ஆர்.எம் வீரப்பனின் பதவியைப் பறித்த ரஜினியின் பேச்சு! இவர் வழி... தனி வழியா.? - ரஜினியின் அரசியல் ரூட் : பகுதி 7 | Rajini Speech Gives Trouble to R.M. Veerappan! Rajini's route to Politics: Part 7

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (27/07/2017)

கடைசி தொடர்பு:10:31 (27/07/2017)

ஆர்.எம் வீரப்பனின் பதவியைப் பறித்த ரஜினியின் பேச்சு! இவர் வழி... தனி வழியா.? - ரஜினியின் அரசியல் ரூட் : பகுதி 7

ரஜினி

'பாட்ஷா' பட விழாவுக்கு முந்தைய வருடம் வரையில், எந்தக் கூட்டத்திலும் ரஜினி, அரசியல் பேசியது கிடையாது. ஆனால், ‘பாட்ஷா’ வெள்ளி விழாவில், அரசியல் பேசியதோடு, ஆட்சிக்குக் கண்டனமும் தெரிவித்தார் ரஜினி. இது அன்றைய அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தது. ரஜினி, அப்படிப் பேசுவதற்குக் காரணமாக இருந்தது டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு மட்டுமல்ல... தமிழகத்தில் அப்போது  அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும்தான். 

மும்பையில் நடைபெற்ற மதக் கலவரத்தை மையமாக வைத்து ‘பம்பாய்’ என்கிற படத்தை எடுத்திருந்தார் மணிரத்னம். இந்து - முஸ்லிம் மதங்களைச் சார்ந்த காதலர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட இந்தக் கதையில் ‘பம்பாய்’ கலவரமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படம் தொடர்பாக இரண்டு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்தான் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள மணிரத்னம் வீட்டில், 1995-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி வெடிகுண்டு வீசப்பட்டது. மாடியின் வராண்டாவில் அமர்ந்து காபி குடித்தபடியே மணிரத்னம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டு சுற்றுச்சுவர் அருகே வந்த 2 பேர் வெடி குண்டுகளை அவரை நோக்கி வீசினார்கள். குறி தவறி ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்து வெடித்தது.  இதனால், மாடியின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. ஒரு குண்டு தாழ்வாரத்தை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தது. வெடிகுண்டு சிதறல்களினால் மணிரத்னத்தின் வலது கால் தொடையில், சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. வீட்டின் வேலைக்கார அம்மாள் கமலாவின் கையில் காயம் ஏற்பட்டது. மணிரத்னமும் வீட்டுக் காவலாளியும் குண்டு வீசியவர்களைப் பிடிக்க ஓடினார்கள். விவரம் அறிந்து மற்றவர்களும் அவர்களைப் பிடிக்க ஓடியபோது துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே ஓர் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர் குற்றவாளிகள். வெடிக்காத குண்டு ஒன்றையும் மணிரத்னம் வீட்டின் அருகிலேயே அவர்கள் போட்டுச் சென்றிருந்தார்கள். தேவகி மருத்துவமனையில் மணிரத்னமும் கமலாவும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜசேகர நாயர், ‘‘வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும்’’ என சொன்னார். 

இப்படித்தான் சேலம் மாவட்டம் வாழப்பாடியில், உள்கட்சித் தகராறில் ஒரு குண்டு வெடித்தது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசுவதற்கு முன்பே தமிழகத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தபடியே இருந்தன. 1991-1996-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த குண்டு வெடிப்புகள் இவை...

1) 1993 ஆகஸ்ட் 8 - சென்னை ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு. 11 பேர் பலி

2) 1995 ஏப்ரல் 14 - சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு. சண்முகம் பலி.

3) 1995 ஜூலை 3 - நாகூரில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் தங்கமுத்து கிருஷ்ணனின் மனைவி தங்கம், பார்சல் குண்டுக்குப் பலி.

4) 1995 ஜூலை 4 - மயிலாடுதுறை பி.ஜே.பி மாவட்ட அமைப்பாளர் ஜெகவீரபாண்டியன் வீட்டுக்குத் தபாலில், பார்சல் வெடிகுண்டு. 

இப்படி தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளைப் பார்த்துத்தான் ‘பாட்ஷா’ படவிழாவில் பொங்கினார் ரஜினி. பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவின்போது ஜெயலலிதா மந்திரிசபையில் உணவு அமைச்சராக இருந்தார் ஆர்.எம் வீரப்பன். ரஜினியின் பேச்சுக்கு அவர் எந்த ரியாக்‌ஷனும் காட்டாததால், அவருடைய பதவியே பறிபோனது. அதற்கு முன்பே ஆர்.எம் வீரப்பனுக்கும், ரஜினிகாந்துக்கும் எதிராக அ.தி.மு.க-வினர் கண்டன கூட்டங்களை நடத்தினர். காட்டமாக அறிக்கைகள் வெளியிட்டனர்.

ரஜினி - ஆர். எம். வீரப்பன்

‘பாட்ஷா’ படத்தின் வெற்றி விழாவுக்கு முன்பே அமெரிக்கா செல்ல ஆர்.எம் வீரப்பன் திட்டமிட்டிருந்தார். விழா நடந்த அடுத்த நாள்தான் அவர் அமெரிக்கா கிளம்பிப் போனார். அதன்பின், அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. 'துரோகியை நீக்குங்கள்’ என்று அ.தி.மு.க பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. 'ரஜினி அரசியலில் ஈடுபடவேண்டும். தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை வைத்தனர் ரசிகர்கள். குறிப்பாக ‘அ.தி.மு.க-வினருக்குப் பாடம் புகட்டவேண்டும்’ என ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். 'ரஜினி, அரசியலுக்கு வர வேண்டும்' என்கிற கோரிக்கையை அப்போது தமிழகக் காங்கிரஸ் தலைவராகயிருந்த குமரிஅனந்தனும் முன்வைத்தார்.  'ரஜினியின் ஆதரவை வைத்து காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறமுடியும்' என அவர் நினைத்தார். 

இவ்வளவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் ரஜினி மவுனமாகவே இருந்தார். ‘பாட்ஷா’ வெள்ளி விழாவுக்கு முன்பே முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த ஆர்.எம் வீரப்பன், தன்னுடைய வெளிநாட்டுப் பயணம் பற்றித் தெரிவித்திருந்ததை நினைவுபடுத்தி, மறுநாள் தான் கிளம்பப் போவதை உறுதிப்படுத்தி, விடைபெற்றுக்கொண்டுதான் விழாவுக்கு வந்தார். ‘பாட்ஷா’ படத்தயாரிப்பில் தனக்கு நேரடியாகத் தொடர்பு இல்லை என்பதால், ஆர்.எம் வீரப்பன் மேடைக்குச் செல்லாமல், முன் வரிசையில் ஒரு பார்வையாளராக அமர்ந்திருந்தார். ஆனால், ஆர்.எம் வீரப்பன்  கீழே அமர்ந்திருப்பதைப் பார்த்த ரஜினி, அவரை மேலே வரும்படி அழைத்து, மேடையில் அமரச் செய்தார். அப்போதுதான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி ரஜினி பேசினார். யாரையும் தாக்கிப்பேசவேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்ட கருத்தாக அதை ஆர்.எம் வீரப்பன் எண்ணவில்லை. அதோடு விழாவின் இறுதியில் ரஜினி பேசியதால், அவர் பேசி முடித்ததும் விழாவும் முடிந்துவிட்டது. இதனால் ஆர்.எம் வீரப்பனும் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்தநாள் காலை, `முதல்வர் பார்க்க விரும்புகிறார்’ என்ற தகவல் ஆர்.எம் வீரப்பனுக்குத் தகவல் வர உடனே போயஸ்கார்டன் சென்றார். இன்டர்காமில் ஆர்.எம் வீரப்பனுடன் ஜெயலலிதா பேசினார். “நேற்று ரஜினி ஏதேதோ பேசியிருக்கிறார்... நீங்கள் மேடையில் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்களா?’’ என கேட்டார், ஜெயலலிதா. “இல்லம்மா... அவர் இயல்புப்படி பேசினார். அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்று நான் நம்பவில்லை... தவிர, அவர் கடைசியாகப் பேசியதும், கூட்டம் முடிந்துவிட்டது. மறுப்பு சொல்ல வாய்ப்பும் இல்லை’’ என விளக்கம் கொடுத்தார் ஆர்.எம் வீரப்பன். “அவர் என்னை அட்டாக் பண்ணித்தான் பேசியிருக்கார். அதை நீங்க கேட்டுக்கிட்டு இருந்தீங்க...!’’ என சொல்லி  ரிசீவரை வைத்துவிட்டார் ஜெயலலிதா. இந்த விவரங்களை எல்லாம் ஆர்.எம் வீரப்பனே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த்

'ஜெயலலிதா கோபத்தில் இருக்கிறார்' என்பது ஆர்.எம் வீரப்பனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பதையும் புரிந்துகொண்டவர் திட்டமிட்டபடியே அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். ரஜினி - ஆர்.எம் வீரப்பனைத் தாக்கி அறிக்கைகள் வெளியானது. இதனால் அமெரிக்காவிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆர்.எம்.வீரப்பன். 'நான் அமைச்சராக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அவர் எப்போது என்னை வேண்டாம் என்றாலும், நான் போகத் தயாராக இருக்கிறேன். இதற்காகப் போராட்டம் செய்யத் தேவையில்லை’ என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின், ஒரு மாத காலம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, ஆகஸ்டு 14-ம் தேதி நள்ளிரவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். இது ஜெயலலிதாவை எரிச்சல் அடைய வைத்தது. அடுத்த நாள் சுதந்திர தினம்... தேசிய கொடி ஏற்றும் அரசு விழாவில், வழக்கம்போலவே ஆர்.எம்.வீரப்பனும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். வழக்கம்போல அமைச்சர் பொறுப்பை ஆர்.எம் வீரப்பன் கவனித்துக் கொண்டிருந்தார். எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என நினைத்து ஆர்.எம்.வீரப்பனின் வீட்டுக்கே நேரில் வந்து ஆறுதல் சொன்னார் ரஜினி. இந்த சந்திப்பு நடந்துமுடிந்து 15 நாட்களுக்குப்பின், ஆர்.எம்.வீரப்பனிடமிருந்த உணவுத் துறை பறிக்கப்பட்டு கால்நடைத்துறை ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் திடீரென்று அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. சில நாட்களில், அ.தி.மு.க-வில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனால், 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி  ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ஒருவழியாக ரஜினியின் பேச்சு, ஆர்.எம்.வீரப்பனின் பதவியைப் பறித்துவிட்டது.

இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

- தொடரும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்