Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

காவிரி ஆறு... கரை முதல் கடல் வரை விஷமாக்கிய தமிழக அரசு நிறுவனம்! #SaveCauvery #SaveEnnoreCreek #VikatanExclusive

காவிரி

ண்மைக்காலமாகச் சூழலியல் சார்ந்து யார் செயல்பட்டாலும்... மண்ணைக் காக்க, மக்களைக் காக்க யார் களத்துக்கு வந்தாலும்... அவர்களைத் தேச விரோதிகளாகச் சித்திரிக்கும் செயல் மிகநுட்பமாக நடந்தேறிவருகிறது. 'இந்தத் திட்டம் வேண்டாம்... இது, எங்களை... எங்கள் பகுதி சூழலியலைக் கெடுக்கும்' என்று யாராவது வாதத்தை முன்வைத்தால்... “உனக்கு அறிவியல் தெரியுமா... நீ என்ன அரசைவிட, அரசு அதிகாரிகளைவிட மெத்த படித்த மேதாவியா... நீ வளர்ச்சிக்கு எதிரானவன்; நீ தேச விரோதி” என்று செயற்பாட்டாளர்கள்மீது முத்திரை குத்தும் செயலை அரசும் பெரு நிறுவனங்களும் வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகின்றன.  

“சரி... அரசு அதிகாரிகளும், அவர்களுக்கு எப்போதும் முட்டுக்கொடுப்பவர்களும் சொல்வதுதான் சரியா? அரசு என்ற அமைப்பால், அது தாங்கிப் பிடிக்கும் பெருநிறுவனங்களால் சூழலியலுக்கு எந்தக் கேடும் இல்லையா... உண்மையில், மக்கள்தான் தேவையில்லாமல் அஞ்சுகிறார்களா... தேவையில்லாமல் போராடிக்கொண்டு இருக்கிறார்களா...” என்று நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குப் பொட்டில் அடித்தாற்போன்று பதில் தருகிறது இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த 141 பக்க அறிக்கையில், 83-வது பக்கத்திலிருந்து 98-வது பக்கம்வரை அரசு நிறுவனமான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தவறுகளை... அது, எந்த அளவுக்குச் சட்டத்தை மதிக்காமல் சூழலியலை மாசாக்கியிருக்கிறது, சாமான்ய மக்கள்மீது எந்தக் கவலையும் இல்லாமல் எப்படிக் கழிவுநீரைக் கடலிலும்... நீர்நிலைகளிலும் கலக்கச் செய்திருக்கிறது என்று தரவுகளுடன் பட்டியலிட்டிருக்கிறது. 

“காவிரிமுதல் கடல்வரை!”

எண்ணூர்

'காவிரியில், கர்நாடகா கழிவுநீரை விடுகிறது; ஆற்றை மாசுபடுத்துகிறது' என்கிறது நம் அரசு. அதன் வார்த்தைகளும் வாதங்களும் சிலிர்க்கத்தான் வைக்கின்றன. தமிழக அரசுக்குத் தமிழ்க் குடிகள்மீது இவ்வளவு அக்கறையா... என்று நம் அரசை மெச்ச நினைத்தால்... அதற்கெல்லாம் தேவையே இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆம், காவிரியில் கர்நாடகா மட்டும்தான் கழிவுநீரை விடுமா...? காவிரியில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது, நாங்களும் கழிவுநீரை விடுவோம் என்று சுத்திகரிக்கப்படாத மின்கழிவுகளை மேட்டூரில் கலக்கச் செய்திருக்கிறது ‘மக்கள் நல அரசு’ என்று தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் போலீஸ் அரசு. 

அறிக்கை சொல்கிறது, “மேட்டூர் அனல் மின்நிலையத்தின் I முதல் IV அலகுகளிலிருந்து சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் காவிரி ஆற்றுக்குள் வெளியேற்றப்பட்டிருக்கிறது”. 

 

 

அதாவது, அரசே காவிரி ஆற்றை விஷமாக்கி... தன் சொந்த குடிகளை மெள்ளச் சாகடிக்கக் காரணமாக இருந்திருக்கிறது.

''கழிவு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத காரணத்தால், இந்நிலையங்கள் கடல் மற்றும் ஆற்று நீர்களை மாசுபடுத்தியுள்ளன”
 

காவிரி ஆற்றை மட்டுமல்ல... கழிமுகம் முதல் கடல்வரை விஷத்தைப் பாய்ச்சி, மீன்கள் முதல் மீனவர்கள் வரை அனைவருக்கும் வருத்தங்களை மட்டும் பரிசளித்திருக்கிறது அரசுக் கழகமான டான்ஜெட்கோ என்று வாக்குமூலம் வாசிக்கிறது தணிக்கைத் துறையின் அறிக்கை. 

என் வார்த்தைகளில் வேண்டாம்; அரசின் வார்த்தைகளிலேயே சொல்கிறேன். “2012 ஏப்ரல் - 2014 ஜூன் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில், வட சென்னை அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 8.05 லட்சம் கன மீட்டர் அளவுக்கான கழிவுநீர் எண்ணூர் கடற்கழியில் கலந்தது. இதனால், கடல்நீர் மாசடைந்தது உண்மையே.” 

 

 

“மின்சாரத்தைவிடக் கழிவுகள் அதிகம்!”

'நீரை மட்டும் அல்ல, காற்றையும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் மாசாக்கி இருக்கிறது' என்று ஆதாரங்களைப் பட்டியிலிடுகிறது அந்த அறிக்கை. அதன் கூற்றுப்படி வட சென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடி மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைவிடக் கழிவுகள்தான் அதிகம். அதாவது, “2011 - 2012 முதல் 2015 - 2016 வரையிலான காலகட்டத்தில் வட சென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடி மின்நிலையங்கள் 112.07 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு, 1.12 மில்லியன் டன் சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் 3.33 மில்லியன் நைட்ரஜன் டை ஆக்ஸைடு முதலியவற்றை வளிமண்டலத்தில் வெளியேற்றியுள்ளன. எனவே, உற்பத்தி செய்யப்பட்ட ஒரு யூனிட் மின்சாரத்துடன் இணைந்து, சுமார் ஒரு கிலோகிராம் கார்பன் டை ஆக்ஸைடு, 10 கிராம் சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் 30 கிராம் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டிருந்தன” என்கிறது அந்த அறிக்கை. 

“2011 - 2012 முதல் 2015 - 2016 வரையிலான கால கட்டத்தில் வடசென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடி மின் நிலையங்கள் 112.07 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு, 1.12 மில்லியன் டன் சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் 3.33 மில்லியன் நைட்ரஜன் டை ஆக்ஸைடு முதலியவற்றை வளிமண்டலத்தில் வெளியேற்றியுள்ளன. எனவே, உற்பத்தி செய்யப்பட்ட ஒரு யூனிட் மின்சாரத்துடன் இணைந்து, சுமார் ஒரு கிலோகிராம் கார்பன் டை ஆக்ஸைடு, 10 கிராம் சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் 30 கிராம் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டிருந்தன.”

எண்ணூர்

“நீதிடா... சட்டம்டா.. வழக்குடா...” என்று நாட்டாமை பண்ணிக்கொண்டிருக்கிறது இந்த அரசு. ஆனால், அதன் நிறுவனமான டான்ஜெட்கோ சட்டத்தைக் கிஞ்சித்தும் மதிக்காமல் செயல்பட்டிருக்கிறது என்கிறது இந்த அறிக்கை. இனி, அந்த அறிக்கையின் வார்த்தைகளிலேயே... ''காற்றுச் சட்டம் 1981 பிரிவு - 21, நீர்ச் சட்டம் 1974 பிரிவு - 25 மற்றும் இவற்றுக்கான விதிமுறைகளின்படி, அனல்மின் நிலையங்கள் இயக்கப்படுவதற்கான இசைவாணைகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட வேண்டும். மேலும், இவ்விசைவாணைகள் அவை காலாவதி ஆவதற்கு முன்பாக ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். 

 “சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி (நவம்பர் 2009), சுற்றுப்புறக் காற்றின் தரம் குறித்த சோதனைகள் வாரம் இருமுறை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த அறிவுறுத்தலுக்கெதிராக 3 அனல் மின் நிலையங்களும் மாதம் ஒரு முறை மட்டுமே காற்றின் தரம் குறித்த சோதனைகளை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக சுற்றுப்புறக் காற்றின் தரம் பற்றிய கண்காணிப்பு, குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்நிலையங்களில் மேற்கொள்ளப்படவில்லை”
 

தூத்துக்குடி மற்றும் வட சென்னையின் பழைய அலகுகளுக்கான (210 மெகாவாட்) 2015 - 2016-ம் ஆண்டுக்கான இசைவாணைகள் இதுவரை பெறப்படவில்லை. இது, சட்டமீறல். இதனால், உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டிய பொறுப்பு டான்ஜெட்கோவுக்கு ஏற்பட்டுள்ளது.” 

“முறையற்ற செலவு!”

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (1999 - செப்டம்பர்) அறிவிப்பின்படி, உலை சாம்பல் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயும் அதன் பயன்பாட்டை உறுதி செய்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மட்டுமே செலவிடப்படவேண்டும். ஆனால், டான்ஜெட்கோ அந்த அறிவிப்பை இடது கையால் புறந்தள்ளியிருக்கிறது. “2011 - 2016 வரையிலான காலகட்டத்தில், உலை சாம்பல் விற்பனை மூலம் டான்ஜெட்கோவுக்கு, 625.93 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருந்தாலும், 61.91 கோடி ரூபாய் மட்டுமே சுற்றுச்சூழல் மேலாண்மைக்காகச் செலவிடப்பட்டது” என்று தணிக்கைத் துறை அறிக்கை வாசிக்கிறது. 

 “ 2016 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஐந்தாண்டுக் காலத்தில், 6.58 பில்லியன் கன மீட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கடலுக்குள் வெளியேற்றப்பட்டுள்ளது.”
 

 

“ஏன் உங்களை நம்ப வேண்டும்...?”

கதிராமங்கலம்

'அரசு நிறுவனமே காற்று, கடல், ஆறு என அனைத்தையும் நஞ்சாக்கியிருக்கிறது' என்கிறது தணிக்கைத் துறை அறிக்கை. கடலும், ஆறும் எளிய மக்களின் வாழ்வாதாரமாக இருப்பவை... அந்த வாழ்வாதாரங்களை முற்றும் முழுவதுமாகச் சிதையக் காரணமாக இருந்துவிட்டு... மக்கள் அந்தச் சிதைவு குறித்து கேள்வி எழுப்பினால்... 'இனியும் எங்களைச் சிதைக்காதீர்கள்' என்று போராடினால்... அவர்களை வன்முறையாளர்களாகச் சித்திரித்துச் சிறையில் அடைக்கிறது அரசு. 

 “மேட்டூர் அனல் மின் நிலையத்தின்  I முதல் IV அலகுகளிலிருந்து சுத்தம் செய்யப்படாத கழிவு நீர் காவிரி ஆற்றுக்குள் வெளியேற்றப்படுகிறது.”

“ 2012 ஏப்ரல் - 2014 ஜூன் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில், வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட  8.05 லட்சம் கன மீட்டர் அளவுக்கான கழிவு நீர் எண்ணூர் கடற்கழியில் கலந்தது. இதனால், கடல்நீர் மாசடைந்தது உண்மையே”
 

 

 

எந்த விதிமுறைகளையும் மதிக்காமல் தொடர்ந்து சூழலியல்மீது ஒரு யுத்தம் தொடுத்து, அது அழியக் காரணமாக இருந்துவிட்டு, பரமாத்மா வேஷம் போடுகிறது அரசு. “நாங்கள் மக்களின் நன்மைக்காக அன்றி வேறு எதுவும் செய்யமாட்டோம்” என்று தன்னை நம்பச் சொல்கிறது. 
எப்படி நம்புவார்கள் மக்கள்...? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement