வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (25/07/2017)

கடைசி தொடர்பு:19:51 (25/07/2017)

தக்காளி விலையேறிக்கொண்டே போக இதுதான் காரணமா?

தக்காளி

ஜாபர்கான்பேட்டை பெரியார் தெருவில் ஒரு மளிகை கடைக்குள் நுழைந்து, ''அண்ணே... ஒரு கிலோ தக்காளி'' என்றதுதான், சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். "அட, ஒண்ணுமில்லைங்க தம்பி. தக்காளி விக்கிற விலையில ஒரு கிலோ கேட்குறீங்களே? அதான், லட்சாதிபதியா இருப்பீங்களோனு பாக்குறாக" என வேடிக்கையாகப் பேசினார் மளிகைக் கடை உரிமையாளர் லக்ஷ்மணன். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை. இல்லை... இல்லை இந்தியாவின் நிலையும்கூட. ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்றுவந்த தக்காளி, கடந்த 20 நாள்களாக ரூபாய் 100, 120 என மெட்ரோ ரயில் வேகத்தில் பறக்கிறது. இடையிடையே 80, 70 ரூபாய் எனக் குறைந்தாலும், ஒருசில மணி நேரத்தில் மீண்டும் யானை விலை, குதிரை விலைக்கு ஏறிவிடுகிறது. 

கொள்ளைப்போகும் தக்காளி :

மும்பையில் ஒருசில நாள்களுக்கு முன்பு, தகிசார் என்ற காய்கறிச் சந்தையில் கொள்ளையர்கள் புகுந்து, 30 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தக்காளியைக் கடத்திச் சென்று போயுள்ளனர். உளவுப்பிரிவில் இருந்து அத்தனை பிரிவு போலீஸும், வலைவீசித் தேடியும் இதுவரை கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் அன்றைய நாள் மதிப்பு மட்டும் 70 ஆயிரம் ரூபாய் என்கின்றனர் தக்காளி மண்டிச் சங்கத்தினர். பதுக்கிவைத்து விற்கப்படுவதால் அது, லட்சங்களைக் கடக்கலாம் என்பது கணிப்பு. மும்பை கொள்ளை தாக்கமோ என்னமோ, மத்தியப் பிரதேசம் இந்தூரில் காய்கறிச் சந்தையில் தக்காளி பெட்டிகளுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகில இந்தியாவும் தக்காளி விலையேற்றத்தால் தடுமாறிக்கொண்டிருக்கிறது."இந்தியா என்பது பன்மைத்துவம் கொண்ட நாடு. ஆனால் ஒரே வரி, ஒரே மொழி என ஒரே தன்மையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று பி.ஜே.பி துடித்துக்கொண்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி-யால்கூட இணைக்க முடியாத ஒற்றைத்தன்மையை இன்று விலைவாசி இணைத்துள்ளது" என வேடிக்கையாகக் கூறினார் கோயம்பேடு மார்க்கெட்டில் தென்பட்ட கம்யூனிஸ்ட் சங்கத்தின் லெனின். "அட, எப்ப பாரு... எங்களைக் குறை சொல்றதே உங்க பொழப்பா போச்சு. இயற்கை காரணங்களாலதான் தட்டுப்பாடு. விலைவாசியைக் குறைக்க முயற்சி செஞ்சிக்கிட்டுத்தான் அரசு இருக்கிறது" என்றார், லெனின் நண்பராக இருக்கும் பி.ஜே.பி ஆதரவாளர் ஸ்ரீதர்.

தக்காளி

விலையேறக் காரணமென்ன?

அவர்கள் கட்சி அரசியல் விவாதங்களில் இருந்து மெல்ல விலகி... கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வுச் சங்க செயலாளர் அப்துல் காதரைச் சந்தித்து, "அண்ணே... தக்காளி விலை குறையாம இருக்கக் காரணமென்ன" என்றோம். "ஒருநாளைக்குச் சுமார் 80 லோடு வரைக்கும் தக்காளி வரும். ஒரு லோடுல தோராயமா 400 பெட்டிங்க இருக்கும். ஒரு பெட்டிக்கு 15 கிலோனா, ஒரு லோடுக்கு  6 டன்(6,000 கிலோ). அப்போ, 80 லோடுக்கு 480 டன் தக்காளி வரும். ஆனா, கடந்த 20 நாளா 20 லோடுதான் அதாவது, 120 டன் தக்காளிதான் வருது. அதான் விலையேறியிருக்கு. இதான்  சென்னை கோயம்பேடு நிலைமை. இதுதான் மத்த மாவட்ட நிலைமையும். வறட்சி ஒரு முக்கியக் காரணம்னா, விதைச்ச சில தோட்டங்கள்ல அறுவடை செய்ற நேரத்துல பாத்து, இந்த மாசத்துல பேஞ்ச நல்ல மழை ஒரு காரணம். அதனால, செடி எல்லாம் அழிஞ்சு போய்டுச்சு. தக்காளியில இருந்து சாம்பார் வெங்காயம்வரை பல காய்கறிங்களும் தட்டுப்பாடு ஆகி விலையும் ஏறிடுச்சு. அதே நேரம் வட நாட்டு வியாபாரிங்க, நேரடியா காய்கறி தோட்டம் வைத்திருப்பவங்களைச் சந்திச்சு, மொத்தமா வட நாட்டுக்குக் காய்கறிகளை வாங்கிட்டுப் போறாங்க. இதனாலதான் நம்ம தமிழ்நாட்டுக்குக் கூடுதலா தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படுது" என்றார் இயல்பான மொழியில் அழுத்தமாக.

வடக்கினால் தெற்கில் தட்டுப்பாடா?

இதுகுறித்து வேளாண்மைத் துறை சார்ந்த ஒரு முக்கிய அதிகாரி, "உலக அளவில் சீனா ஆண்டுக்கு 33,911,702 டன் தக்காளி உற்பத்தி செய்து முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாமிடத்திலும், இந்தியா 10,965,355 டன் உற்பத்தி செய்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. வைட்டமின் சி உள்ளிட்ட இம்முனிட்டி (immunity) அதிகரிக்கச் செய்யும் சத்துகள் தக்காளியில் மிகுதியாக உள்ளது. இதனால், வட நாட்டில் வாழும் வணிகச் சமூகங்கள், தக்காளியை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. எனவே, அவர்களின் நுகர்வுக்காக நமது கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் விளையும் நாட்டுத் தக்காளியை நேரடியாகக் கொள்முதல் செய்து, கொண்டுசெல்கிறார்கள் வட நாட்டுப் பெரு வணிகர்கள். தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகள் தட்டுப்பாடு அடைய இது ஒரு முக்கியக் காரணமென்றால், மற்றொன்று தமிழ்நாட்டில் விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. பெருகிவரும் நகரமயமாக்கல், விவசாய உற்பத்தியைக் குறைப்பதும், தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்கு ஒரு காரணமாகிறது" என்றார்.

தக்காளி

தக்காளி திருவிழா காரணமா?

''தமிழ்நாட்டில் தட்டுப்பாடுக்கு இது ஓரளவு காரணம் என்றால், அகில இந்தியளவில் தட்டுப்பாடு ஏற்பட, காய்கறிகள்  அதிக அளவில்  ஏற்றுமதி செய்யப்படுவது முதன்மை காரணமாக இருக்கிறது'' என்கிறார்கள் அதே காய்கறி மண்டியைச் சேர்ந்தவர்கள். "ஆண்டுதோறும் சுமார் ஏழு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் ஏற்றுமதி ஆகின்றன. இதில், தக்காளியும் அடக்கம். வழக்கமாக ஆகஸ்ட் விக்ரமராஜா மாதத்தில் ஸ்பெயின் நாட்டில் அவர்கள் கலாசாரத் திருவிழாவான 'தக்காளி திருவிழா' நடக்கும். இதற்கு, சுமார் ஒன்றரை லட்சம் கிலோ தக்காளி பயன்படுத்தப்படும். மேலும், இதற்காகக் கணிசமான அளவில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதி ஆவது தக்காளி விலையேற்றத்துக்கு ஒரு காரணம். கடந்த ஆண்டும் இதே ஜூலை மாதத்தில் தக்காளி விலை கடுமையாக ஏற்றமடைந்திருந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்றனர். அதேநேரம், "தக்காளி விலையேற்றத்துக்கு நிச்சயமாக இது காரணமல்ல. ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருள்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அங்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட உணவுப் பண்டங்களைத் தீண்டுவதில்லை. இந்தியாவில் பயிர் செய்யும் காய்கறிகளில் பூச்சு மருந்து அடிக்கப்படாத காய்கறிகள் ஏதேனும் உண்டா... சொல்லுங்கள்" என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

தக்காளி தட்டுப்பாடு தீருமா... விலைவாசி குறையுமா?

''சரி, எப்பதான் இந்தப் பிரச்னை தீரும்'' என்று வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம். "பொதுவாக, நாம் தக்காளி ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால், ஸ்பெயினுக்கு ஏற்றுமதி ஆகவில்லை. இந்தமுறை ஏற்றுமதி பெரிய அளவில் இல்லை. பயிர்கள், மழையினால் பாதிக்கப்பட்டதாலேயே தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போதுதான் மீண்டும் செடி நட்டு, உற்பத்திகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, விலை சீராக இன்னும் 20 முதல் 30 நாள்கள் ஆகலாம்" என்றார்.

தக்காளி தட்டுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்