வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (20/07/2017)

கடைசி தொடர்பு:13:19 (20/07/2017)

“இவர்கள் தாக்கத்தை விதைப்பவர்கள்!” தமிழக சமகால போராட்டங்களும் முன்னெடுக்கும் அமைப்புகளும்

போராட்டங்கள்

‘இரோம் ஷர்மிளா 90 வாக்குகள் மட்டுமே பெற்றார்’ என்பது ஒரு சமூகப் போராளியின் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சமூகப் போராளிகள் போராட்டங்கள் மூலம் விதைப்பதை எப்போதுமே அவர்கள் அறுவடை செய்வதில்லை. தமிழகத்திலும் அத்தகைய உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். நம்பிக்கையை விதைத்த எம்.எஸ்.உதயமூர்த்தி, அரசியல் அத்துமீறல்களுக்காகப் போராடும் டிராஃபிக் ராமசாமி இவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் தோற்றுப்போனவர்கள்தான். ஆனால், அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களிடம் நம்பிக்கைகளை அதிகரித்திருக்கின்றன. நம்பிக்கைகளின் நீட்சியாகத்தான் தமிழகத்தில் சமூக இயக்கங்கள் புதிதுபுதிதாக முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்று ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். 'பினாமி ஆட்சி' என்று இப்போதைய தமிழக அரசை விமர்சிக்கிறார்கள். மக்களிடம் தாக்கத்தையும், விழிப்பு உணர்வையும் அவர்கள் தொடர்ந்து விதைத்து வருகிறார்கள்.

தனிநபர் தீர்வு வென்றதில்லை

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரில் அரசுக்கு எதிரான போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் உருவாக்கியதுதான் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு. "ஏற்கெனவே, சமூக தளத்தில் இயங்கி வரும் நிலையில் புதிய அமைப்பு ஏன்?" என்ற கேள்வியுடன் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜுவிடம் கேட்டோம்.

“கடந்த 20 ஆண்டுகளாக தனியார் மயம், உலகமயம் ஆகியற்றின் சூழலில் இந்தியாவும் சிக்கியிருக்கிறது. இந்தச் சூழலில் மக்கள் அதிகாரம் தேவை என்று கருதினோம். நாடாளுமன்றங்கள், சட்டசபை, நீதிமன்றங்கள் என ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பும் கடும் நெருக்கடியில் இருக்கின்றன. அரசுக்கு எதிராக பாதிக்கப்படும் மக்கள் போராடும்போது, அவர்கள் மீதே அரசு நடவடிக்கை எடுக்கிறது. மக்களை ஆளுகின்ற அரசு அருகதை இழந்து தோற்றுப்போய்விட்டது என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். எனவே, தனித்தனி பிரச்னைக்குத் தனித்தனி தீர்வு என்பது முக்கியம் அல்ல. வெளியில் நின்று போராடித்  தீர்வு காணவேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம்தான் மாற்று என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரூபித்து வருகிறோம். மக்கள் திரள் போராட்டம்தான் வெற்றி பெறும் என்பதற்கு  ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள்தான் மிகச் சிறந்த உதாரணங்கள். ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தும், மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் காரணமாகத்தான் தீர்வு ஏற்பட்டது. மக்கள் திரண்டால்தான் அரசு பதில் அளிக்கிறது. குறிப்பிட்ட நபர்கள் போராடினால் அரசு பதில் அளிப்பது இல்லை.

போராட்டங்கள்

பஸ்ஸையே மாற்ற வேண்டும்

இளவரசன் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டிருந்தால், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் போன்றோர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஒவ்வொரு பிரச்னையும் தீர்க்கப்படமால் போய்கொண்டு இருக்கிறது. கல்வியில், கனிமவளக் கொள்ளையில் அரசோ, நீதிமன்றமோ தீர்வை நோக்கி நகரும் போது, மேலும் புதிதாக ஒரு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற இயக்கத்தை முன்னெடுத்தோம். நம் ஊரில் சாராயம் வேண்டாம் என்பதற்கு நமக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. மதுவிலக்கை தமிழகம் முழுவதும் விவாதப்பொருளாக்கினோம். இதனால்தான், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த கோவன் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்குகள் போடப்பட்டன.

ஆற்றுமணல் கொள்ளைகளுக்கு எதிராக எத்தனையோ பொதுநல வழக்குகள் போடப்படுகின்றன. இருந்தும் கலெக்டர், போலீஸ், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் துணையுடன் மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. விருதாசலம் அருகே வெள்ளாற்றில் காரமாங்குடியில் மணல் குவாரி செயல்பட்டது. ஆற்றில் இறங்கி போராடினோம். ஆற்றிலேயே தூங்கினோம். 100 சதவிகிதம் விதிமுறைகளை மீறி மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினோம். எங்கள் போராட்டத்துக்குப் பின்னர் அது மூடப்பட்டது. மக்கள் திரள் மூலம்தான் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். இயற்கையின் உரிமையாளர்கள் மக்கள்தான். அரசு என்பது இயற்கையின் பாதுகாவலர்கள்தான்.

தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகவோ, ஒரு எம்பி-யாகவோ இருப்பவர்களால் இந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்க்கமுடியும். தேர்தல் அரசியலில் இரோம் ஷர்மிளா 90 வாக்குகள்தான் வாங்கி இருக்கிறார். சசி பெருமாள் ஒரு வேளை உயிரோடு இருந்து தேர்தலில் நின்றிருந்தால் அவருக்கும் இந்தக் கதிதான் நேர்ந்திருக்கும். இது டிரைவரை மாற்ற வேண்டிய பிரச்னை அல்ல. பஸ்ஸையே மாற்ற வேண்டும். ஆளை மாற்றினால் பிரச்னையை மாறிவிடும் என்று நினைப்பது பிரச்னையை சரி செய்ய முடியாது" என்கிறார் உறுதியாக.

மக்களுக்கு மரியாதை இல்லை

பத்திரிகையாளர் சிவ.இளங்கோ, மென்பொருள் பொறியாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்து கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கியதுதான் 'சட்டப்பஞ்சாயத்து' இயக்கம். "சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இருக்கும் கட்டப்பஞ்சாயத்தை வேரறுக்கவே நாங்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கினோம்" என்ற அறிமுகத்துடன் பேசினார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம். “நான் 2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு துப்புரவுப் பணியாளர்கள் முதல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அதிகாரி வரை அனைவரும் விதிமுறைகளின்படிதான் சேவை செய்து வருகிறார்கள். எல்லாவற்றிலும் ஒழுங்கும் , விதிமுறையும் இருக்கிறது. ஆனால், அதே போன்றதொரு ஒழுங்கு நமது நாட்டில் இல்லையே என்ற தாக்கம் என்னுள் இருந்தது. இதுதவிர நான் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களின் நம்பிக்கை வரிகளும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எனவே மென்பொருள் பணியை உதறிவிட்டு அமெரிக்காவை விட்டு வெளியேறினேன். இந்த சமயத்தில் பத்திரிகையாளர் சிவ. இளங்கோவுடன் தொடர்பு ஏற்பட்டது. 2005 -ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்தபோது, அதுகுறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த புத்தகங்கள் போட்டோம். அது பெரும் அளவு மக்களிடம் சென்று சேர்ந்தது. ஏராளமானோர்  எங்களை நோக்கி வந்தார்கள். இதன் நீட்சிதான் சட்டப்பஞ்சாயத்து இயக்கம்" என்றவர்,   "மக்கள் தங்கள் தரப்பு நியாயங்களுக்காக காவல் நிலையம், நீதிமன்றம் எங்கு சென்றாலும் எங்கேயும் மரியாதை இருப்பதில்லை. ஆனால், அரசியல் சாசனப்படி எல்லோரும் சரி சமம் என்கிறார்கள். மக்களுக்கான சேவைகள் தடையின்றி கிடைப்பதில் மாற்றம் வர வேண்டும் என்று விரும்பினோம்.

சாதித்த ஆர்.டி.ஐ

மக்களின் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்பதற்குத்தான் எங்கள் இயக்கத்தின் சார்பில் கால் சென்டர் தொடங்கப்பட்டது. போலீஸாரின் அராஜகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ஊழலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களிடம் இருந்து வேதனை அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. எங்களால் மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. மாநிலம் முழுவதும் இருந்து பள்ளிகள், கோயில்கள், சந்தைகளுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், 2014-ம் ஆண்டில் எங்கள் முயற்சியால் 10 முதல் 15 மதுக்கடைகளை மட்டுமே மூடமுடிந்தது. ஆனால், மதுவிலக்கு கோரி நாங்கள் நடத்திய போராட்டத்தின் தாக்கம் பல லட்சகணக்கானோரை சென்று சேர்ந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது போயஸ்கார்டன் வீட்டின் எதிரிலேயே போராட்டம் நடத்தினோம். இதனால் நான் உட்பட 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். இருந்தாலும் எங்களின் மதுவிலக்குப் போராட்டம் ஓயவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தேர்தல் அறிக்கைகளில் மதுவிலக்கு என்பதை பிரதானப்படுத்தினார்கள். என்றைக்குமே தேர்தல் அரசியலுக்குள் வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மக்களுக்கு அடிப்படை உரிமைகளுக்காகப் போராட ஓர் இயக்கம் தேவை. அதற்கான இயக்கமாகவே தொடர்ந்திருக்க விரும்புகிறோம். நெல்லையில் ஒருவரிடம் குடிநீர் இணைப்புக் கேட்டு மாநகராட்சிக்கு ஒருவர் மனுகொடுத்தார். அவரிடம் 15 ஆயிரம் ரூபாய் கேட்டனர். அவர் எங்களுக்குத் தொடர்பு கொண்டார். தகவல் அறியும் உரிமை சட்டப்படி மாநகராட்சிக்குக் கேள்விகள் எழுப்பி மனு செய்யும்படி கூறினோம். அதன்படி அவர் செய்தார். அவர் ஆர்.டி.ஐ மனுவில் கேள்விகள் எழுப்பிய விதம் அதிகாரிகளை உலுக்கியிருக்கிறது. ஒரு வாரத்தில் அவருக்கு உரிய கட்டணத்தில் குடிநீர் இணைப்புக் கொடுத்தனர்.இதில்தான் எங்கள் வெற்றி அடங்கி இருக்கிறது" என்றார் பெருமிதத்துடன்.

சட்டப்பஞ்சாயத்து

கேள்வி கேளுங்கள்

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் தனித்தனியாக அறம் சார்ந்தும், சமூகம் குறித்தும் தனித்தனியே கருத்துகளைப் பதிவு செய்து வந்த 30 பேர் சேர்ந்து உருவாக்கியதுதான் ‘அறப்போர் இயக்கம்’. இவர்கள் அண்மையில் நடத்திய காஃபி வித் எம்எல்ஏ பெரும் அளவில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுபத்திராவிடம் பேசினோம். "நம்மைச் சுற்றிய சமூகத்தில் தனித்தனி குழுக்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஆட்டோ ஓட்டுநருக்கு ஒரு பிரச்னை என்றால், அவருக்காக பேசுவதற்கு பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவர்களுக்காகக் கேள்விகள் கேட்பதற்கு அறம் சார்ந்த இயக்கங்கள் இல்லை. இப்போது இருப்பவை எல்லாம் ஜாதி ரீதியான, அரசியல் ரீதியான இயக்கங்களாகத்தான் இருக்கின்றன. மக்களுக்காக நாம் கேள்வி கேட்பதை விட மக்களையும் தங்கள் பிரச்னைகளுக்காகக் கேள்விகள் கேட்க வைப்பதும் முக்கியம். மக்களுக்குக் கேள்வி கேட்கும் அறிவும், தைரியமும் இருக்கவேண்டும். அடுத்த  50 வருடங்கள்  என்ன தேவையோ அதைச் செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இந்த நோக்கத்துக்காகத்தான், பல்வேறு சமூகதளங்களில் இயங்கி வந்த நாங்கள் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் ‘அறப்போர் இயக்கத்தைத்’ தொடங்கினோம். இயக்கம் தொடங்கிய சமயத்தில் சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்று வலிமையுடன் போராடினோம்.

எங்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது பேனர்கள் குறைந்திருந்தன. இதுதான் எங்களுடைய வெற்றியாகக் கருதுகிறோம்" என்றவர், "தமிழகம் இந்தியாவில் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று. கல்வியில் நாம் முன்னேறி இருக்கிறோம். ஆனால், அதற்கு நேர் எதிராக இங்கே பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்திருக்கிறது. ஊழலைத் தவறாகப் பார்க்காத ஒரு சமுதாயம் உருவாகி வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் லோக் ஆயுக்தா இல்லை. அதை முன்னெடுப்பதுதான் எங்கள் நோக்கம்" என்கிறார்.  
விதைதான் முக்கியம் தோழர் என்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்