வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (25/07/2017)

கடைசி தொடர்பு:11:00 (25/07/2017)

“ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்கள்... எம்.ஜி.ஆரால் நேசிக்கப்பட்டவர்கள்!” சசிகலாவின் பிக் பாஸ் பிளான்

சசிகலா

“எதிர்காலத்தில் உங்களது வாரிசு யார்” என 80 களின் மத்தியில் ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்டபோது, “என்னைப் பின்பற்றுபவர்கள் எல்லாரும் என் வாரிசுகள்தான்” என்றார். கட்சியில் தனக்குப்பின் யார் என அறிவிக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான விஷயத்தை அவர் கைக்கொள்ளவில்லை. அதேசமயம் தனக்குப்பின் தன் கட்சி ஒரு பெரும் பிரளயத்தை சந்திக்கும் என்ற தீர்க்கதரிசனமும் அவருக்கு இருந்தது. அதனாலேயே தன் உயிலில் “ஒருவேளை என் காலத்திற்குப்பின் கட்சி பிளவுபட்டால்....” என அவநம்பிக்கையாக எழுதினார். துரதிஷ்டவசமாக அதுவே நிகழ்ந்தது. மிக மோசமான பிளவுக்குப்பின் அதிமுக ஜெயலலிதாவின் கைக்கு வந்தது. எம்.ஜி.ஆரால் எந்தக்காலத்திலும் வாரிசு என அறிவிக்கப்படாத ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் இடத்தை அடுத்த ஒருதலைமுறைக்கு அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் இட்டு நிரப்பினார். 

இப்போது போலவே எம்.ஜி.ஆர் மறைவின்போதும் அதிமுக மோசமான ஒரு பிளவை சந்திக்கநேர்ந்தது என்றாலும் கட்சியில் போனவர்கள் வந்தவர்கள் எல்லாம் போட்டியாளர்களாக அப்போது களத்தில் நிற்கவில்லை. மக்கள் ஆதரவுப் பெற்றிருந்த ஜெயலலிதா, கட்டுக்கோப்பான ஒரு அமைப்பாக அதிமுக உருப்பெற காரணமான முன்னோடிகளில் ஒருவரான ஆர்.எம்.வீ என இருவர்தான் நியாயமான ஓர் அரசியல் ஆடுகளத்தை அமைத்துக்கொண்டனர். பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஜெயலலிதா இதில் வென்றார். 

ஆனால் அதிமுகவில் இன்றைய பிளவு, கட்சியின் அடித்தட்டு மக்களின் ஆதரவு பெற்றிராதவர்களுக்கிடையே உருவாகியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததற்காக கட்சியையே காவு கேட்டு நிற்கிறது சசிகலா அணி. 3 முறை முதல்வராக இருந்தும் மக்களின் அபிமானத்தைப் பெற்றிராத ஓ.பி.எஸ் தன்னை ஜெயலலிதவின் இடத்திற்கு மாற்றாக முன்வைக்கிறார். பல்கலைக்கழக மண்டபத்தை பதவியேற்புக்குத் தயார் செய்துவைத்த சசிகலா எதிர்பாராதவிதமாக சிறைசென்றதால் தற்காலிக முதல்வராக அமரவைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தன் வழி தனிவழி என ஒருபடி மேலே சென்று எம்.ஜி.ஆருக்கும் தானே மாற்று என்பதுபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

அதிகார ஆசையை மட்டுமே கண்களில் ஒளிர விட்டுக்கொண்டிருக்கிற இவர்களுக்கு, அந்த அதிகாரத்தை கட்சி எட்டிப்பிடிக்க காரணமான இரட்டை இலைச்சின்னம் இந்த இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயிருப்பதைப்பற்றி துளியும் கவலையில்லை.

எம்.ஜி.ஆர்

அரசியல் அதிகாரம் இவர்களுக்கு பெரும் பேராசைகளைத் தந்திருக்கிறது. ஓ.பி.எஸ்ஸை நம்பி ஏமாந்த மோடிக்கு எடப்பாடி இப்போது பெரும் ஆறுதலாக இருக்கிறார். ஜெயலலிதா எதிர்த்த ஜி.எஸ்.டிக்கு சிரித்தபடியே பச்சைக்கொடி காட்டினார் எடப்பாடி. சொற்ப எண்ணிக்கையில் எம்.எல்.ஏக-க்களை கொண்ட ஓ.பி.எஸ், மாநிலத்தை ஆள்கிற அளவுக்கு எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் எடப்பாடியை முந்திக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு தன் ஆதரவை அறிவிக்கிறார். நேற்றுவரை அம்மாவுக்கு காட்டிய பவ்யத்தை அப்படியே மோடியிடம் தொடர்கின்றனர் இருவரும். அதிகார போதை இவர்களை ஆட்டிப்படைக்கிறது. மண்ணுக்கும் கீழே சென்று என்னதான் இருவரும் குனிந்து வால் ஆட்டினாலும் பாராளுமன்றத்தில் பலம் காட்ட எடப்பாடியின் தோழமையே உகந்தது என்பதால் ஓ.பி.எஸ்ஸை இப்போதைக்கு காத்திருப்பு பட்டியலில்தான் வைத்திருக்கிறார் மோடி.  தன்னைப்போன்றே உள்ளுர் அரசியலைத் தவிர்த்து கார்ப்பொரேட் முதலாளிகளிடம் நெருக்கம் காட்டும் எடப்பாடியை இன்னும் அதிகமாக பிடித்திருக்கிறது மோடிக்கு. அது பளபளப்பாக பத்திரிகைகளில் வருவதால் ஆறுகுட்டிகள் ஆட்டுக்குட்டிகள்போல் தாவிச்செல்கிறார்கள். மோடியின் ஆதரவு தந்த உற்சாகத்தால் எடப்பாடி அணிக்கு இன்னும் பல ஆட்டுக்குட்டிகள் தாவலாம் என்பதே இன்றைய நிலை. 

இவர்கள் இப்படியென்றால் சசிகலாவின் நிலை கவலைக்கிடமானது. பொதுச் செயலாளர் பதவியை ஏற்று கட்சியையும் தங்களையும் காக்கவேண்டும் என தன்னிடம் போயஸ் கார்டனுக்கு வந்து கிளிப்பிள்ளை போல அன்று 'கெஞ்சியவர்கள்' இன்று அரியணையில் அமர்ந்து அரசாணை பிறப்பித்துக்கொண்டிருக்க, தான் பத்துக்குப் பத்து அறையில்தான்  சிறைக்கைதி உடையில் உலாவுவது சசிகலாவை பாடாய் படுத்திவருகிறது. 

“எதற்கும் ஒரு பொறுமை உண்டு” என ஏதோ கோபத்தில் தான் சொன்ன ஒரு வார்த்தை தன்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தும் எனத் தெரிந்திருந்தால், கவர்னர் சந்திப்புக்கு இன்னும் சிலநாள்கள் பொறுமை காத்திருந்திருப்பார் சசிகலா. ஆனால் இனி அதை திரும்பப் பெற வாய்ப்பில்லை.  நடப்பு அரசியலைப் பார்த்துக்கொண்டிருக்கிற அவர், மோடியோடு இனி 'நட்பு அரசியல்' சாத்தியமில்லை என்பதையும் புரிந்துகொண்டுவிட்டார் என்கிறார்கள். எடப்பாடியை எதிர்த்துக்கொண்டு, ஓ.பி.எஸ்ஸிடம் தொடைதட்டிக்கொண்டு இருப்பதையும் இழப்பதைவிட சாமர்த்தியமாக சிலவற்றை செய்து கட்சியைக் கைப்பற்ற நினைக்கிறது சசிகலா அணி. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிகாரத்தை அடைய நினைத்த சசிகலாவின் ஆசை இயல்பாக எழுந்த ஒன்று. எதிர்ப்பில்லாமல் தேடிவருவதை புறக்கணிப்பானேன் என நினைத்தார். ஆனால் இன்று அதிகாரங்களின்றி சிறையில் தள்ளப்பட்டப்பிறகு அந்த ஆசை வெறியாக மாறியிருக்கிறது. நம்பிக்கை துரோகிகளை அரசியல் ரீதியாகப் பழிவாங்கவிரும்புகிறார். 

எடப்பாடி பழனிசாமி

சொத்துக் குவிப்பில் தீர்ப்பு வெளியாகி மறுதினம் சிறைக்குச் செல்லும் முன் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று தரை அதிர 3 முறை சத்தியம் செய்துவிட்டே கிளம்பினார் சசிகலா. அதன்படி தன் சத்தியத்தை நிறைவேற்றுவதற்கான வேலைகளைச் சிறையில் இருந்தே தொடங்கிவிட்டார்  என்கிறார்கள். 

அதாவது அதிகாரப் போட்டியை கொஞ்சநாள் தள்ளிவைத்துவிட்டு அமைப்பு ரீதியாக கட்சியில் தன்னை முக்கியத்துவப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்க அவர் முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதிமுகவில் இப்போது பொறுப்புகளில் உள்ளவர்களில் 60 சதவீத பேர் தன் அனுதாபிகளாக இருந்தாலும் அதை முழுமையாக்கி தன் சத்தியங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். 

கட்சியில் தனக்கு எதிராக சிறு எதிர்ப்புக்குரலும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மறைந்த ஜெயலலிதாவின் பாணி. சிறு பொறியை அனுமதித்தால் அது கட்சியின் கட்டுப்பாட்டை எரித்துவிடும் என்பதில் மிக கவனமாக இருந்தவர் ஜெயலலிதா. இந்த எச்சரிக்கை உணர்வுக்கு தன் ஆரம்ப கால அரசியல் வளர்ச்சிக்கு உதவியவர்களைக் கூட கொஞ்சமும் கருணையின்றி பலிகொடுத்துண்டு அவர். இறுதிவரை அவர் கட்சியில் எதிர்ப்பின்றி இருக்கமுடிந்ததற்கு அதுவே காரணம். சசிகலா இப்போது கையில் எடுத்திருக்கும் அஸ்திரம் அதுதான். கட்சியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் அதிகாரப்போட்டி குறித்து கவனிக்கலாம் என்ற சிறைச்சாலை சிந்தனை அவருக்குள் எழுந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக தன்னை வந்து சந்திக்கும் நபர்களிடம் அதுகுறித்துத்தான் அவர் அதிகம் பேசிவருகிறார் என்கிறார்கள். அதாவது கட்சி முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் ஆட்சி அதிகாரங்களை எளிதில் எட்டிப்பிடித்துவிடலாம் என்பது அவர் கணக்கு. 

இதற்காக அவர் மனதில் உதித்த யோசனைதான் பழைய அதிமுகவினரை ஒருங்கிணைப்பது!... கட்சியில் எம்.ஜி.ஆர் காலத்தில் அரசியல்செய்து அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்தபின் ஒதுக்கப்பட்டவர்கள், திடீர் அதிர்ஸ்டத்தில் அரசியலில் வளர்ந்த ஜூனியர்களால் விரக்தியடைந்து ஒதுங்கியிருப்பவர்கள், எம்.ஜி.ஆர் காலத்து எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் இப்போதுள்ள எடப்பாடி அணியினரின் எதிர்ப்பாளர்கள், கட்சியின் பிளவுபட்டதால் ஏற்பட்ட விரக்தியால் எந்த அணியிலும் இல்லாமல் ஒதுங்கியிருப்பவர்கள் என இப்படி ஒரு பட்டியலை தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம் சசிகலா. குறிப்பாக இதில் ஜெயலலிதா காலத்தில் கட்சியில் கோலோச்சி பின்னர் ஏதொவொரு காரணத்தினால் ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்டவர்களை குறிவைப்பது முக்கியத் திட்டம். மாவட்டத்தில் இன்னமும் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் இவர்களை முழுக்க முழுக்க தங்கள் ஆதரவாளர்களாக மாற்றினால் அவர்கள் இப்போதுள்ள எடப்பாடி அணிக்கு சரியாக போட்டியாக விளங்குவார்கள் என கணக்கு போடுகிறது சசி தரப்பு.

கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக இல்லையென்றாலும் பேருக்கு ஏதோவொரு வெளியே தெரியாத பொறுப்பில் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு தரப்பையும் சந்தித்துப் பேசி அவர்களை தங்களின் ஆதரவாளர்களாக மாற்றுவது சசியின் திட்டம். முதற்கட்டமாக பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு வலுக்கொடுத்து அவர்களை மீண்டும் கட்சியில் தீவிரமாக இயங்கச்செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர் சசிகலா தரப்பினர். இதற்கென மாவட்டத்திற்கு ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அவரவர்கள் தங்கள் பகுதியில் கட்சியின் சசிகலா ஆதரவு முழக்கத்துடன் தங்களை மீண்டும் செல்வாக்குடன் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கான பணி. 

சசிகலா

சசிகலாவின் தண்டனைக்காலம் முடிவதற்குள் இவர்களில் பலர் செயற்குழு பொதுக்குழு மற்றும் கட்சியின் பல மட்டங்களிலும் விரவிட வேண்டும் என்பது இவர்களுக்கு அளிக்கப்பட இருக்கும் அசைன்மென்ட்.  இப்படிப் பல மட்டங்களிலும் சக்தி மிக்கவர்களாக இவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டால், தண்டனைக்காலத்திற்கு முன்பாகவே சீராய்வு மனுமூலம் தண்டனைக்காலம் கணிசமாக குறைக்கப்படலாம் என்பதில் உறுதியாக இருக்கும் சசிகலா தரப்பு அப்படி விடுதலை அடையும்போது கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எடுக்கும் முயற்சிகளுக்கு இந்த ஆதரவாளர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது என்ற கணக்கோடு இருக்கிறாராம். 

இப்படி பழைய ஆதரவாளர்களை திரட்டும் முயற்சிகளுக்கு வழக்கமான கட்சிப்பிரமுகர்கள் வேண்டாம் என்பதும் சசியின் உத்தரவாம். தன் நெருங்கிய நட்புவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அல்லாதவர்களைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்பது சசிதரப்பின் திட்டம். முதற்கட்டமாக எம்.ஜி.ஆர் காலத்து பழைய எம்.எல்.ஏ-க்கள் ஃபைலோடு மாவட்டங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளது இந்தக் குழு. 

“அம்மா உங்களைப்போன்றவர்களைத்தான் நம்புறாங்க...சில நம்பிக்கை துரோகிகள் சின்னம்மாவுக்குத் துரோகம் செஞ்சிட்டாங்க. எப்படியும் ஓரிரு வருடங்களுக்குள் திரும்பவந்திடுவாங்க...வந்தாங்கன்னா உங்களைப்போன்றவங்கதான் கட்சியில் அடுத்தடுத்து தலைவர்களா இருப்பீங்க...துரோகிகளை ஒழிக்க உங்களைப்போன்றவங்க சின்னம்மாவுக்குத் துணை இருக்கணும். திரும்பவும் நீங்க கட்சியில இறங்கி வேலை செய்யனும். பர்ஸனலா சின்னம்மா இதை உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க...” இப்படி நெகிழ்வாகப் பேசி மனதை மாற்ற முயற்சிக்கிறார்களாம் இவர்கள். 

பிக் பாஸ் ஆக நினைக்கும் சசிகலாவின் திட்டம் பலிக்குமா?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்