‘சசிகலா சிறை விவகாரத்தில் சென்னை அ.தி.மு.க. பிரமுகருக்கு சிக்கல்!’ ஏ.சி, ஃபிரிட்ஜ், இண்டக்‌ஷன் ஸ்டவ் சப்ளை செய்தது, அம்பலம் #VikatanExclusive

சசிகலா

சென்னை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான எலெக்ட்ரானிக்ஸ் கடை, பெங்களூரில் உள்ளது. அங்கிருந்துதான் சசிகலா சிறை அறைக்கு குளிர்சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக, பெங்களூரு போலீஸார் அவரிடம்  விசாரணை நடத்த உள்ளனர். 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி.களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐபிஎஸ் துணிச்சலாகத் தெரிவித்தார். சசிகலா சிறை அறையில் சமையலறை, குளிர்சாதனப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்தார். இது, கர்நாடக அரசியலிலும் ஐபிஎஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில், சிறைத்துறை டிஐஜியாகப் பணியாற்றிய ரூபா, போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதோடு, ரூபாவால் குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை உயரதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறைச் சலுகை விவகார விசாரணை அதிகாரியாக   வினய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று சென்று, முதற்கட்ட விசாரணையை நடத்தினார். சலுகைகள் பெற்றதாகக் கூறப்பட்டவர்களின் அறைக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன்பிறகு, பத்திரிகையாளரைச் சந்தித்த வினய்குமார்,  விசாரணை நடந்துவருவதால், எதையும் சொல்ல முடியாது. விரைவில் விசாரணைகுறித்த அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து, சிறைச் சலுகை விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ரூபா மற்றும் இடமாற்றப்பட்ட சிறைத்துறை உயரதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்று உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

சசிகலா

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், விசாரணை அதிகாரி வினய்குமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆய்வுசெய்தார். சசிகலா, இளவரசி, சுதாகரன் எனச் சலுகைகள் பெற்றதாகக் கூறப்படும் கைதிகளின் அறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, பாதுகாப்பிலிருந்த சிறைக் காவலர்கள்குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

சிறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அனிதாவிடமும் சில கேள்விகளை வினய்குமார் கேட்டார். அதற்கு, அனிதா அளித்த பதில்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டன. சிறைக்குள் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சிறைக்குள் சசிகலாவைச் சந்தித்தவர்களின் பட்டியலும் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சென்னை அ.தி.மு.க. பிரமுகரின் பெயர் அடிக்கடி இடம்பிடித்துள்ளது. அவர், டி.டி.வி தினகரனின் தீவிர ஆதரவாளர்.

மேலும், பெங்களூரு சிறைக்கு டி.டி.வி.தினகரன் செல்லும்போது, அவருடன் சென்னை அ.தி.மு.க. பிரமுகரும் சென்றுள்ளார். அவர் மூலம்தான் சசிகலா அறைக்கு டிவி, ஃபிரிட்ஜ், ஏ.சி மற்றும் இண்டக்‌ஷன் ஸ்டவ் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சப்ளை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது" என்றனர். 

சென்னை பிரமுகர் யார் என்று விசாரணையில் களமிறங்கினோம். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, அவர்குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்தன. உடனடியாக அவரது இருப்பிடத்துக்கே சென்று விசாரித்தோம். அவர்குறித்த தகவல்களை, பெயரைக் குறிப்பிட விரும்பாத அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் நம்மிடம் பகிர்ந்தார்.

சசிகலா

"திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், அ.தி.மு.க-வில் இருந்தார். திருவேற்காடு பகுதியில் வாடகை சைக்கிள் கடை நடத்திவந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காட்டிலிருந்து சென்னைக்குச் செல்ல போதிய பஸ் வசதியில்லை. இதனால் வாடகை சைக்கிளில்தான் மக்கள் வேலப்பன்சாவடிக்கு வந்து பஸ்சில் செல்வார்கள். இதனால், அந்த அ.தி.மு.க. பிரமுகரின் வாடகை சைக்கிள் பிசினஸ் ஒரளவுக்கு நடந்தது. இந்தச் சமயத்தில், டி.டி.வி.தினகரனின் நட்பு அந்த அ.தி.மு.க. பிரமுகருக்குக் கிடைத்தது. டி.டி.வி.தினகரன், எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு விசுவாசமாக ஓடாய் உழைத்தார் அந்தப் பிரமுகர். இதனால் சீக்கிரத்திலேயே டி.டி.வி. தினகரனின் நம்பிக்கைக்குரியவரானார்.

இதையடுத்து, பெங்களூரில் எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றை அந்தப் பிரமுகர் தொடங்கினார். அதைத் திறந்துவைத்ததே டி.டி.வி.தினகரன்தான். தற்போது, அந்தக் கடையிலிருந்துதான் சசிகலாவுக்குத் தேவையான குளிர்சாதனப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சென்றதாக ரூபாவும், விசாரணை அதிகாரிகளும் சந்தேகிக்கின்றனர். அந்தப் பிரமுகருக்கு சென்னை அண்ணாசாலையிலும் எலெக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது.

வாடகைக்கு சைக்கிள் கடை நடத்திய அந்தப் பிரமுகர், இப்போது பல கோடிகளுக்கு அதிபதி. கட்சியிலும் முக்கியப் பொறுப்பிலிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, டி.டி.வி.தினகரனின் கை ஓங்கியதும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு காயை நகர்த்தினார். ஆனால், அதற்குள் நடந்த அரசியல் மாற்றத்தால் அந்தப் பிரமுகரின் ஆசை நிறைவேறவில்லை" என்றார்.

சென்னை பிரமுகர் குறித்த தகவல்கள் அனைத்தும் பெங்களூரு போலீஸாரால் சேகரிக்கப்பட்டுள்ளதாம். இதனால், விரைவில் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால், அது சசிகலாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறது, உள்விவர வட்டாரங்கள்.

இதற்கிடையில், சசிகலா விவகாரத்தை மூடிமறைக்க, கர்நாடக காங்கிரஸ் கட்சி முயல்வதாக பா.ஜ.க-வினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏனெனில், கர்நாடகாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலா சிறை விவகாரத்தைப் பெரிதுப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாம். சசிகலா விவகாரத்தில், காங்கிரஸ் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் முதல்வர் சித்தராமையா. சசிகலா சிறை விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சசிகலா சிறைச் சலுகை தொடர்பாக வெளியான வீடியோக்கள், புகைப்படங்கள் குறித்து விசாரணைக் குழுவின் அறிக்கைக்குப் பிறகே சிறையில் என்ன நடந்தது என்பது தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!