வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (28/07/2017)

கடைசி தொடர்பு:11:29 (28/07/2017)

நரேந்திர மோடிக்குக் கிடைத்த இரட்டை லாபம்! பீகாரில் லாலு-நிதிஷ் பிரிவு ஏன்?

பீகார் நிதிஷ்குமார், நரேந்திரமோடி

"பி.ஜே.பி-யை பீகார் மாநிலத்தில் தலையெடுக்க விட மாட்டோம்" என்ற கோஷத்துடன்  2015-ம் ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருங்கிணைந்த ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் என்ற மெகா கூட்டணி,  உடைந்து விட்டது. எந்த பி.ஜே.பி-க்கு எதிராக நிதிஷ்குமார் கூட்டணி சேர்த்தாரோ அதே பி.ஜே.பி-யுடன் இப்போது கூட்டணி சேர்ந்து விட்டார்.

லாலுவின் தந்திரம்

நிதிஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்தும் சொல்லி இருக்கிறார். ஆனால், உண்மையில் வாழ்த்துகளைப் பெற வேண்டியவர் நரேந்திரமோடிதான். பீகாரில் பி.ஜே.பி-க்கு எதிராக ஒரு கூட்டணி உருவானதை மோடியும், பி.ஜே.பி-யும் விரும்பவில்லை. முடிந்த வரை மூன்று கட்சிகளையும் தனித்துப் போட்டியிட வைத்து பீகாரில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்றுதான் பி.ஜே.பி தலைவர்கள் கனவு கண்டனர். ஆனால், லாலு பிரசாத் யாதவின் தந்திரத்தால் அது இயலாமல் போனது.

பி.ஜே.பி-யை கிட்டத்தில் சேர்க்கமாட்டோம் என்று சொன்ன மூன்று கட்சிக் கூட்டணிக்கு 2015-ம் ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தலில் பீகார் மக்கள் வாக்களித்தனர். ராஷ்டிரிய ஜனதா தளம் 101 இடங்களில் போட்டியிட்டு 80 இடங்களில் வெற்றி பெற்றது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களில் போட்டியிட்டு 71 இடங்களில்தான் வெற்றி பெற்றது. குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், கூட்டணியில் முன்கூட்டியே முடிவு செய்தபடி நிதிஷ்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றார். பீகாரின் மெகா கூட்டணி வெற்றியைப் பார்த்து, பிற மாநிலக் கட்சிகளும் இதுபோன்ற கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டன. ஆனால், அது போன்ற மெகா கூட்டணி இதுவரை சாத்தியம் ஆகவில்லை. (1967-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அண்ணா தலைமையில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு மெகா கூட்டணி உருவாக்கப்பட்டது.)
பீகார் கூட்டணி வெற்றி பி.ஜே.பி-க்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமாகவே இருந்தது. எப்படியாவது கூட்டணியை உடைத்தே தீர வேண்டும் என்பதில் நரேந்திரமோடி மறைமுகமாக காய்களை நகர்த்தி வந்தார்.

சி.பி.ஐ புகார்...

லாலு பிரசாத் யாதவ் இரண்டு ஆண்டுகளாக பீகார் ஆட்சியை ஒன்றும் செய்ய இயலவில்லை. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே கேன்டீன் ஒதுக்கீடு பெற்றவர்கள்,  பிரதி உபகாரமாக லாலுவின் மகன் பெயரில் குறைந்தவிலைக்கு நிலம் கொடுத்தனர் என்று ஒரு குற்றசாட்டை  சில மாதங்களுக்கு முன்பு, சி.பி.ஐ மூலம் முன் வைத்தனர்.
நியாயவாதி என்று சொல்லிக்கொள்ளும் நிதிஷ்குமார் இதற்கு என்ன சொல்லப்போகிறார் என்று பீகார் பி.ஜே.பி தலைவர்கள் அதிரடி அறிக்கைகளை வெளியிட்டனர். ஊடகங்களிலும் நிதிஷ்குமாருக்கு பல்வேறு வடிவங்களில் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. துணைமுதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வியை நிதிஷ்குமார் நீக்குவாரா என்றெல்லாம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக செய்திகள் உலா வந்தன. கூட்டணி உடைந்து போய்விடும் என்று பேசப்பட்டது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மெகா கூட்டணியைக் காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டார்.

நிதிஷ்குமாரின் ஆழ் மனதில் இருந்த நேர்மையாளர் என்ற உணர்வை சி.பி.ஐ என்ற அமைப்பின் மூலம் தட்டி எழுப்பிய மோடி, மெகா கூட்டணியைக் காலி செய்து விட்டார் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். நிதிஷ்குமார் ராஜினாமா செய்த மறுநிமிடம், ட்விட்டர் வழியே மோடி வாழ்த்துகள் சொன்னார். இதில் இருந்தே, பீகார் மெகா கூட்டணி காலியாவதற்கு எவ்வளவு தூரம் எதிர்பார்த்து இருந்தார் என்பது தெளிவாகும்.

பீகார் அரசியல் கூட்டணி உடைந்ததில் மோடிக்கு இரண்டு லாபம். லாபம் நம்பர் ஒன்று என்னவென்று முதலில் பார்க்கலாம். பீகார் மெகா கூட்டணி என்பதை அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், பி.ஜே.பி-க்கு எதிரான ஒரு வலுவான அணி என்பதாகத்தான் பார்த்தனர். வரும் 2019-ம் ஆண்டு லோக்சபாத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை நிறுத்தலாம் என்பதும் மாநிலக் கட்சிகளின் ஆசையாக இருந்தது. நிதிஷ்குமாருக்கும், தாம் பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. நிதிஷ்குமார் தமக்கு எதிரான ஒரு சக்தியாக உருவாகி விடக் கூடாது என்பதுதான் மோடியின் திட்டம். இப்போது மெகா கூட்டணியை உடைத்ததன் மூலம், நிதிஷ்குமாரின் பிரதமர் கனவை நிர்மூலமாக்கிவிட்டார் மோடி.

ஆட்சியைப் பிடிக்கும் கனவு

மோடியின் லாபம் நம்பர் இரண்டு என்னவென்று இப்போது பார்க்கலாம்.  பீகாரில் பி.ஜே.பி ஆட்சியை உருவாக்கி விட வேண்டும் என்பது மோடியின் முக்கியமான கனவுகளில் ஒன்றாகும். லாலு, நிதிஷ் ஒற்றுமையாக இருக்கும் வரை அது நடப்பதற்கு சாத்தியமில்லை. எனவே, இருவரையும் பிரிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கு சி.பி.ஐ ஒரு கருவியாக இருந்தது. இப்போதைக்கு நிதிஷ்குமார் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் பி.ஜே.பி இன்னும் சில மாதங்களில் ஆதரவை வாபஸ் பெறவும் மறைமுகமாகத் திட்டமிட்டிருக்கிறது. அதன் பின்னர் பீகாரில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் மோடியின் கனவாக இருக்கிறது.லாலு மீது தீவன ஊழல் வழக்குகள் இருப்பதும், ரயில்வே கேன்டீன் தொடர்பான முறைகேடு புகார்கள் இருப்பதும், தேஜஸ்வி மீது ஊழல் குற்றசாட்டுகள் இருப்பதும் 2015-ம் ஆண்டு லாலு உடன் கூட்டணி வைக்கும்போது நிதிஷ்குமாருக்குத் தெரியாதா? என்பதுதான் நாம் முன் வைக்கும் கேள்வி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்