சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் சதுரங்கம் ஆடும் எல்காட்... வேடிக்கை பார்க்கும் வனத்துறை! | Forest department doesn't care about elcot management misusing Sozhinganallur land

வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (17/07/2017)

கடைசி தொடர்பு:15:40 (21/07/2017)

சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் சதுரங்கம் ஆடும் எல்காட்... வேடிக்கை பார்க்கும் வனத்துறை!

சதுப்பு நிலங்கள் எல்காட்

சதுப்பு நிலத்தில் கலந்துள்ள கழிவு நீர்

‘கழுவெளி'. இந்தச் சொல்லுக்கு 'கழுவாய் நிலம்', புல்தரை கொண்ட ஈரப்பகுதி என்று பல அர்த்தங்கள் உண்டு. கழுவெளி எனும் சொல்தான் அன்றைய ஈர அல்லது சதுப்பு நிலங்களுக்கு வைக்கப்பட்டப் பெயர். அந்த சதுப்பு நிலம் என்பது கடலில் இருந்து உள்ளே வரும் உவர்நீரும், ஆறுகளில் வரும் நன்னீரும் சங்கமிக்கும் இடமே ஆகும். 1971--ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் சதுப்பு நிலங்களைக் காக்க 'ராம்சார்'(Ramsar) உடன்படிக்கை கொண்டு வந்தது. அதில் இந்தியாவும் தனது கையெழுத்தைப் பதிவு செய்திருக்கிறது. இதுதவிர, இந்தியாவில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1985-86-ம் ஆண்டு தேசிய சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் திட்டம் ஒன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் 94 சதுப்பு நிலங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழக அரசும் 2007-ம் ஆண்டில்தான் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. மத்திய அரசு அறிவித்தது முதல், தமிழக அரசின் அறிவிப்பு வரைக்குமான 20 வருட இடைவெளியில், சென்னையில் இருக்கும் சதுப்பு நிலங்கள் ஈவு இரக்கமின்றி சூறையாடப்பட்டன. இப்போது பெரும்பாலோனோர்க்கு சதுப்பு நிலம் என்றால் ஞாபகத்துக்கு வருவது பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி மட்டும்தான். ஆனால், பள்ளிக்கரணையில் ஆரம்பித்து முட்டுக்காடு வரைக்கும் கழுவெளி நிலங்கள் எனும் சதுப்பு நிலங்கள் இருந்தன. இதில் பெரும்பாலான சதுப்பு நிலப் பகுதிகள் சூறையாடப்பட்டு விட்டன. ஆக்கிரமிப்புக்கும், அபகரிப்புக்கும் ஐ.டி கம்பெனி முதல் சாதாரண கடைகள், வீடுகள் வரைக்கும் அனைத்துமே காரணம்தான். கடந்த பெரு வெள்ளத்தில் வேளச்சேரி மூழ்கியதற்கு முக்கியமான காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் கிளை நிலங்களும், கால்வாய்களும் துண்டிக்கப்பட்டதுதான்.

கலக்கும் கழிவுநீர்

எல்காட் கழிவு நீர் சதுப்பு நிலத்தில் கலக்கும் இடம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லக்கூடிய சென்னையின் சதுப்பு நிலங்கள் மொத்தம் 5,000 ஹெக்டேருக்கும் அதிகமாகப் பரந்து விரிந்து காணப்பட்டது. அடையாற்றின் கிளைகளில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி, தனக்குத் தேவையான தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு கடலுக்கு அனுப்புகிறது. இந்த சதுப்பு நிலம் தற்போது 500 ஹெக்டேருக்கு குறைவாகவே காணப்படுகிறது. வெளிநாட்டுப் பறவைகளின் வாழிடமாகவும், உள்ளூர் பறவைகளின் வாழிடமாகவும் விளங்கியதும் இந்த சதுப்பு நிலப்பகுதிதான். 2007-ம் ஆண்டுக்கு முன்னர் தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலமாக மாற்றியது. ஆனால் 1995-ம் ஆண்டிலிருந்தே பள்ளிக்கரணையில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்துள்ளது. அந்தக் குப்பைகளுடன் ஆக்கிரமிப்பு குடியிருப்புக்களின் கழிவுநீரும் கலக்க ஆரம்பித்தது. அதனால், பள்ளிக்கரணையின் உண்மையான முகமும் மறையத் தொடங்கியது. ஆம், கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் மட்டுமல்லாது, அவற்றிலிருந்து வரும் நச்சுக்கள் பள்ளிக்கரணையின் வளத்தை பாழ்படுத்திவிட்டன. குப்பை கிடங்கிற்கு பின்புறமுள்ள இடங்கள் துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலைவரைக்கும் ஆக்கிரமிப்பால் சிக்கியுள்ளன. ஆனால், இதற்குச் சற்றும் சளைக்காத பெரியப் பெரிய நிறுவனங்களும், சதுப்பு நில ஆக்கிரமிப்பு மட்டுமின்றி கழிவுநீரையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கொட்டிக் கொண்டுள்ளது. விளைவு, சதுப்பு நிலம் முழுவதுமாக கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பள்ளிக்கரணையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாயில் சென்று சேறும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அதனால் பள்ளிக்கரணையில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சிக்கித் திணறி பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது. ஏற்கனவே பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் பள்ளிக்கரணை கழிவுநீரும் சேர்ந்து பாய்வதால், பக்கிங்ஹாம் கால்வாய் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நிலை முட்டுக்காடு வரைக்கும் நீடிப்பதுதான் பெரும் சோகம்.

பிபுற ஓடை வழியாக வரும் கழிவுநீர்

கழிவுநீர் வெளியேற என பின்புறமாக அடைக்கப்பட்டுள்ள ஓடை

இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது வேளச்சேரி அருகில் இருப்பது மட்டுமல்ல. சோழிங்கநல்லூர் அருகே உள்ள எல்காட்டின் எதிர்புறமும், பின்புறமும் அமைந்துள்ள சதுப்பு நிலங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகள்தான். எல்காட்டுக்கு பின்னால்தான் வனத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகம்தான் அந்தப்பகுதி முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களுக்குப் பொறுப்பு. என்னதான் செய்கிறார்கள் எனப் பார்ப்பதற்காக எல்காட்டுக்குள் நுழைந்தோம். எல்காட்டின் நுழைவு வாயிலிலேயே அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் சமாளித்து மீண்டும் உள்ளே நுழைந்தோம். சிறிது தூரம் செல்லச் செல்ல ஐடி கட்டடங்கள் சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்திருந்ததைக் காண முடிந்தது. ஆனால், எல்காட்டுக்கு உள்ளேயும் ஆங்காங்கே சதுப்பு நிலங்களை வத்திப்போகச் வைக்கும் வேலையும் நடந்து கொண்டிருந்தது (நீர் வற்றினால்தானே கட்டடம் கட்ட முடியும்). இறுதியாக அனைத்து ஐடி நிறுவனங்களையும் கடந்து சென்று வனத்துறை அலுவலக நுழைவு வாயிலை அடைந்தோம். ஆனால், அங்கும் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், இப்போது தடுத்து நிறுத்தியது. எல்&டி நிறுவன அதிகாரிகள். வனத்துறை அலுவலக நுழைவு வாயிலில் எப்படி எல்&டி நிறுவன காவலாளிகள் எனச் சந்தேகம் வரவே விசாரித்து விட்டு உள்ளே சென்றோம். பள்ளிக்கரணை வனத்துறை வளாகத்துக்குள் சென்றபோது அங்கே பெரிய கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அதுபற்றி காவலாளிகளிடம் விசாரித்தபோது, 'எல்&டி நிறுவன வேலை ஆட்களுக்குத் தங்கும் இடம் அமைத்துக் கொடுத்திருக்கிறது எல்காட் நிர்வாகம்' என்றனர். அதை வனத்துறை கண்டுகொள்ளாமல் கைகட்டி நிற்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

கழிவுநீர் கலந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

கழிவுநீர் கலந்து வீணான சதுப்பு நிலம்

 வனத்துறை அலுவலகத்தை ஒட்டிய பகுதிகள் மட்டும் சதுப்பு நிலமாக இருந்தது. ஆனால், அந்த நிலங்களில் கழிவுநீர் தேங்கியிருந்தது. இங்கிருக்கும் நீரில் கழிவு நீர் கலந்தது எப்படி என யோசனை தோன்றவே கழிவுநீர் வந்த பாதையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தோம். ஆனால், எங்களைக் கண்ட வனத்துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார். ஆனால், அவரிடம் பறவைகளைப் படம் எடுக்க வந்திருக்கிறோம் எனச் சாமர்த்தியமான பதிலைச் சொன்னோம். பின்னர் அவரே அனைத்துப் பகுதிகளையும் சுற்றிக் காட்டினார். அதில் கடைசியாக அவர் காட்டிய அந்தப் பகுதியில்தான் ஐ.டி நிறுவனங்களின் மொத்தக் கழிவுநீரும் கலந்து கொண்டிருந்தது. அந்த ஓடையின் அருகில் இருந்தவரிடம் விசாரித்தோம். "இதற்காக எல்காட் சார்பில் ஒரு ஓடையே தயார் செய்யப்பட்டு, கழிவுநீரானது சதுப்பு நிலத்தில் உள்ள நீருடன் கலக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பறவைகள் இங்கு அதிகமாக வருவதில்லை. இப்படியே விட்டால் இந்த நிலமும் பாழாகிவிடும். இங்கு இருக்கும் யாரும் இதைக் கண்டுகொள்வதில்லை. இதற்கு எல்காட் ஜிஎம் முதல் அனைவருக்கும் சரிசமான பங்கு போகிறது. இதில் வனத்துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி நோட்டீஸ் கொடுத்து வருகிறது. ஆனால், அவர்களின் கைகளும் இந்த விஷயத்தில் கட்டப்பட்டுத்தான் கிடக்கின்றன. இங்கே யாராவது புகார் கொடுத்தால் அவர்களுக்கு மிரட்டல்கள் அதிகமாக வரும். இங்கே எல்காட் சார்பில் ஐடி நிறுவனங்களிடம் வாங்கவேண்டியதை வாங்கி தலைமைச் செயலகம் வரை கவனித்து விடுகின்றனர்" என்றவர், கழிவுநீர் கலந்திருந்த பகுதிகளைக் காட்டினார். அனைத்து இடங்களிலும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம்தான் வீசியது. பின்னர், எங்களுக்குச் சுற்றிக்காட்டிய வனத்துறை அலுவலரிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினோம். வரும் வழியில் சதுப்பு நிலம் ஒன்று சமன்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்தபோது சதுப்பு நிலம் ஒன்று சமாதி கட்டப்பட்டுக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. பள்ளிக்கரணை விஷயத்தில் அரசும், வனத்துறையும் சேர்ந்து இருக்கும் நிலங்களையாவது காப்பாற்றிக் கொள்ளலாமே... ஆனால் அதைச் செய்வதை நிறுத்திவிட்டு எல்காட்டுக்காகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் மீதம் உள்ள நிலங்களை அழிக்க அரசே துணைபோவது நன்றாகத் தெரிகிறது.


டிரெண்டிங் @ விகடன்