மாணவர் அணிக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மென்ட் இதுதான்!

தி.மு.க மாணவரணி ஆலோசனை கூட்டம்

"மிகப் பெரிய தேராக  இருக்கலாம். ஆனால் அச்சாணி இல்லையேல் தேர் சக்கரங்கள் சுழலாது. தி.மு.க-வின் அச்சாணி என்பது 'மாணவரணி'. அதன் இயங்குதன்மையிலேயே கழகத்தின் இயக்கம் உள்ளது" - மாணவரணி குறித்து, ஒருமுறை அறிஞர் அண்ணா வெளிப்படுத்திய கருத்தாகும். இந்தளவுக்கு தி.மு.க-வில், முக்கியப் பங்காற்றிவரும்  மாணவரணியிலிருந்து சமீபத்தில்தான் கடலூர் இள புகழேந்தி மாற்றப்பட்டு, புதிய மாநில செயலாளராக சி.வி.எம்.பி எழிலரசன் நியமிக்கப்பட்டார். புதிய பொறுப்புக்கு வந்தபிறகு மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜுலை 17-ம் தேதி நடத்தினார் எழிலரசன்.  2 இணை செயலாளர்கள், 8 துணை செயலாளர்கள் பங்கேற்க, கூட்டம் தொடங்கியது.

"ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேர்வு என்று ஒற்றையாட்சி எதேச்சதிகாரத்தை மத்திய பி.ஜே .பி ஆட்சி திணித்து வருகிறது. இதில் அவர்கள் கொண்டு வந்த 'நீட் ' தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது மாணவ சமுதாயம்தான். இந்தப் பிரச்னையில், நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்" என்றார் மாநிலச் செயலாளர் எழிலரசன். "நீட் தேர்வில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு வினாத்தாள் வழங்கியதால், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் " என்ற கருத்து கூறப்பட, "இது மட்டுமல்ல, ப்ளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல், நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்ததால், மருத்துவக் கல்லூரியில் பலரும் சேர இயலவில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள்தான். இந்த நீட், சமூக நீதி கோட்பாட்டுக்கு எதிரான வேலைகளைச் செய்கிறது" என்றனர் மற்றொரு தரப்பினர். "குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்திய பி.ஜே .பி அரசு ஆதரவு கேட்பதற்கு முன்பே, எடப்பாடி பழனிசாமி அரசு தேடிப்போய் ஆதரவு கொடுக்கிறது.

இந்த ஆர்வம், தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதில் இல்லை" என்றனர் மேற்கு மண்டலத்தில் இருந்து வந்திருந்த துணைச் செயலாளர்கள். தொடர்ந்து அலசியவர்கள், " நீட்டால்  ஏற்பட்ட பிரச்னைகளை மாநிலம் முழுக்க விளக்கும் வகையில், அஞ்சல் அட்டைகளில் எழுதி அனைத்துக்  கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கும் அனுப்பலாம். முக்கியப் பொது இடங்களில் பதாகைகள்  ஏந்தி நின்று விளக்கலாம்.  நீட் பிரச்னைகளை விளக்கி குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பலாம்" என்று முடிவெடுத்தனர். அதன்பிறகு  "நீட் தேர்வினால் பெரும் பாதிப்பு, பி.ஜே .பி அரசுக்குக் கண்டனம், அ .தி.மு.க அரசு மெத்தனம் ' உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். பிறகு, அனைவரும் தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவைகளைப் பகிர்ந்தனர். அவரும் மேற்கொண்டு சில ஆலோசனைகளை வழங்க, நாம் இதுகுறித்து மாணவரணி மாநில நிர்வாகிகளிடம் பேசினோம்.

மாணவரணியிடம் ஆலோசனை நடத்தும் ஸ்டாலின்

''ஆலோசனை கூட்டத்தில் நீட்டைக் கடந்து வேறு எதுவும் பேசப்படவில்லையா?'' என்றோம்.

“மாணவரணியை வலுப்படுத்தும் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. முதற்கட்டமாக  10 அல்லது 15 நாள்களில், மாவட்டந்தோறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.  அதில், கட்டாயம் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஒரு காலத்தில் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தி.மு.க மாணவர் அமைப்புகள் களை கட்டும். கால ஓட்டத்தில் அது தேய்மானம் அடைந்துவிட்டதாக விமர்சனம் உள்ளது. கல்லூரி தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதும் ஒரு காரணம் என்றாலும், மாணவர்களிடம் கூடுதல் நம்பிக்கை பெறுவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்துள்ளோம்.

அந்தவகையில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்பு கட்டுவது மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்குவது உள்ளிட்டப் பணிகளைச் செய்யவுள்ளோம். மாவட்டம் தோறும் அல்லது மண்டலம் தோறும் சமகாலத்தில் மாணவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தீர்வுகள் குறித்து கருத்தரங்கம் நடத்த முடிவுசெய்துள்ளோம். முதற் கருத்தரங்கினை செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், பெரியளவில் தொடங்க ஆலோசித்துள்ளோம். மாணவ சமூகத்தினிடையே அடிக்கடிப் பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்கள் உள்ளிட்டவைகளை நடத்தி, அவர்களின் தனித்திறமைகளை வளர்த்தெடுக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். மாணவரணிக்குள் பெரிய தலைவர்களை அழைத்து வந்து, தொடர்ந்து அரசியல் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

'மாணவ சமூகத்துக்கு ஏதாவது பிரச்னை என்றால், முதலில் அவர்கள் உங்களைத்தான் அழைக்க வேண்டும். அந்தளவுக்கு அவர்களிடம் நம்பிக்கையைப் பெற வேண்டும்' என்று எங்களை வாழ்த்தி, வழிகாட்டியுள்ளார் செயல் தலைவர் ஸ்டாலின். அதற்கேற்ப  மாணவ சமூகத்தின் அரணாக எங்கள் மாணவரணியை நிறுத்த,  இனி முன்பைவிட பாய்ச்சலோடு முன்னேறுவோம்" என்றனர் நம்பிக்கையோடு. 

அவர்களிடமிருந்து விடைபெறும் நேரத்தில் முன்பொருமுறை தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மேடையில் முழங்கிய ஒரு கருத்து நம்  நினைவுக்கு வருகிறது.

'செயலை பிரதிபலிக்கும் பேச்சே முழுமையான பலனை கொடுக்கும்'  என்பதே அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!