வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (19/07/2017)

கடைசி தொடர்பு:18:49 (19/07/2017)

புழல் சிறையில் என்னவெல்லாம்  கிடைக்கும்? - ஒரு ‘ரேட்’ ரிப்போர்ட்! #VikatanExclusive

                             மத்திய புழல் சிறையின் தோற்றம்

கைதிகளுக்குள் மோதல், சிறையில் போதைப் பொருள்கள் கண்டுபிடிப்பு என்று அடிக்கடி பரபரப்பைப் பற்றவைத்து விடுகிறது சென்னை மத்திய புழல் சிறைச்சாலை! கையில் பணமும், அதை எங்கே, யாருக்குத் தரவேண்டும் என்ற தெளிவும் இருந்தால் போதும்... அத்தனை சிறைகளும் வீடுபோல்தான் என்பதே 'சிறைப்பறவை'களின் சீரான வாசகமாக இருக்கிறது. எங்கோ ஓர் இடத்தில் டி.ஐ.ஜி. ரூபா போல சிலர் இருக்கலாம். இருந்தாலும், ரூபாக்களைவிட 'ரூபாய்'களின் மதிப்பு அதிகம் என்பதைத்தான் ரூபாவின் இடமாற்றம்கூடச் சொல்கிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்ற தகுதியுடன் 2006-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்ட புழல் மத்திய சிறைச்சாலையும் இதற்கு விலக்கல்ல. நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில், 300-க்கும் குறையாத தண்டனைக் கைதிகள், 2,003 விசாரணைக் கைதிகள், 150 பெண் கைதிகள் என மூன்றுவிதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிறைகளுடன் ஒரே நேரத்தில் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி இங்கு உள்ளது. 30 அடி உயரம் கொண்ட புழல்சிறை சுவரின்மீது ஒன்றரை அடி உயரத்துக்கு மின் வேலியும் உண்டு. சிறை வளாகத்தைச் சுற்றி 15 கண்காணிப்புக் கேமராக்களுடன், கண்காணிப்புக் கோபுரங்களும் இருக்கின்றன. புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள், தனித்தனி நிர்வாகம் என செயல்படுகிறது. ஒவ்வொரு பிளாக்குக்கும் 3 முதல் 4 காவலர்கள்வரை பாரா பார்ப்பார்கள். 24 மணிநேரமும் இது நடக்கும். பொதுவாக மற்ற பிளாக்குகளுக்கு வார்டனும் ஹெட் வார்டனும் பொறுப்பாக இருப்பர். ஆனால் உயர் பாதுகாப்பு பகுதிக்கு ஹெட் வார்டனுக்கு மேல் அசிஸ்டென்ட் ஜெயிலர், டெபுடி ஜெயிலர் இருப்பார்கள்.  இவர்களுக்கு மேல் ஜெயிலர் இருப்பார்.

இத்தனை பாதுகாப்பையும் பார்த்துவிட்டுத்தான் அசம்பாவிதங்களும் இங்கே சாதாரணமாக நடக்கின்றன. ''மத்திய புழல் சிறையில் என்னவெல்லாம் கிடைக்கிறது'' என அடிக்கடி அங்கே சென்றுவரும் 'சிறைப்பறவைகள்' சிலரைப் பிடித்துக் கேட்டோம். "சிறைக்குள் செல்போனைச் சாதாரணமாகப் பயன்படுத்தலாம்; யாருக்கு வேண்டுமானாலும் பேசலாம்; நமக்குத்தான் யாரும் பேச முடியாது. கொஞ்சம் செலவு செய்தால் நமக்கும் ஒரு நம்பர் கிடைக்கும்; அந்த நம்பருக்கு வெளியில் இருந்து தகவலை வாங்கிக்கொள்ளலாம். பல கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் சிறையில் இருந்துதான் 'ஸ்கெட்ச்' போடப்படுகின்றன. உதாரணத்துக்கு, 'நாளை காலை சைதாப்பேட்டையில் பத்து மணிக்குள் குறிப்பிட்ட இடத்தில் ஒருவர் காலி' என்பதை நீங்கள் டி.வி-யில் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். அதையே, நீங்கள் சிறையில் இருந்தால்... அந்தக் கொலை நடக்கப்போவது பற்றி அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே தெரிந்துவிடும். சிகரெட், பான் மசாலா போன்ற போதைப் பொருள்கள் புழக்கமும் இங்கே சாதாரணம்தான். விசாரணைக் கைதிகள் உள்ள 'செல்'லில் இதன் நடமாட்டம் குறைவு. ஆனால், தண்டனைக் கைதிகளின் 'செல்'லில் தாராளமாய்க் கிடைக்கும்.சிங்கிள் பீடி என்றால், பத்து ரூபாய். அதை, 'தனி பீடி' என்றுதான் சொல்வோம். ஒரே பீடியாய், 'குரூப்'பாய் ஆளுக்கு ஓர் இழுப்பு இழுத்துக்கொண்டால் தலா இரண்டு ரூபாய் ஷேரிங் கொடுத்தால் போதும். எங்களுக்குள்ளேயே காசு போட்டுக்கொள்வோம்.

Puzhal Prison

பொட்டலம் (கஞ்சா) என்றால், ஓர் இழுப்புக்கு பத்து ரூபாய். ஒருமுறை உக்கானில் (உக்கான்: கஞ்சா துகளை நிரப்பும் கட்டை பைப்) 25 ரூபாய் பொட்டலத்தைக் கொட்டிவிட்டால், பத்து பேர் இழுக்கலாம். பொட்டலத்தை உள்ளே கொண்டு வருகிறவருக்கு ஓர் இழுப்பு; பொட்டலத்தைப் பக்குவமாக உக்கானில் நிரப்பி பற்றவைத்துக் கொடுப்பவருக்கு ஓர் இழுப்பு என்று ஓசியில் கொடுப்போம். ஒரு பொட்டலத்தை உள்ளே கொண்டுவருவதற்காகக் 'கேட்'டில் 50 ரூபாய் கொடுக்க வேண்டும். உள்ளே வந்த பின்னால் ஒவ்வொரு டோரிலேயும் ஐந்து, ஐந்து என்று சில்லறை நாணயங்களை விட வேண்டும். அப்படி, இப்படி என்று அதற்கே 100 ரூபாய் செலவாகிவிடும். வெளியே இருந்து வாங்குகிற பொட்டலத்தின் விலை ஐம்பது ரூபாய்தான். ஆனால், அதை உள்ளே கொண்டுவந்து இழுப்பதற்கு ஆகும் செலவு 200 ரூபாய்.

வெளியே சென்றுவிட்டால், 20 ரூபாய்க்கு ஒரு பொட்டலத்தை வாங்கி ஐந்து பேர் நன்றாக இழுத்துத் தள்ளுவோம். சரக்கு, தம் எல்லாமே சிறையில் ஈஸிதான். ஆனால், அத்தனைக்கும் ஒவ்வொரு ரேட் அவ்வளவுதான். குளிப்பதற்கு என்ன சோப்பு பிடிக்குமோ அதை வாங்கிவந்து குளிக்கலாம்; விதவிதமாக நாக்குக்கு ருசியாகச் சாப்பிடலாம்; குழந்தைகளை அடிக்கடி வரவழைத்துப் பார்த்துப் பேசி மகிழலாம். என்ன ஒரேயொரு சிரமம் என்றால், நாம் வெளியில் போய்ப் பேச முடியாது. அவ்வளவுதான். எல்லாவற்றுக்கும் தேவைப்படுவது காசு, பணம், துட்டு, மணி, டப்பு மட்டும்தான்... இப்போது நிறைய பேர் வெளியே இருந்தால், சிக்கல் எனத் தெரிந்து உள்ளே வந்து தங்கிவிடுகிறார்கள். உயிருக்கு பாதுகாப்பு, நேரத்துக்கு நிம்மதியான சோறு, தூக்கம், சரக்கு, தம் என எல்லாமே கிடைக்கும்போது ஜெயிலைவிட முடியுமா'' என்று அதிரவைக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்