வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (18/07/2017)

கடைசி தொடர்பு:19:07 (18/07/2017)

இந்தச் சூழலும் விரைவில் சரியாகும் - சொல்கிறார் ’நமது எம்ஜிஆர்’ ஆசிரியர்

    நமது எம்ஜிஆர்

துப்பறியும் சாகசக்காரர்களைப் போல அதிமுக விவகாரத்தைச் சுற்றிவருகிறார்கள், செய்தியாளர்களும் அரசியல்கட்சிகளின் ஆர்வலர்களும்..! அதன் உட்கட்சி நடப்புகள் அந்த அளவுக்கு ஒரே குழப்படியாக இருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக, முதலமைச்சர் கே.பழனிசாமியைப் பற்றிய படம், செய்திகளை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகமான நமது எம்ஜிஆர் நாளேடு திடீரென நிறுத்தியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதையொட்டி அதிமுகவிலும் தமிழக ஆட்சியிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அப்பதவியில் அமர்த்தப்பட்டார். 

பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சராக பழனிசாமி பதவியேற்றபோதும், பழைய அமைச்சரவையில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பன்னீர் அணிக்குத் தாவிய க.பாண்டியராஜனின் கல்வியமைச்சர் பதவியானது செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தார். ஓ.பன்னீர் அணியைத் தவிர்த்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்த தினகரன் முயன்றார் என அவருக்கு சசிகலாவின் குடும்பத்துக்குள்ளிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. 

 

நமது எம்ஜிஆர் தினகரன்

அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கமுயன்றதாக கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி டெல்லி சிறையில் தினகரன் அடைக்கப்பட்டார். அவரின் முகம் பார்த்துப்பேசத் தயங்கிய அதிமுக புள்ளிகள் பலரும் அவருக்கு எதிராக காட்டமாகப் பேசினர். பன்னீர், சசிகலா என இரு அணிகளாக இருந்த அதிமுகவில், புதிதாக எடப்பாடி அணி ஒன்றும் உருவானது. தினகரனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாகப் பேசிவந்தார். ஆனால் இதைப் பற்றி முதலமைச்சர் பழனிசாமி பொதுவெளியில் எங்கும் கண்டிக்கவோ அதிருப்தி தெரிவிக்கவோ இல்லை. 

இவ்வளவு சிக்கலான வலைப்பின்னல்களுக்கு உள்ளேயும் முதலமைச்சர் பழனிசாமியின் அன்றாடப் பேச்சு, அறிக்கைகளையும் நிகழ்வுகளையும் அதிமுகவின் நமது எம்ஜிஆர் நாளேடு தவறாமல் வெளியிட்டுவந்தது. அதிமுக ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்! 

திடீரென நேற்று ஜூலை17ஆம் தேதி முதல் நமது எம்ஜிஆர் ஏட்டில் முதலமைச்சரின் செய்தியோ படமோ, துணுக்காகக்கூட இடம்பெறவில்லை. தலைநகர் சென்னை தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை முதலமைச்சரும் ஜெயக்குமார் உட்பட்ட அமைச்சர்களும் நேரில் பார்வையிட்டதைப் பற்றிய செய்தி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெங்களூர் சிறை நிலவரம் தொடர்பாக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியின் அறிக்கை வழக்கத்துக்கு மாறாக முதல் பக்கத்தில் இடம்பிடித்திருந்தது. இரண்டாவது நாளான இன்று, குடியரசுத் தலைவர் தேர்தலில் முதலமைச்சர் வாக்களித்தார் என்று மட்டும் பதிவாகியிருக்கிறது. மற்றபடி நேற்றைய புறக்கணிப்பு இன்றும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. 

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அவருடன் வசித்துவந்த சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக்தான் அதிமுக ஊடகங்களை கவனித்துவருகிறார் எனக் கூறப்படும் நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தினகரனைப் பொருட்படுத்தாமல் முதலமைச்சரும் பல அமைச்சர்களும் செயல்படுகிறார்கள்; அவர்களுக்குக் கடிவாளம் போடவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் தினகரன் ஆதரவு அதிமுக புள்ளிகள். 

இந்தப் பிரச்னை குறித்து ‘நமது எம்ஜிஆர்’ ஏட்டின் ஆசிரியர் மருது அழகுராஜிடம் கருத்துக்கேட்க முயன்றபோது, முதலில் கருத்துக்கூற மறுத்துவிட்டார். பின்னர் பேசுகையில் பதிலளிக்க முன்வந்தவர், “கட்சியின் ஒற்றுமைக்குப் பாலமாகவும் ஒன்றரை கோடி தொண்டர்களை ஒன்றிணைக்கும் படகாகவும் கழக நாளேடு செயலாற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும் இதற்கு மாறாக ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலும் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்!”என சூழலுக்குக் கட்டுப்பட்டவராக, சுருக்கமாகப் பேசி முடித்துக்கொண்டார் நமது எம்.ஜி.ஆர்  மருது அழகுராஜ்.
 


டிரெண்டிங் @ விகடன்