வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (19/07/2017)

கடைசி தொடர்பு:09:04 (19/07/2017)

சசிகலா கைது முதல் சொகுசு வீடியோ வரை... பரபர பரப்பன அக்ரஹாரா!

சசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறை

பிப்ரவரி 14-ம் தேதி 

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது உச்சநீதிமன்றம். 

பிப்ரவரி 15-ம் தேதி மாலை 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.

சிலதினங்களுக்கு முன்பு...

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா மீது, 'சாதாரணக்  கைதியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய சசிகலா, சிறைக்குள் சகல வசதிகளுடன் வலம் வருகிறார்' எனப் புகார் எழும்பியது. 

ஜுலை 12-ம் தேதி புதன்கிழமை 

கர்நாடகா உள்துறை செயலர், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர், காவல்துறை ஐ.ஜி ஆர்.கே தத்தா ஆகியோருக்கு, சிறைத்துறை டி.ஐ.ஜி-யான  ரூபா,  புகார் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில், 'சிறைக்குள் இருக்கும் சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்படும் உணவு, மருந்துகளைக் கொடுக்காமல், வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வருவதற்கும், சிறைக்குள்ளேயே சமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிறை என்றே அறியாத வண்ணம் ஒரு சொகுசு வாழ்க்கை வாழ, சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்கு சசிகலா தரப்பு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. ஏனைய சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஒரு கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். 

டி.ஐ.ஜி- ரூபா மற்றும் டி.ஜி.பி சத்திய நாராயண ராவ்

ஜுலை 12-ம் தேதி

சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயண ராவ், "நான் எந்த லஞ்சமும் வாங்கவில்லை. சசிகலா சாதாரணக் கைதியைப் போலவே நடத்தப்படுகிறார்" என்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். 

அன்றே, இதற்குப்  பதில் தரும்விதமாக சிறை டி.ஐ.ஜி ரூபா, "என்னிடம் அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது. கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி என்ற அடிப்படையில், அவர் மீதான புகாருக்காக சத்தியநாராயண ராவுக்கும் நான் புகார் கடிதம் அனுப்பியுள்ளேன். என்மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. கேட்கும்போது முழு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன்" என்றார்.

ஜுலை 17-ம் தேதி திங்கள்கிழமை 

இந்தநிலையில், சசிகலா சிறையில் வாழ்ந்து வரும் சொகுசு வாழ்க்கை என்ற பெயரில் அவர் வசிக்கும் சிறைப் படங்கள் சமூக வலை தளங்களில் வெளியானது.

ஜுலை 17-ம் தேதி திங்கள்கிழமை

இதன் தொடர்ச்சியாக,  ஜுலை 17-ம் தேதி சிறைத்துறை பொறுப்பில் இருந்து, பெங்களூரு நகர போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டார்  ரூபா.

சிறையிலிருந்து ஷாப்பிங் போகும் சசிகலா

ஜுலை 17-ம் தேதி மாலை

"ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது துறை ரீதியிலான நடவடிக்கையே ஆகும்" என்று விளக்கமளித்துள்ளார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.

ஜுலை 18-ம் தேதி மாலை 

'சசிகலா, சிறையில்  ஒரு பையை எடுத்துக்கொண்டு சொகுசாக ஷாப்பிங் சென்று வந்தார் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், சசிகலாவுடன் இளவரசியும் தோன்றுகிறார்.

நாளுக்கு நாள் சசிகலாவை சுற்றும் பரபரப்புகள் என்பதைக் கடந்து, தற்போது நிமிடத்துக்கு நிமிடம் என்றளவில் எகிறிக்கொண்டிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்