'மாற்றத்துக்காக மகளை அரசுப் பள்ளியில் சேர்த்தேன்' - பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பெருமிதம்!

 மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி

மாற்றத்துக்காக மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தேன் என்று சென்னை மாநகராட்சியில் வருவாய்த் துறையின் துணைக் ஆணையாளராக பணியாற்றும் லலிதா தெரிவித்தார். 

தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் நடந்துவருகின்றன. அரசு ஊழியர்கள்கூட தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அரசு ஊழியர்கள், குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது கட்டாயமாக்கப்படுமா என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்ட கேள்விக்கு, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவருதால் அரசு ஊழியர்களே தாமே முன்வந்து பள்ளியில் சேர்ப்பார்கள் என்று பதிலளித்தார். 

இந்தச்சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியில் துணைக் ஆணையாளராகப் பணியாற்றும் லலிதா ஐ.ஏ.எஸ், தன்னுடைய இரண்டரை வயது மகள் தருணிகாவை கோடம்பாக்கம், புலியூர் மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்து அரசு ஊழியர்கள் மத்தியில் முன்மாதிரியாகத் திகழ்கிறார். 

இதுகுறித்து லலிதாவிடம் பேசினோம். ''நான், கடந்த 2014ல் சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் துணைக் ஆணையாளராகப் பணியாற்றினேன். தற்போது, வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகப் பணியாற்றுகிறேன். கல்வித்துறை துணைக் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துவருகிறேன். என்னுடைய கணவர் சுமந்த் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் குழந்தையை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்ததை வரவேற்றுள்ளனர். 

பொதுவாக, மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி என்றாலே பெற்றோர்களுக்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. இந்தப்பள்ளிகளில் சுகாதாரம், கல்வித்தரம் உள்ளிட்டவைகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருக்காது என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. மாநகராட்சி, அரசுப் பள்ளிகளின் இடவசதி, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. மேலும், மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில்கூட தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

உங்களுடைய குழந்தையை மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

''மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைகள் நட்பாக குழந்தைகளிடம் பழகுகின்றனர். அதோடு சிறப்பாகக் கல்வியையும் கற்றுக் கொடுக்கின்றனர். இதுவே மாநகராட்சிப் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய ஆசையை கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்''. 

தருணிகா ஸ்கூலில் எப்படி இருக்கிறார்?

''அவர் சமத்துக்குட்டி. எல்லோரிடமும் நன்றாகப் பழகுகிறார். அவருக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைத்திருக்கிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்''. 

மாநகராட்சிப் பள்ளி எப்படி உள்ளது?

 ''மாநகராட்சிப் பள்ளிகளில் எல்லா வசதிகளும் உள்ளன. தனியார் பள்ளிகளைவிட சிறப்பாகவே மாநகராட்சிப் பள்ளிகள் செயல்படுகின்றன. அதை மக்கள் உணர வேண்டும். அரை நாள் மட்டுமே  தருணிகாவுக்கு ஸ்கூல்''. 

உங்களைப் போல வேறு யாராவது மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார்களா?

''அது, எனக்குத் தெரியவில்லை''. 

உங்கள் குழந்தை என்பதால் சிறப்பான கவனிப்பு பள்ளியில் இருக்கிறதா? 

 ''அப்படி எதுவுமில்லை''. 

கோடம்பாக்கம் பள்ளியை எப்படி தேர்வு செய்தீர்கள்?

''மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்தும் சிறப்பாகவே செயல்படுகின்றன. அந்த வரிசையில்தான் கோடம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தேன். மாண்டிச்சோரி முறையில் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஸ்நாக்ஸ்கூட கொடுக்கப்படுகிறது. வீட்டிலிருந்து கொடுக்கும் ஸ்நாக்ஸைவிட பள்ளியிலிருந்து கொடுக்கப்படும் ஸ்நாக்ஸை விரும்பிச் சாப்பிடுகிறார் தருணிகா. ஸ்கூலில் கட்டணம் கிடையாது. யூனிபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது''. 

வீட்டில் தருணிகா எப்படி?

''அவருக்கு இரண்டு வயது எட்டுமாதங்களாகுகிறது. அவர் படுசுட்டி. நான், தருணிகாவை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்ததற்கு என்னுடைய கணவரும், குடும்பத்தினரே காரணம்''. 

ஸ்கூலுக்கு செல்லும்போது அவர் அழுதாரா?

''நேற்று தான் (17-ம் தேதி) அவர் ஸ்கூலுக்குச் சென்றார். அவர், அழாதது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. நான்தான் ஸ்கூலுக்கு அழைத்துச் சென்றேன். என்னை அங்குள்ள யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஸ்கூல் முடிந்து சந்தோஷமாக வீட்டுக்கு வந்தார். அவரது சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்''. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!