வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (27/07/2017)

கடைசி தொடர்பு:19:59 (27/07/2017)

'பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்!' - கவிஞர் காசி ஆனந்தன் விளக்கம்

காசி ஆனந்தன்

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையிலான ’இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம்’  அமைப்பின் சார்பில், வரும் ஆகஸ்ட் 6 அன்று சென்னையை அடுத்த போரூரில் ’தமிழீழம் தமிழர் தாயகம்’ எனும் மாநாடு நடத்தப்படுகிறது. அதில் பாஜகவின் மும்பை சட்டமன்ற உறுப்பினரான தமிழர் இரா.தமிழ்ச்செல்வனும் கலந்துகொள்கிறார். இதையொட்டியும் இந்து மக்கள் கட்சியின் நிகழ்வுகளில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டதை வைத்தும், இணையத்தில் கடந்த ஒரு வாரமாக அவரைப் பற்றி கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது. இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில், கவிஞர் காசி ஆனந்தன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கை, இங்கே முழுமையாக...!

” கடந்த சில நாள்களாக என்னையும், எங்கள் 'இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தினையும்’ களங்கப்படுத்தும் நோக்கோடு முகநூல்களில் வெளிவரும் பதிவுகள் கவலையளிக்கின்றன.

இப்பொழுது எனக்கு 80 அகவையாகிறது. 15 அகவையில் தமிழீழ விடுதலைக் களத்தில் இறங்கியவன் நான். தந்தை செல்வாவின் கூட்டங்களில் சின்னஞ்சிறுவனாகக் கலந்து கொண்ட காலம் அது. கடந்த 65 ஆண்டுகள் ’தமிழீழ விடுதலை’ ஒன்றையே மூச்சாகக்கொண்டு இயங்கி வருகிறவன். தந்தை செல்வாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தவன். தலைவர் பிரபாகரனின் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைமைச் செயற்குழுவிலும் உறுப்பினராக இருந்தவன். ’இறையாண்மையுள்ள தமிழீழ அரசை’ அமைப்பதே என் ஒற்றைக் கொள்கையாகும். இதில் எந்தச் சறுக்கலுக்கும் இடமில்லை. 

தந்தை செல்வாவும், தலைவர் பிரபாகரனும் என்னைப் புரிந்துகொண்டதைப் போலவே தமிழ் நாட்டின் தலைவர்களான பெரிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட வைகோ, பழ. நெடுமாறன், மருத்துவர் இராமதாசு, தலைவர் வீரமணி, கொளத்துர் மணி, கோவை இராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன்,வேல்முருகன் போன்றவர்களும் என்னை முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர். 

தமிழீழத்தில் என் வாழ்வைத் தெளிவாகத் தெரிந்த தமிழர்களும், உலகெங்கும் பரவிவாழும் ஈழத் தமிழர்களும் தடம்பிறழாத என் விடுதலைப்பயணத்தை அறிவார்கள். 

என்னை ஓர் ’இந்துத்துவ வெறியன்’ என இன்று களங்கப்படுத்த முயல்கிறவர்கள் யார் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.

’இந்து மகாகடலில் நிகழும் சீனாவின் ஆக்கிரபிப்புப் போரில் நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம். தமிழீழத்தில் நிகழும் சிங்களவனின் அடக்குமுறைக்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’ என்பதுதான், எங்கள் இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் கொள்கையாகும்.

’தவறான கொள்கை’ இது என்று ஏன் தலையில் அடித்துக் கொள்கிறீர்கள்? ’பா.ஜ.க. இந்து மதக் கட்சி - அது நம் விடுதலைக்கு உதவாது’ என்கிறீர்கள். சரி, மதச்சார்பு அற்ற கட்சி காங்கிரசு, முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய படுகொலைகளை மறந்துபோனீர்களா? இந்திய அரசோடு நட்புறவு பேணுவது தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை என்பதை நெஞ்சில் இருத்துங்கள். தலைவர் மேதகு பிரபாகரனின் 2008ம் ஆண்டின் மாவீரர் நாள் உரையின் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.

 ”நாம் இந்தியாவை ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்பு சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்னை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்” (மாவீரர் உரை - 2008) 

தலைவர் எதிர்பார்த்ததை நானும் - எங்கள் ’இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையமும்’ எதிர்ப்பார்த்தால் ’தவறு’ என்கிறீர்கள். 

”தமிழீழம் தமிழர் தாயகம்” என்னும் தலைப்பில்தான் சென்னையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தோம். ”தமிழீழம் தமிழர் தாயகம்” என்பதற்கு இத்தனை எதிர்ப்பா? தமிழரிடம் இருந்தா? 

'தமிழீழத்தைக் கைவிட்டு விட்டோம்” என்று கூறும் சம்பந்தன் உங்கள் கண்களில் படவில்லை. தமிழீழத்தைக் கைவிடமாட்டோம் என்று கூறும் நான்தான் உங்களுக்குத் தலையிடியா? 'சீனாவுக்குத் தமிழீழக் கடலைத் தரமாட்டோம்” என்று கூறினால் சீறுகிறீர்கள். உங்களுக்கும் சிங்களவனுக்கும் கொள்கை ஒன்றா? சீனாவுக்குத்தான் தமிழீழக் கடலைத் தாரை வார்ப்பீர்களோ?

”தமிழீழம் தமிழர் தாயகம்” என்னும் வரலாற்று உண்மையை முற்றுமுழுதாக அழிக்க சிங்கள அரசு திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எங்கள் ”தமிழீழம் தமிழர் தாயகம்” மாநாட்டைக் களங்கப்படுத்தும் வகையில் சில முகநூலாளர்கள் மேற்கொள்ளும் முயற்சி சிங்கள அரசின் கைக்கூலிகளாக இருந்து இவர்கள் செயல்படுகிறார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது” என்று உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 


டிரெண்டிங் @ விகடன்