வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (27/07/2017)

கடைசி தொடர்பு:15:31 (27/07/2017)

தலைநகரின் தலையாய அவமானம்... பாலியல் துன்புறுத்தலில் டெல்லி முதலிடம்! #Datastory #VikatanInfographics

இந்தியாவின் மகள் நிர்பயா

டெல்லியில் நிர்பயாவுக்கு 2012-ம் ஆண்டு நடந்த கொடுமையை நாம் இன்னமும் மறக்கவில்லை. அந்தச் சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியதுடன், இந்தியாவையே கண்ணீர்விட வைத்தது. அது, நடந்துமுடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், டெல்லி இன்னும் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாறவில்லை. 2011-ம் ஆண்டு 572 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் டெல்லியில் பதிவாகியிருந்தன. ஆனால், 2016-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 2,155. இதற்குக் காரணம், நிர்பயாவுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதுதான்.

2017-ம் ஆண்டு, முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 836 பாலியல் துன்புறுத்தல்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில், 48 மணி நேரத்தில் ஐந்து பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. 2017 ஜூன் 19 அன்று 24 வயது பெண், டெல்லி கார் பார்க்கிங்கில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். 2017 ஜூன் 20 அன்று டெல்லி புறநகர்ப் பகுதியில் 26 வயதான பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இப்படி, 2 நாள்களுக்குக் குறைந்தபட்சம் 5 வழக்குகள் பதிவாகிறது எனப் போலீஸ் அறிக்கையில் சொல்லப்படுகிறது.

2015-ம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணப் பிரிவு (NCR) தகவல்கள்படி, இந்தியாவில் மொத்தம் 3,430 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், டெல்லியில் மட்டும் 64 சதவிகிதம் அளவுக்குப் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கணவன் செய்யும் கொடுமைகள், மாமியார் வீட்டில் பிரச்னைகள், ஆடைகளால் ஏற்படும் சிக்கல்கள், பாலியல் தொல்லைகள், பின்தொடர்தல் போன்ற அனைத்தும் இதில் அடக்கம். மேலும், பேருந்துகளில் பயணம் செய்யும்போதும், வேலையிடத்தில் பெண்களைக் கிண்டல் செய்வதுமான வார்த்தைகளிலும், செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

Save Nirbhayas

2013-ம் ஆண்டு டெல்லியில், பாலியல் துன்புறுத்தல்களின் எண்ணிக்கை 1,636 ஆக இருந்தது. அதுவே, 2016-ம் ஆண்டு அறிக்கையில் 2,155 ஆக உயர்ந்துள்ளது. ''நிர்பயா வழக்கில் ஈடுபட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தும், குற்றங்கள் எதுவும் குறைந்தபாடில்லை. இந்தச் சம்பவம் நடந்தபிறகுதான், பாலியல் குற்றங்கள் இன்னும் அதிகமாகியுள்ளன. இதை அதிகமானது என்று சொல்வதற்குப் பதிலாக, குற்றங்கள் வெளியே தெரியத் தொடங்கின என்றுதான் சொல்ல வேண்டும். 50 சதவிகித குற்றங்கள் மட்டும்தான் வழக்குகளாகப் பதிவுசெய்யப்படுகின்றன. மற்ற குற்றங்கள் வெளிவராமல் மறைக்கப்படுகின்றன'' என்கிறது சி.ஹெச்.ஆர்.ஐ (C.H.R.I.) சர்வே. ''அரசாங்கம், பெண்கள் பாதுகாப்புகாக எத்தனை திட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவை அனைத்தும் பலனின்றிதான் போகிறது. பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு, அவர்களுக்கான தனி 'டிராக்கிங் சிஸ்டம்', உதவி மையம் எனப் பல திட்டங்களையும், வசதிகளையும் இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படி இருந்தும் பாலியல் வன்முறைகளும், பாலியல் சார்ந்த பிரச்னைகளுக்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியுதவிகள் யாவும் பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன'' என்கின்றன பெண்கள் நல அமைப்புகள். 

டெல்லியில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்

நிர்பயா சட்டம்

குற்றவியல் சட்டம் (நிர்பயா சட்டம்) என்பது ஏப்ரல் 2, 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், பெண்கள் கொடுக்கும் அனைத்துப் பாலியல் வழக்குகளையும் பெண் காவலர் பதிவுசெய்ய வேண்டும். அதற்கான தண்டனைகளை ஆறு மாதங்கள்முதல் இரண்டு வருடங்கள்வரை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்குகளைப் பதிவுசெய்யாமல் அந்தக் காவலர்கள் தவிர்த்தால், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

"இந்தியாவில், இதுபோன்ற பாலியல் வழக்குகள் 50 சதவிகிதம்தான் பதிவுசெய்யப்படுகின்றன. அதிலும், பாதி வழக்குகள்தான் முதல் தகவல் அறிக்கைகளாகப் (FIR) பதிவாகின்றன" என 2015-ம் ஆண்டு 'காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி' அமைப்பு நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. இதில், ''முதல் தகவல் அறிக்கைகளாகப் பதிவுசெய்யப்படும் 13 வழக்குகளில், ஒரு வழக்கு டெல்லியாக இருக்கிறது'' என அதில் கூறப்பட்டுள்ளது. அதேசமயத்தில், டெல்லி போலீஸ் அறிக்கையில், '2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது, வழக்குப் பின்வாங்குதல் 84-லிருந்து 104 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு போலீஸ் மீது நம்பிக்கையின்மையே முக்கியக் காரணமாக இருக்கிறது.

நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு 161 ஹெல்ப் சென்டர்கள் டெல்லியில் அமைக்கப்பட்டன. இதில், பணியமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகள் 70 சதவிகிதம் பேர் 8 மணி நேர ஷிஃப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களில் 64 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல். தலைநகரத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் இருக்கும்போது இந்தியாவில் தினம்தினம் நிர்பயாக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. பெண்கள் சிறப்பாக வாழ வேண்டும் எனப் பல திட்டங்கள் போடும் அரசு, முதலில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் அளிக்க வேண்டும். அரசு எத்தனைச் சட்டங்கள் இயற்றினாலும், தனி மனித ஒழுக்கமும் மிக முக்கியமானது. அப்போதுதான் புதிய இந்தியா உருவாகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்