வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (19/07/2017)

கடைசி தொடர்பு:13:19 (19/07/2017)

‘நடிக்காமல் இருக்கிறோம்' என்பதைச் சரியாகவே நடிக்கிறார்கள்... பிக்பாஸ் உளவியல் பார்வை இதுதான்!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் நடந்து கொள்ளும் விதம், பேசுவது என அனைத்தும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. நாளுக்கு நாள் ஏதோ மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கூட்டத்தைப் பார்ப்பது போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி போய்கொண்டு இருக்கிறது.

முரண்பட்ட உணர்வுகள்...

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கும் உளவியல் தாக்கம் குறித்து மன நல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். "பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதுமே தெளிவாக எழுதப்பட்ட ஒரு , ஸ்கிரிப்ட்தான். ஒரே மாவை வைத்து, தோசையும் சுடலாம், இட்லியும் சுடலாம். அதுபோலத்தான் இவர்கள் இந்த நிகழ்ச்சியை எடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஏன் இவ்வளவு வெற்றி பெற்றது?  ஆல்பரட் ஹிட்சாக் திரைப்படத்தில் கொலைகாரன் யார் என்பதை முதல் காட்சியிலேயே காட்டி விடுவார்கள். சாகப்போகிறவன் யார் என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால், சாகப்போகிறவனுக்கு, இவன்தான் கொலைகாரன் என்பது தெரியாது. கொலைகாரன், பாதிக்கப்படுவன் என்று இரண்டு கேரக்டர்களுடனும்  பார்வையாளனை ஒன்ற வைத்து விடுவார். இரண்டு விதமான கான்சப்ட்டில் ரசிகர்களைக் கொண்டு போவார். அதில்தான் திரைப்படத்தின் வெற்றி இருக்கிறது.

இப்படி முரண்பட்ட உணர்வுகளை ரசிகர்களிடம் எழுப்பி விளையாடுவதில்தான் ஆல்பரட் ஹிட்சாக் திரைப்படங்களின் வெற்றி அடங்கி இருக்கிறது. இதுவே தமிழ்த் திரைப்படங்கள் என்றால், சம்பந்தம் இல்லாத  நபரைக் கொலைகாரனாகக் காட்டுவார்கள். ஆல்பரட் ஹிட்சாக் திரைப்படங்களைப் போலத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

துப்பறிவு நிலையை உருவாக்குகிறது

ஒரு முறை ஆர்த்தியை வில்லி போல பேச வைக்கின்றனர். இன்னொரு நாள் அவர் மன்னிப்புக் கேட்பது போல பேச வைக்கின்றனர். ஒரு திரைப்படத்தையோ அல்லது தொலைக்காட்சித் தொடரையோ விருப்பத்துடன் பார்ப்பதற்கு, அதனுடன் ஒரு தொடர்பு நிலையை உருவாக்கவேண்டும். அதில்தான் இயக்குனருடைய வெற்றி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அடுத்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள். யார் வெளியேறப்போகிறார் என்ற துப்பறிவு நிலையை அல்லது முன்பே கணிக்கக்  நிலையைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகின்றனர். தாங்கள் நினைத்துபோல ஒரு நபர் வெளியேற்றப்பட்டால், நான் சொல்வது சரியாக இருக்கிறது என்று பெருமை கொள்வோம். அப்படி முன்பே கணிக்க முடியாவிட்டால், கணிப்பதற்கு கற்றுக் கொள்கிறோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளவர்கள் பல்வேறு வித உணர்வுகளை, உடல் மொழியை, ஆசாபாசங்களை வெளிப்படுத்துகின்றனர். அதனைப் பார்க்கும் நாமும் அந்தச் சூழலில் இருந்தால் எப்படி இருப்போம், அட்ஜெஸ்ட் செய்து கொள்வோமா என்ற கிளைக்கேள்வியையும் நம்முள் உண்டாக்குகிறது.

டி.ஆர்.பி ரேட்டிங்

அசோகன்இந்தத் தாக்கத்தை உண்டாக்குவதற்கு ஒரு நல்ல ஸ்கிரிப்ட் தேவை. இது வெறுமனே நாடக பாணியில் இருந்தால் போரடித்து விடும். எனவே அதிரடி நிகழ்வுகளை சுவாரஸ்யத்துக்காகச் சேர்க்கின்றனர். மனிதனின் இயல்பான குணாதியங்களான புறம் பேசுதல், பிடிக்காதவர்களைப் பற்றி வேறு ஒருவரிடம் விமர்சனம் செய்தல் போன்ற சாதக, பாதக உணர்வுகளைச் சரிசமமாகப் பாத்திரங்கள் மூலம் பேச வைத்து பார்வையாளர்களை ஈர்க்கின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் முன்பு மக்களைக் கட்டிப்போடுகிற விஷயங்களை, டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகச் செய்கின்றனர். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பவர்களைக் கூட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஈர்த்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லது அல்லது கெட்டது என்பது அப்பாற்பட்ட விஷயம். ஆனால், இந்த நிகழ்ச்சி மக்களை ஈர்த்து விட்டது.

பிறர் அவர் ஒரு நபரை ரகசியமாகப் பார்ப்பது என்பதே மனித மனதுக்குப் பிடித்தமான ஒன்று. என்னுடைய வீட்டு ஜன்னல் மூலமாக மற்றவர்களை, அவர்கள் நம்மைக் கவனிக்காமல் பார்ப்பது பிடித்தமான ஒன்றாக மக்களிடம் இருக்கிறது. அதுபோலத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தவன் வீட்டு ஜன்னலை நம் சுவற்றில் வைத்து இருக்கின்றனர்.

எல்லாமே நடிப்புத்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களுக்கு, நம்மை கோடிக்கணக்கானவர்கள் பார்க்கின்றனர் என்பது தெரியும். அந்த உணர்வோடுதான் அவர்கள் இருப்பார்கள். சொல்லிக் கொடுத்த வசனங்களை அழகாகச் சொல்கிறார்கள். மனிதன் கோபப்பட்டால் எந்த எல்லையைக் கடந்தும் பேசுவான். ஆனால், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோபப்படுபவர்கள் ஓர் எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. ஒரு நாகரிகமான எல்லைக்கு உட்பட்டு, வக்கிரத்தையும் அளவோடுதான் வெளிப்படுத்துகின்றனர்.

இதில் இருந்தே இந்த நிகழ்ச்சி என்பது முன்கூட்டியே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்தான் என்பது தெரிகிறது. ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட  சூழலில், கொடுக்கப்பட்ட வசனங்களை முன்கூட்டியே ரிகர்சல் செய்து பேசுகின்றனர். அருவெருப்பு இல்லாமல் ஓரளவு வில்லத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர். உணர்வோடு இருக்கிறார்கள். நடிக்காமல் இருக்கிறோம் என்பதை சரியாக நடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.   
நிகழ்ச்சியைப் பார்க்கும் பொதுமக்கள் அந்தப் பாத்திரங்களில் தங்களைப் பொருத்திப் பார்க்கின்றனர். இது தவறு. ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது, பாடல் காட்சியில் ஒன்றிப் போகிறோம். பொருந்திப் போதல் அல்லது ஒன்றிப் போதல் என்பது திரும்பத் திரும்ப சுண்டி இழுக்கும் ஒரு விதபோதை. அதில்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி அடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஒரு பொழுது போக்குக்காகப் பார்க்கலாம். அந்த நிகழ்ச்சி, மக்களை வளப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி என்று சொல்வது எல்லாம் பொய்யானது.

பொழுது போக்கு மட்டுமே

திரைப்படங்களில் நல்ல பாத்திரங்களைப் பார்த்தால், அதுபோல நாமும் இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அதுபோல ஒன்றும் இல்லை. இயற்கையான விஷயத்தை, செயற்கைத்தனமாக உருவாக்கி, இயற்கை மாதிரி காண்பிக்க முயற்சிக்கின்றனர். இது நிஜமாக நடக்கிறது என்று சொல்லி நிழலை நிஜம் என்று நம்ப வைக்கின்றனர்.

5 மணி, 6 மணி எனக் குறிப்பிட்டு காட்டுகின்றனர். அதில் பங்கேற்பவர்கள் எல்லாம் மேக்கப்போட்டு நடிக்கின்றனர். இது எப்படி ரியாலிட்டி ஷோ ஆக இருக்க முடியும். இந்த நிகழ்ச்சி நேர்த்தியாக எடிட்  செய்யப்பட்டிருக்கிறது. வசன உச்சரிப்பு சரியாக இருக்கிறது. மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வீட்டு ஜன்னலை நம் வீட்டு சுவரில் வைத்து விட்டார்கள். பலர் இந்த நிகழ்ச்சியை உண்மை என்று நினைக்கின்றனர். இதனை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்ளவேண்டும். மற்றபடி இதில் வேறு ஒன்றும் இல்லை" என்றார் தெளிவாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க