சமையல் முதல் இலக்கியம் வரை புத்தகச் சந்தையாக தி நகர் உருவானது எப்படி? அங்காடித் தெருவின் கதை - 15

தி நகர்

ங்காடித் தெருவின் அடையாளம் என்பது வெறுமனே நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளும் மட்டும் அல்ல. 'சமைப்பது எப்படி' என்பதுமுதல் சீரியஸ் ஆன இலக்கியப் புத்தகங்கள்வரை விற்பனை செய்யப்படும் சந்தையும் தி நகர் பகுதியில்தான் இருக்கிறது. ஆம், தி.நகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இருக்கின்றன.  

லிஃப்கோ பதிப்பகம் 

Lifco

பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை என வணிக வீதிகளுக்கு மத்தியில், தி நகர் உட்புறச் சாலைகளில் இந்தப் பதிப்பகங்கள் செயல்படுகின்றன. பாண்டி பஜார் அருகில் உள்ள தெருக்களில் மட்டும் பத்து பதிப்பகங்களுக்கு மேல் இருக்கின்றன. 

அங்காடித் தெருவின் கதைத் தொடரில் ஆறாவது அத்தியாயத்தில் லிஃப்கோ புத்தக நிறுவனம் பற்றிச் சொல்லி இருந்தேன். கடலூரைச் சேர்ந்த வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவர் சென்னைக்கு வந்தபோது, முதன் முதலாக 'லிட்டில் ஃப்ளவர்' என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று சொல்லப்பட்ட பத்தாம் வகுப்புக்கு, ஆங்கில இலக்கண நோட்ஸ்களை வெளியிட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம், 'லிஃப்கோ' என்று பெயர் மாற்றம் பெற்றது. 1953-ம் ஆண்டு ரங்கநாதன் தெருவில், லிஃப்கோ தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த 'லிஃப்கோ' பதிப்பகம், தற்போது ராமேஸ்வரம் தெருவில் உள்ளது.

தமிழ்வாணனின் பதிப்பகம் 

தி நகர் தமிழ்வாணன் அதேபோல, 1980-களில் கறுப்புக் கண்ணாடியையும், தொப்பியையும் மட்டும் வரைந்து போஸ்ட் கார்ட் அனுப்பினால், அது எழுத்தாளர் தமிழ்வாணன் வீட்டுக்கு வந்துவிடும் என்ற நிலை அப்போது இருந்தது. 'இந்தி கற்றுக் கொள்வது எப்படி', 'ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி', 'கோலம் போடுவது எப்படி' என்றெல்லாம் தமிழ்வாணன் புத்தகங்கள் போட்டார். தமிழ்வாணனுடைய மணிமேகலை பிரசுரம் தி நகர் பகுதியில் முக்கிய அடையாளமாக இருந்தது என்றே சொல்லலாம். இப்போதும் மணிமேகலைப் பிரசுரம் அதே இடத்தில் இயங்கிவருகிறது. நடிகர், நடிகையர் உள்பட பிரபலமானவர்களின் முகவரிகள் அடங்கிய புத்தகத்தை மணிமேகலைப் பிரசுரம் போட்டிருக்கிறது. மணிமேகலைப் பிரசுரத்தின் மிகப் புகழ்பெற்ற புத்தகம் என்றால் இதைத்தான் சொல்ல முடியும். 

“நிதி உதவி கிடைத்தது!”

தி.நகரில் பதிப்பகங்கள் தோன்றுவதற்கு என்ன காரணம் என கண்ணதாசன் பதிப்பகத்தின் உரிமையாளர் காந்தி கண்ணதாசனிடம் கேட்டோம். "1960-களில் பாண்டி பஜார் வணிக மையமாக மாறத் தொடங்கியிருந்தது. பாண்டி பஜாரைச் சுற்றிச் சினிமா பிரபலங்களும், அவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் சினிமா ஃபைனான்ஸியர்களும் இருந்தனர். அப்போது இருந்த 40 சதவிகித ஃபைனான்ஸியர்கள் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள்தான். அந்தக் காலகட்டத்தில் பதிப்பகங்கள் தொடங்குவதற்கும், இந்த ஃபைனான்ஸியர்கள் பண உதவி செய்தனர். இதனால்தான் சின்ன அண்ணாமலை, தி.நகரில் ஒரு பதிப்பகம் தொடங்கினார். சின்ன அண்ணாமலையிடம் வேலை பார்த்த பலர் பின்னர் தி.நகரிலேயே பதிப்பகங்கள் ஆரம்பித்தனர். பாண்டி பஜாரில் அப்போது, 'ராமன் பிரஸ்' என்று இருந்தது. இந்தப் பிரஸ் இருந்த மாடியில் சிறிய அறைகள் இருக்கும். அதில்தான் வானதி பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், குயிலன் பதிப்பகம் அனைத்தும் இருந்தன" என்றார்.

பார்சல் அனுப்பும் வசதிகள்!

தி.நகர்

1955-ல் இருந்து வானதி பதிப்பகம் தி.நகரில் இயங்கிவருகிறது. அதன்  உரிமையாளர் வானதி ராமநாதனிடம் பேசினோம். "பொதுமக்களிடம் புத்தகம் வாங்கும் பழக்கம் என்பது முதலில் தபால் வழியே வி.பி.பி-யில் வாங்குவதாகத்தான் இருந்தது. அதேபோல, தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள புத்தக விற்பனையாளர்களுக்கும் புத்தகங்களைப் பார்சலில் அனுப்ப வேண்டும். அப்போது, தி.நகரில் போஸ்ட் ஆபீஸ், டி.வி.எஸ்., ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள், ரயில்வே புக்கிங் அலுவலகங்கள் எல்லாம் இருந்தன. இதனால் பதிப்பாளர்கள், எளிதாகத் தங்கள் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசெல்ல முடிந்தது. இதன் காரணமாகத்தான் தி.நகரில் அதிக அளவு பதிப்பகங்கள் தொடங்கப்பட்டன என்று நான் நினைக்கிறேன். பின்னாளில் திருவல்லிக்கேணி, பாரிமுனையில் தொடங்கப்பட்ட பதிப்பகங்கள்கூடத் தி.நகருக்கு இடம்பெயர்ந்தன. இப்போது தி.நகர் என்பது ஒரு ஷாப்பிங் மையமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. மலேசியா, இலங்கை, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சென்னை வரும்போது தி.நகரில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். அவர்கள் நகைக்கடைகள், துணிக்கடைகளுக்குச் செல்வதுபோல, புத்தகக்கடைகளுக்கும் வருகிறார்கள். புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் தி.நகரில் பதிப்பகங்கள் அதிக அளவுக்கு இருக்கின்றன'' என்றார். 

அங்காடித் தெருவின் கதையில் இந்தப் பகுதியைப் பற்றிச் சொல்லாவிட்டால், இந்தத் தொடர் முழுமைபெறாது. அது எல்லோரும் அறிந்த தெருதான். அந்தத் தெரு பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!