மண்பாதை பாண்டி பஜார் ஆனது இப்படித்தான்! அங்காடித் தெருவின் கதை -16

தி நகர்

தியாகராயா சாலை' என்று அழைக்கப்படும் பாண்டி பஜார் சாலை, பனகல் பார்க்கில் இருந்து தொடங்கி, தேனாம்பேட்டை சிக்னல் அருகே அண்ணா சாலையில் முடிகிறது. பாண்டி பஜாரின் ஓர் எல்லையில் இருந்து, மற்றோர் எல்லைவரை நடந்துசென்றால், அவ்வளவாகக் களைப்புத் தெரியாது. காரணம், இந்தச் சாலையில் இருபுறமும் வளர்ந்திருக்கும் மரங்கள் தரும் குளுமை நம் சோர்வை நீக்கிவிடும்.

பாண்டி பஜார் பெயர்க் காரணம்...

பாண்டி பஜார் குறித்த வரலாற்றுத் தகவல்களை, நல்லி குப்புசாமி தம்முடைய 'தியாகராய நகர் அன்றும்... இன்றும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். "பாண்டி பஜாரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் அவ்வளவாக இல்லை. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சொக்கலிங்க முதலியார் என்பவர், பாண்டி பஜாரில் இப்போது கீதா கஃபே இருக்கும் இடத்துக்கு அருகில் பத்துக் கடைகள் கொண்ட ஒரு வணிகக் கட்டடத்தை உருவாக்கினார். இந்தக் கட்டடத்துக்கு... அவர், 'பாண்டி பஜார்' என்று பெயர்வைத்தார். இதைக் குறிக்கும் வகையில்தான் பின்னாளில்  தியாகராயர் தெரு முழுவதுமே பாண்டி பஜார் என்று அழைக்கக் காரணமாக இருந்தது.

அப்போது, பாண்டி பஜார் என்ற வணிகக் கட்டடத்தைத் தவிர, பிற பகுதிகள் எல்லாம் வீடுகளாக இருந்தன. பாண்டி பஜார் கட்டடத்தில் உரிமையாளர் சொக்கலிங்க முதலியார், தம்முடைய வணிக வளாகத்திலேயே பாகீரதி ஆயில் மில்ஸ் என்ற கடையை நடத்திவந்தார். சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தார். 

பாண்டி பஜார்

மண்பாதை...

இப்போது கீதா கஃபே இருக்கும் இடத்தில். முன்பு ஓர் உடுப்பி ஹோட்டல் இருந்தது. அதன் எதிரே, பாரத் கேஃப் என்ற ஹோட்டல் இருந்தது. பாண்டி பஜாரில் இருந்து தேனாம்பேட்டை செல்வதற்கு இப்போது உள்ளதுபோல தார் ரோடு முன்பு இல்லை. 85 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி பஜாரில் இருந்து தேனாம்பேட்டை செல்வதற்கு ஒரு மண்பாதைதான் இருந்தது. பாண்டி பஜார் பகுதியில், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது 'BTH டெய்லர்ஸ்' என்ற கடை. 'பெங்களூரு டெய்லரிங் ஹவுஸ்' என்பதைச் சுருக்கமாக BTH என்று அழைத்தனர். இந்தக் கடையின் உரிமையாளரான மூர்த்தி,  அந்தக் காலத்திலேயே வெளிநாட்டுக் கார் ஒன்றைச் சொந்தமாக்க வைத்திருந்தார். கவர்னர் முதல் பல பெரிய அதிகாரிகளுக்குத் துணிகள் தைத்துக் கொடுத்தவர் இவர்.

பாண்டி பஜாரின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது 'நாயுடு ஹால்' நிறுவனம். இதன் உரிமையாளர் எம்.கோவிந்த சாமி நாயுடு முதலில், டெய்லர் கடை வைத்திருந்தார். நாளடைவில் வளர்ச்சியடைந்த அவர், பாண்டி பஜாரில் இப்போது நாயுடு ஹால் இருக்கும் இடத்தில்... முன்பு, 'மகளிர் மட்டும்' என்ற கடையைத் தொடங்கினார். இந்தக் கடையில், மகளிர்களுக்குத் தேவையான உள்ளாடைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிறுவனம்தான் பின்னர், 'நாயுடு ஹால்' என்ற பெயர் மாற்றத்தைப் பெற்றது. பாண்டி பஜாரின் இன்னொரு முக்கியமான அடையாளம், 'ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி'. இரண்டாம் உலகப் போரின்போது, கடற்கரை அருகே இருந்த உயர் நீதிமன்றக் கட்டடத்தின்மீது குண்டு வீசலாம் என்று அச்சம் இருந்தது. இதனால், உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இந்தப் பள்ளியில் செயல்பட்டது" என்று அந்த நூலில் கூறியுள்ளார் நல்லி குப்புசாமி.  

பாண்டி பஜாரின் பழைய அடையாளங்களாக இருந்தவற்றில், ராஜகுமாரி திரையரங்கமும் ஒன்று. இது, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் இருந்தது. இதன் உரிமையாளராகப் பழம்பெரும் நடிகை டி.ஆர்.ராஜகுமாரி இருந்தார். அந்தக் காலத்தில், ஆங்கிலத் திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்கமாக ராஜகுமாரி இருந்தது. நகரின் பல இடங்களில் இருந்து ராஜகுமாரி திரையரங்குக்குப் படம் பார்க்க வருவார்கள். 

சினிமா பிரபலங்களின் திரையரங்குகள்...

நடிகர் சிவகுமார் இதுபற்றி ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். ''நான், சென்னைக்கு வந்த காலத்தில் புதுப்பேட்டையில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அங்கிருந்து கிளம்பிவந்து ராஜகுமாரி திரையரங்கில் Horror of Dracula' , ‘House of Wax' ஆகிய திரைப்படங்களை பார்த்திருக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார். 

இந்தத் திரையரங்கம், தற்போது மெகா மார்ட் கடையாக மாறிவிட்டது. அதேபோல, ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளிக்கு எதிரே நாகேஷ் திரையரங்கம் இருந்தது. இது, நகைச்சுவை நடிகர் நாகேஷுக்குச் சொந்தமானதாக இருந்தது. இதை, 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் திறந்துவைத்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியான பல புதிய திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டன. 1995-க்குப் பிறகு தொலைக்காட்சி ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, திரையரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. தவிர, நாகேஷ் திரையரங்கைவிடப் பல நவீன திரையரங்குகள் சென்னைக்கு வரத் தொடங்கின. எனவே, நாகேஷ் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. இதனால், நாகேஷ் குடும்பத்தினர், அந்தத் திரையரங்கை விற்றுவிட்டனர். அதை வாங்கியவர்கள், அங்கு திருமண மண்டபம் கட்டியுள்ளனர். எனினும், பாண்டி பஜாரில் அந்த இடத்தைக் குறிப்பிடுவதற்கு இன்றும்கூடப் பலர், 'நாகேஷ் திரையரங்கம்' என்றுதான் குறிப்பிடுகின்றனர். 

இன்றைக்குப் பாண்டி பஜார் தெரு, நகரின் நெரிசல்மிக்க பகுதியாக மாறிவிட்டது. பிளாட்ஃபாரங்களில் கடை வைத்திருந்தவர்களுக்காகத் தனியாக ஒரு வணிக வளாகம் கட்டித் தரப்பட்டிருக்கிறது. பிளாட்ஃபாரங்கள் எல்லாம் இப்போது வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டன. மக்கள் சாலையில் நடப்பதால், எப்போதும் நெரிசல்மிக்க பகுதியாகவே பாண்டி பஜார் இருக்கிறது. 

தி.நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியில் படித்தவர்கள் இன்று பிரபலங்களாக உயர்ந்திருக்கின்றனர். அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!