டன்' ஸ்டார் ஹோட்டலில் தடபுடலாக நடைபெற்றது. தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்பட பலரும் கலந்துகொண்ட இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடராசன் தவிர சசிகலா குடும்பம் மொத்தமும் கலந்து கொண்டதுதான் ஆச்சர்யம். டி.டி.வி. தினகரன் ஹோட்டலுக்கு வந்தபோது, அவருக்கு அமர்க்கள வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள். திருநாவுக்கரசரும், தினகரனும் தனியாக ஆலோசனை வேறு நடத்தினார்கள். 'காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பழைய அ.தி.மு.க. பாசம் திருநாவுக்கரசருக்குப் போகவில்லை' என வெளிப்படையாகவே புகைச்சல்கள் கேட்டன. சசிகலா குடும்பத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு போர்க்கொடி தூக்கிக்கொண்டிருந்தபோது, திருநாவுக்கரசரிடம் இருந்து வந்த ரியாக்‌ஷன், 'உப்பு சப்பு' இல்லாதவை. ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் கேட்டபோது திருநாவுக்கரசர் ‘‘அது தேவையில்லை’’ என்றார்.

சசிகலா

பரப்பன அக்ரஹாரா!

கரன்சியை வைத்து பரப்பன அக்ரஹாரா சிறையையே போயஸ் கார்டனாக மாற்றிவிட்டார் சசிகலா. 'சிறையிலேயே அவர் ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்' என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா. சிறையில் ஆய்வு நடத்திய ரூபா, சசிகலாவுக்குத் தனி சமையலறை இருப்பதையும் பெண் கைதி ஒருவரை சமையல்காரராகப் பயன்படுத்தி வந்ததையும் கண்டறிந்தார்.

‘சசிகலாவுக்குச் சிறையில் தனி கிச்சன் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை லஞ்சம் அளித்திருக்கிறார் சசிகலா.’ என கர்நாடக டி.ஜி.பி. தத்தாவுக்கு ரூபா அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ‘பார்வையாளர்கள் சந்திப்பதிலும் விதிகளை மீறியிருக்கிறார். சசிகலாவை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பெரும்பாலானோர் பார்வையாளர் நேரத்தைக் கடந்து 5 மணிக்குப் பின்னரும் பார்த்திருக்கிறார்கள். சசிகலாவுக்குச் சிறையில் உபசரிப்பு வழங்குவதற்காக சிறைத்துறை அதிகாரிகளும், சிறைத் துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவும் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ரூபா.

டெய்ல் பீஸ்

பத்து லட்சம் ரூபாய்க்குத் தரப்பட்ட செக்கிற்கு வங்கியில் பணம் இல்லை. இரண்டு கோடி ரூபாய் ஸ்விஸ் அக்கவுன்டில் இருந்து எடுத்திருப்பார்களோ?! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசரோடு சசிகலா குடும்பம் நெருக்கம். இவையெல்லாம் பரப்பன அக்ரஹாரா சிறையை நோக்கிப் போகின்றன என்கிற விமர்சனங்களுக்கு விடை யார் தருவார்கள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்