யார் மீது பாய வேண்டும் சட்டம்..? - எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்!

எடப்பாடி பழனிசாமி, வளர்மதி, குபேரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நின்றுகொண்டு, ''தமிழகத்தில் போராட்டத்தைத் தூண்டுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்... குண்டாஸ் பாயும்'' என்கிறார். மக்கள் நல அரசிலிருந்து... போலீஸ் அரசாக (Police State) மாறிய அரசிடமிருந்து... அதை வழிநடத்தும் முதல்வரிடமிருந்து வேறு என்ன வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும்...? மக்கள் நலத் திட்டங்களால் அல்லாமல் அடக்குமுறையால் அரசை வெற்றிகரமாக நடத்திவிட முடியும் என்று நம்பும் திரிவாணியில் மூழ்கி முத்தெடுக்கும் ஒரு முதல்வரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்..?   

யார்மீது பாய வேண்டும் சட்டம்?

எடப்பாடி பழனிசாமி''போராட்டத்தைத் தூண்டுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார் முதல்வர். வரவேற்கிறோம். இரண்டு நாள்களுக்குமுன், “நீட் மசோதா எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு...” சர்வசாதாரணமாக எந்த அக்கறையும் இல்லாமல், ''அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை'' என்று பதிலளித்து இருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். நீங்கள் அமைச்சராக இருந்த அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா... அதையே மதிக்காமல், ''எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை...'' என்று போகிறபோக்கில் அவர் பதிலளித்துச் செல்கிறார். நமது சட்டமன்றம்... நமது அமைச்சர்கள் அனுப்பிய மசோதாவுக்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள் என்று நம் மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது, உங்களது மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.  

உண்மையில். நீங்கள் போராட்டத்தைத் தூண்டுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருப்பீர்களாயின், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது நமது சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மதிக்காத மத்திய அரசின் மீதும், அலட்சியப் பதில் அளித்த அமைச்சர் மீதும்தான். ஆனால், உங்கள் அகராதியில் உங்கள் மாண்பைக் காக்கப் போராடுபவர்கள்தானே குற்றவாளிகள். அய்யோ... மன்னிக்கவும். அகராதி என்றால் இந்த அரசுக்கு நடுக்கம்தானே...? 

 

இவர்களைத்தான் காக்க நினைக்கிறீர்கள்!

தமிழினம் வஞ்சிக்கப்படும் போதெல்லாம் முன்வரிசையில் வந்து நிற்கும் ஆய்வு மாணவன் குபேரன் போராட்டத்தைத் தூண்டிவிடப் பார்த்தார். அதனால், துரத்தி வளைத்துப் பிடித்து கைதுசெய்தோம் என்று முதல் தகவல் அறிக்கையை வரிக்குவரி உங்கள் கற்பனை வளத்தால் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறீர்கள். ஹூம்... நீங்கள் எண்ணெய் நிறுவனத்தின்மீது எந்த மாசும் படிந்துவிடாமல் காக்கப் பார்க்கிறீர்கள். மாசு ஏற்படுத்திவிடுவார் என்று நீங்கள் அஞ்சும் நபரைக் கைதுசெய்கிறீர்கள். ஆனால், நீங்கள் யாரைக் காக்க நினைக்கிறீர்களோ... அவர்கள் உங்கள் அரசுக்கு என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா...?  

அண்மையில், ஓ.என்.ஜி.சி தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ள ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அதில், “நிலத்தடி நீர் மாசடைந்துவிட்டதாக மக்கள் கூறுகிறார்களே... தண்ணீர் குறித்து நீங்கள் ஏதாவது ஆய்வு நடத்தினீர்களா...'' என்ற கேள்விக்கு அந்த அதிகாரிகள், “இதற்குத் தமிழக அரசுதான் பதிலளிக்க வேண்டும். அவர்கள்தான் ஆய்வு நடத்த வேண்டும். அது குடிநீர் வடிகால் வாரியத்தின் வேலை” என்று தீபாதனமாகப் பதிலளிக்கிறார்கள். நீங்கள் யாரைக் காக்க நினைக்கிறீர்களோ... அவர்கள் உங்களைக் கைவிட அல்லது உங்களைக் காட்டிக் கொடுக்கக் கொஞ்சம்கூட அஞ்சவில்லை. இதுவெல்லாம் உங்களுக்கும் தெரியும். ஆனால், உங்களுக்கு மக்களைவிட நிறுவனங்கள்தான் முக்கியம். மக்களின் நலனைவிட நிறுவனங்களின் வளர்ச்சிதான் முக்கியம். கதிராமங்கலத்தில் போராட்டம் தொடங்கிய ஜூன் மாதத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அதிகாரி வெளிப்படையாகவே, “எண்ணெய் எடுப்பது உங்கள் அச்சமாக இருந்தால்... நீங்கள் ஊரைவிட்டுச் செல்லுங்கள்” என்றிருக்கிறார். இதற்குப் பிறகுதான் அங்கே போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. உண்மையில், நீங்கள் போராட்டத்தைத் தூண்டுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க நினைப்பீர்களாயின்... நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்த அதிகாரி மீதுதான்... குபேரன்மீதும்... வளர்மதிமீதும் அல்ல!

அடக்குமுறை அரசுகள் வீழும்!

குபேரன்''சூழ்நிலை நாம் வார்த்தைகளைக் கோரும்போது... களத்துக்கு அழைக்கும்போது மெளனமாக இருப்பதைவிட ஒரு பெருங்குற்றம் ஒன்றும் இல்லை'' என்பார் காந்தி. கதிராமங்கலம் தங்கள் நிலத்தை மாசாக்குகிறது என்று அந்த மக்கள் நினைத்தார்கள்... அதனால், அவர்கள் போராடினார்கள். அந்தப் போராட்டச் சூழ்நிலை குபேரனிடமிருந்து வார்த்தைகளைக் கோரியது. அதனால், முகநூலில் அந்த மக்களுக்கு ஆதரவாகக் குபேரன் பதிவிட்டார். அந்தச் சூழ்நிலை வளர்மதியைக் களத்துக்கு அழைத்தது. அதனால், சைக்கிள் பயணம் செல்லத் திட்டமிட்டார். காந்தி வேண்டுகோளுக்கு இணங்க, இவர்கள் சூழ்நிலை வார்த்தைகளைக் கோரியபோது... களத்துக்கு அழைத்தபோது அங்கே சென்றிருக்கிறார்கள். ஆனால், உரையாடலை விரும்பாத, மக்கள் நலனை விரும்பாத அரசு பிரச்னைகளைத் தட்டையாகப் புரிந்துகொண்டு இவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

உண்மையாக, அரசு மக்கள் நலனை விரும்பி இருப்பார்களாயின், இவர்களுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தியிருக்க வேண்டும். இவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்று அறிந்து ஆய்ந்து அந்த பிரச்னைகளைக் களைய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் வெறும் காவலர்களைக் கொண்டே மக்களை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால், வரலாறு இந்த ஆட்சியை மிகமோசமாகத்தான் குறிப்பெடுத்துக்கொள்ளும். வரலாறுகளைப் பற்றி வேண்டுமானால், எடப்பாடியார் கவலைகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், போலீஸைக் கொண்டுமட்டும் நடைபெற்ற ஆட்சிகளின் முடிவுகள் எவ்வாறானதாக இருந்திருக்கிறது... எப்படி மோசமாக வீழ்ந்திருக்கிறது என்பதையாவது எடப்பாடியார் படிக்க வேண்டும். புரிந்துகொண்டு அதன்படி ஆட்சி நடத்த வேண்டும். அதுதான், ‘யாவருக்கும் நலன்’!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!