வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (18/07/2017)

கடைசி தொடர்பு:10:24 (18/07/2017)

எது உண்மையான அ.தி.மு.க? அ.தி.மு.க-வின் முதல் வேட்பாளர் சொல்லும் ரகசியம் இதுதான்!

மாயத்தேவர்

.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திண்டுக்கல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மாயத்தேவர். மாயத்தேவர் வெற்றி பெற்று லோக்சபாவுக்குச் சென்றார்.  
மாயத்தேவர் இப்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் இருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்த மாயத்தேவருக்கு இப்போது 83 வயதாகிறது. இப்போது அ.தி.மு.க மூன்று அணியாக இருக்கும் நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து மாயத்தேவர் என்ன நினைக்கிறார் என்று அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.

"நீங்கள் எப்போது அ.தி.மு.க-வில் சேர்ந்தீர்கள்?"

"சட்டப்படிப்பு படித்து முடித்த உடன் சென்னையில் ஜூனியர் வழக்கறிஞராக இருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை எப்படி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குச் செல்வேன். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அவர் அ.தி.மு.க தொடங்கியபோது, உறுப்பினராகச் சேர்ந்தேன்."

"திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு எப்படி உங்களுக்கு சீட் கிடைத்தது"

"திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியான போது, அ.தி.மு.க போட்டியிடும் என்று தலைவர் சொன்னார். யாரை நிறுத்துவது என்று  ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்போது என்னை அழைத்த அவர், 'திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடு' என்று சொன்னார். 'வக்கீலாக இருப்பதால் நீ தான் போட்டியிட வேண்டும். வெற்றி பெற்று லோக்சபாவுக்குச் செல்லும்போது ஆங்கிலத்தில் பேச வேண்டியது இருக்கும். அதற்கு நீ தான் சரியான ஆள்' என்று சொன்னார். போட்டியிடுவதற்கு நான் சீட் கேட்கவில்லை. எனினும் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதால் போட்டியிட்டேன்."

"திண்டுக்கல் இடைத்தேர்தலில் உங்களுக்கு இரட்டை இலைச் சின்னம் எப்படி ஒதுக்கப்பட்டது?"

"மனுத்தாக்கல் எல்லாம் முடிந்து, சின்னம் ஒதுக்கும் போது, மதுரை கலெக்டர் என்னிடம் 16 சின்னங்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்தார். அதில் இருந்து ஏதாவது ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுங்கள் என்று சொன்னார். அவர் கொடுத்த பட்டியலில் இரட்டை இலைச் சின்னமும் இருந்தது. எனவே, நான் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தேன். அப்படிதான் இரட்டை இலைச் சின்னம் கிடைத்தது. இரட்டை இலைச் சின்னத்தை தேர்ந்தெடுத்தது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். அவர் 'ஏன் இந்தச் சின்னத்தை கேட்டீர்கள். வேறு சின்னத்தைக் கேட்டிருக்கலாமே' என்றார். நான் அவரிடம், 'அண்ணே இந்தச் சின்னம் நமக்கு வெற்றியைத் தேடித்தரும். இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, v for victory என்று இரண்டு கைவிரல்களைக் காட்டி பிரசாரம் செய்வார். அதே போல நீங்கள் இரட்டை விரலைக் காட்டினால், நமக்கு வெற்றி நிச்சயம்' என்று சொன்னேன். அதே போல எம்.ஜி.ஆர் இரட்டை விரலைக் காட்டி பிரசாரம் செய்தார். இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், 'வெரிக்குட். உன்னுடைய தேர்வு வெற்றி பெற்று விட்டது' என்று சொன்னார்."

மாயத்தேவர் அ.தி.மு.க

"நீங்கள் தி.மு.க-வில் ஏன் சேர்ந்தீர்கள்?"

"மொராஜி தேசாய் பிரதமர் ஆக இருந்தபோது, லோக்சபாவில் ஒரு முறை இந்திராவுக்கு ஆதரவாக பேசினேன். அப்போது மொராஜி தேசாய், எம்.ஜி.ஆரிடம், 'உங்கள் கட்சி எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனால், உங்கள் கட்சி எம்.பி மாயத்தேவர் இந்திராவுக்கு ஆதரவாகப் பேசுகிறார்' என்று சொன்னார். இதனால், கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்., எனக்குத் தர வேண்டிய அமைச்சர் பதவியை, சத்தியவாணி முத்துவுக்குக் கொடுத்தார். அதன் பின்னர் நான் தி.மு.க-வில் சேர்ந்து விட்டேன்."

"எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பின்னர் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டபோது என்ன நினைத்தீர்கள்?"

"முதல் முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டபோது, எம்.ஜி.ஆருடைய வெற்றிச் சின்னத்துக்கு நேர்ந்த கதியை நினைத்து வேதனைப் பட்டேன். ஆனால், மீண்டும் அந்தச் சின்னம் அ.தி.மு.க-வுக்கு கிடைத்தபோது மகிழ்ச்சி அடைந்தேன்."

"எம்.ஜி.ஆருக்குப் பின்னர் ஜெயலலிதா அ.தி.மு.க-வை கட்டுப்கோப்புடன் நடத்தினாரா?"

"அ.தி.மு.க-வை காப்பாற்றியவர் ஜெயலலிதாதான். அவர் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் இந்த அளவுக்குக் கட்சியை வளர்த்திருக்க முடியாது. கட்சியையும், ஆட்சியையும் தைரியமாகவும், திறமையாகவும் நடத்தி வந்தார்."

"இப்போது இரண்டாம் முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"இரட்டை இலை முடக்கப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. இப்போது யார் உண்மையான அ.தி.மு.க-வோ அந்த அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தரவேண்டும்."

"இப்போது அ.தி.மு.க மூன்று அணிகளாக இருக்கிறது. இவர்களில் யார் உண்மையான அ.தி.மு.க என்று கருதுகிறீர்கள்?"

"ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அவருடன் இருந்த சசிகலாவால்தான் அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியும். எனவே, கருத்து வேறு பாடுகளை மறந்து சசிகலா தலைமையில் கட்சி ஒன்று சேர வேண்டும். எல்லோரும் ஒன்று சேரும் பட்சத்தில் இரட்டை இலை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.சசிகலா தலைமையில் கட்சி செயல்படுவதுதான் நல்லது. தினகரன் பெரிய மேதை போல நடந்து கொள்கிறார். அது கட்சிக்கு சரியாக வராது. ஜெயலலிதாவுக்கு அரசியல் வாரிசு என்று பார்த்தால் அது சசிகலாவாகத்தான் இருக்க முடியும்."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்