வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (19/07/2017)

கடைசி தொடர்பு:11:16 (19/07/2017)

காகிதத்துக்கும் மெழுகுவத்திக்கும் பயப்படலாமா எடப்பாடியாரே?

எடப்பாடி பழனிசாமி, வளர்மதி, திருமுருகன்

ஸ்திரிய பொருளாதார அறிஞர் பீட்டர் ட்ரக்கர்,  “உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதைவிட என்ன பேசப்படவில்லை என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்தப் பேசப்படாத வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்பார். 
மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்திய திருமுருகனும், சேலத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த வளர்மதியும் தங்கள் நடவடிக்கையின் மூலம் நேரடியாகச் சொல்லியது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் கதிராமங்கலம் மக்களுக்கான ஆதரவையும்தான். ஆனால், அவர்களே மறைமுகமாக உணர்த்தியது, ‘நாங்கள் இந்த ஜனநாயகத்தை நம்புகிறோம்! இந்த ஜனநாயகம் அனுமதிக்கும் வழிகளில் எல்லாம் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பதைத்தான். ஆனால், எடப்பாடி அரசுக்கு திருவும், வளர்மதியும் நேரடியாகச் சொன்னதும் புரியவில்லை... மறைமுகமாக உணர்த்தியதும் புரியவில்லை. நெறியான உரையாடலை ‘குண்டாஸ்’ கொண்டு நெரிக்கப் பார்க்கிறது.   

'போராட்டமும், அரசும்'

 'வளர்மதி மாவோயிஸ்ட் அதனால்தான் கைது செய்தோம்' என்கிறது எடப்பாடி அரசின் காவல் துறை. சரி... வளர்மதி என்ன கல்லூரி வாசலில் நின்றுகொண்டு ஆயுதமா விநியோகித்துக் கொண்டிருந்தார்? துண்டறிக்கைதானே விநியோகித்துக் கொண்டிருந்தார். உண்மையில் இந்த அரசுக்கு வளர்மதி மீது சந்தேகம் இருந்திருக்குமாயின், வளர்மதி துண்டறிக்கை விநியோகித்ததை வரவேற்றிருக்க வேண்டும். 'வளர்மதி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிவிட்டார்' என்று அவரை வரவேற்றிருக்க வேண்டும். அவருடன் உரையாடலை நிகழ்த்தியிருக்க வேண்டும். அவரது எதிர்ப்பைப் பதிவு செய்ய  அனுமதித்திருக்க வேண்டும். இது எதையும் செய்யாமல் துண்டறிக்கை விநியோகித்துக் கொண்டிருந்தவரை கைது செய்து குண்டாஸ் போடுவது அடக்குமுறையின் உச்சம். 'நீ என்ன சொல்வது... நான் என்ன கேட்பது. அடங்கி ஒடுங்கி  போ!' என்று தங்கள் குடிகள் மீது வன்முறையை ஏவும் எதேச்சை அதிகாரம்.

வளர்மதி

தமிழகத்தில் தொடரும் கைதுகளையும், பாயும் குண்டாஸுகளையும் உன்னிப்பாகக் கவனித்தால், அந்தந்தப் போராட்டங்களுக்கான கைதாக மட்டும் தெரியவில்லை. தமிழகத்தில் சூழலியலுக்காக, அறமான அரசியலுக்காக யாரும் இனி வீதிக்கு வந்து போராடக்கூடாது. தமிழக மக்கள் ஒரு மைய பிரச்னையை முன்னிறுத்தி கரம் கோக்கக்கூடாது என்று அரசு தெளிவாகத் திட்டமிடுகிறது. அடக்குமுறையின் மூலம் சாமானியர்கள் மீது ஓர் உளவியல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது இந்த எடப்பாடியார் அரசு. 

'நெடுவாசல் முதல் கதிராமங்கலம் வரை; டாஸ்மாக் முதல் நீட் வரை...' எனத் தமிழ்ச் சமூகத்தில் பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கின்றன. தொடர் துரோகங்களால், அரசுகளின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் மக்கள். 'போராட்டங்கள் மூலம் மட்டும்தான் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்' என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான், வளர்மதி கல்லூரி வாசலில் நின்றுகொண்டு துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்... ப்ளஸ் டூ மாணவியான ஐஸ்வர்யா நீட் தேர்வுக்கு எதிராக ரத்தத்தில் தங்கள் கோரிக்கையை எழுதி அரசுக்கு அனுப்பிவிட்டு அடுத்தக் கட்டமாக மெழுகுவத்தி ஏந்தும் போராட்டத்துக்குத் திட்டமிடுகிறார்.  நியாயமான அரசாக இருந்தால், இந்தப் பிரச்னைகளைக் களைய மெனக்கெட்டிருக்க வேண்டும். இந்த அரசு உங்களுக்காக இருக்கிறது என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். அதையும் செய்யாமல், போராடுபவர்கள் மீது வன்முறையையும் ஏவுவது வன்மத்தின் உச்சம்!

'மக்கள் தலைவர்களின் இல்லாமை'

எடப்பாடி பழனிசாமிகருணாநிதி, ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் வெகுஜன தலைவர்களாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றி ஒரு பிம்பம் இருந்தது. அந்த பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியத் தேவை இருந்தது. அந்தப் பிம்பத்துக்கு உரமூட்ட பொய்யாகவாவது எதையாவது சொல்லவும்.. செய்யவும் வேண்டியத் தேவை இருந்தது. ஆனால், எடப்பாடிக்கு அத்தகைய பிம்பங்கள் எதுவும் இல்லை. அதனால் அந்தப் பிம்பச் சுமையும் இல்லை.  
நமக்குத் தெரிகிறதோ இல்லையோ, தனக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஜெயலலிதா என்னும் பெண்ணை முன்னிறுத்தித்தான் தாம் வென்றோம்... அந்தப் பெண் இல்லாததால், இனி எதிர்காலத்தில் அப்படி ஒரு வெற்றி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால் அவர் மக்களுக்கு விசுவாசமாக இல்லாமல், ‘பெண்களை முன்னிறுத்திப் போராடுகிறார்கள்’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட முடிகிறது. போராட்டங்களை லத்திகள் கொண்டு அடக்கி, அதை சுலபமாகக் கடந்தும் சென்று விடுகிறார்.  

'அச்சத்தில் அரசு'

அச்சத்திலும் பாதுகாப்பற்ற சூழலிலும் தான் இருப்பதாக ஒருவர் நினைக்கும்போதுதான் அதிகப் பிழைகளைச் செய்வார். பண்பற்ற, நாகரிகமற்ற செயல்களில் இறங்குவார். எடப்பாடி அப்படியான சூழலில் தான் இருப்பதாகக் கருதுகிறாரா அல்லது உண்மையில் அப்படியான சூழலில்தான் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அதனால்தான், காகிதத்துக்கும் மெழுகுவத்திக்கும் அஞ்சிக் கொண்டிருக்கிறார்.
 
ஜனநாயகம் உரையாடலால் ஆனது. அந்த உரையாடலைப் போராட்டங்கள் மூலமாக முன்னெடுக்க முடியும். பேச்சுச் சுதந்திரம் என்பது உரையாடலுக்கு மதிப்பளிப்பது; செவி கொடுப்பது. ஜனநாயக வழியிலான மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.வரலாறு நெடுகிலும் உரையாடலை மறுக்கும் அரசின் வீழ்ச்சி மிக மோசமானதாக இருந்திருக்கிறது.  எடப்பாடி இதை உணர வேண்டும்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்